Antharangam

அசிங்கமான ஒரு கற்பனை!

By  | 

கேள்வி:

நான் 23 வயது ஆண். நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். அங்கு என்னுடன் பலர் வேலை செய்கிறார்கள். நான் அங்கு வேலைக்குச் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகிறது. கொவிட் 19 பிரச்சினையால், மீண்டும் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. என்னுடன் யாரும் பழகுவதில்லை. ஆனால் என்னை விட பதினைந்து வயது அதிகமான ஒரு பெண் எப்போதும் என்னுடன் கதைப்பார், சிரிப்பார். சில நேரங்களில் என்னைத் தொட்டுத் தொட்டும் கதைக்கிறார். இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

 

பதில்:

புரிகிறது… அவர் உங்களைத் தொட்டுப் பேசுவதால் அவர் உங்களுடன் தன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்; அதற்கான அழைப்புத்தான் இது என்று நினைக்கிறீர்கள்…. சரிதானே?

பெண்களாய்ப் பிறப்பதே பெரும் கொடுமை. வாழ்நாள் முழுவதும் உடலியல் சிக்கல்களைச் சகித்துக்கொள்ள வேண்டியது ஒருபுறமிருக்க, மனம் விட்டு, நட்பாகப் பழகக்கூட அனுமதிக்கப்படாத பிறவியாகிவிடுகிறாள் பெண். பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்தால், வரிசையில் உங்கள் பின் வந்து நின்றால், நீங்கள் வாங்கும் அதே பொருளை அவளும் வாங்கிவிட்டால், தொட்டுப் பேசிவிட்டால், சிரித்துக் கதைத்துவிட்டால், பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே அவளைப் பற்றிய அசிங்கமான ஒரு கற்பனை உங்கள் மனதுக்குள் எழுகிறது, அல்லவா?

பதினைந்து வருட வித்தியாசம் என்பதால், உங்களைத் தன் தம்பியாகவோ, மகனாகவோகூட நினைத்து அவர் பழகுவார் என்று ஏன் உங்களால் யோசிக்க முடியவில்லை? ஏனைய ஊழியர்கள் உங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதால் நீங்கள் வருந்தக்கூடாது என்பதற்காகக் கூட அவர் வலிய உங்களுடன் பழகலாம் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை?

பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது உடலுறவு மட்டும்தான்; அதைத் தாண்டி ஆணிடம் அவள் எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பும்வரை, ஒரு பெண்ணை உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

தயவுசெய்து இந்த எண்ணத்தோடு அந்தப் பெண்ணிடம் பழக வேண்டாம். எப்போதாவது உங்கள் சபலம் அவருக்குத் தெரியவந்துவிட்டால், மனதளவில் கடுமையாகக் காயப்பட்டுவிடுவார்.

You must be logged in to post a comment Login