Stories

அடியே சண்டைக்காரி!

By  | 

கக்கரேபுக்கரே என்று நான் கழற்றி எரிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த செருப்புகளை ஒரு சேர வைத்துவிட்டு “எங்கடி உன் சீமந்த புத்திரன்” என்று கத்திகொண்டே வீட்டிற்குள் நுழைந்தாய்

உன் குரல் கேட்டதுமே பீரோ சந்தில் ஒளிந்து கொண்டு “ம்மா பிசாசு வருது ப்ளீஸ்”என்று கண்ணாலே கெஞ்சிய போது சட்டை தெரியுதுடா கண்டுபிடிச்சிருவா நல்லா ஒழிஞ்சிக்கோ என்று அம்மா ஹஸ்கியில் சொல்ல ஒரு பல்லியை போல ஒட்டிக்கொண்டு நின்றேன்.

அம்மாவின் அண்ணன் மகள் நீ என்ன காரணமோ அம்மாவை நீ ‘டி’போட்டு கூப்பிடும் போதெல்லாம் அம்மா முகத்தில் ஒரு பூரிப்பு வந்து போகும்…

அவ சின்ன கொழந்தைடா கொஞ்சம் பெரியவளானதும் அதலாம் மரியாதை கொடுப்பா என்று உன் கன்னத்தை தடவி விடும் போதெல்லாம் எனக்கு பொசு பொசுவென இருக்கும். எனக்கு வைத்த இட்லியையும் சேர்த்து தின்றுவிட்டு கிளம்பிவிடுவாய்.

என்னைவிட இரண்டே மாதம் இளையவளான நீ குழந்தையாம் நான் எருமையாம். எங்கள் பரம்பரைக்கே நீ ஒரே பெண்குழந்தையாக பிறந்து என் உயிரை வாங்கிக்கொண்டிருந்தாய் பிசாசு.

விருட்டென உள்ளே நுழைந்த நீ ..

மீனாட்சி நீ பெத்துவிட்டியே அது இன்னைக்கு என்ன செஞ்சிச்சு தெரியுமா ?

அந்த குண்டு பூசணிக்கா இருக்கா ல்ல நந்தினி அவளுக்கு ட்யூஷன்ல வச்சி ஹார்டின் அனுப்பிருக்கான்.ஆசம் பேபின்னு கமண்ட் பண்ணிருக்கான், லுக்கிங் லைக் ஏஞ்சலாம் இங்க பாரு நல்லா பாரு என்று உன் போனில் இருந்த ஸ்க்ரீன் ஷாட்டை காட்டிக்கொண்டு,எனக்கு மானமே போயிருச்சி நந்தினி அப்டி அழுதாள், போலீஸ் போறேன்னு கூட சொன்னாள் நான்தான் சமாதான படுத்திவிட்டு இங்க உன்கிட்ட சொல்ல வந்தேன்.

எங்க அந்த தறுதலை? ஓ பீரோ சந்துல தான் இருக்கியா வாடா வெளில என்ற போது முறைத்துக்கொண்டே வந்தேன்.

பிசாசு மாட்டிவிட்டுடா.

“ஏண்டா தங்க செல மாதிரி என் அண்ணன் பொண்ணு இருக்கும் போது யாருக்குடா உன் இதயத்தை கொடுத்துட்டு வந்திருக்க மரியாதை போய்ட்டு திரும்ப வாங்கிட்டு வந்துரு அப்பதான் உனக்கு ராத்திரிக்கு சாப்பாடு  என்று அம்மா கலகலவென சிரிக்க..

“ம்க்கும் உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு, எக்கேடும் கெட்டு நாசமா போங்கடா “என்று கோபமாக வெளியேறும் முன்னர்,வாசம் மூக்கை தூக்குது இன்னைக்கு என்ன கறிஎன்றாய்.

“சோத்து மூட்டை”

“என்னது?”

“அவங்கிடக்குறான் மா நீ உக்காரு சாப்பிட்டு போலாம்” என்று ஈரளாக உனக்கும் எழும்பெல்லாம் எனக்கும் என்று சாப்பிட்டு முடிய..

“யாராருக்கோ சிலை வைக்கிறானுங்க இந்த மீனாட்சிக்கு ஒரு சிலை வச்சா என்னவாம், ஆசம் பேபி ஆட்டுக்கறி” ன்று நாக்கை உன் உதடு முழுக்க பரவினாய்..

கொல்லபக்கம் கைகழுவிவிட்டு வழமை போல உன் தாவணியை எடுத்து கைத்துடைத்தபோது..

“ஏண்டா உனக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்துலையே வைக்க தெரியாதா என்றாய்.

“சரிடி இனி செருப்பை ஒரு ஓரமாவே கழற்றி வைக்கிறேன் போதுமா இம்ச தின்னுடல கிளம்பு என்றேன்.

நான் அதை சொல்லல இதை என்று உன் தாவணியை நீட்டி தலையை குனிந்து வெட்கப்பட்டாய். நிலவொன்று மேகங்களுக்குள் சென்று வரும் கொள்ளை அழகு அது. இதோ இந்த இடத்தில்தான் திடுக் திடுக் என்று சத்தம் கேட்டது. இரு காந்தங்களுகிடையில் பரவும் ஏதோ ஒன்று என் நெஞ்செங்கும் பயணம் செய்தது.

மெதுவாக என் கைகளை நானே தூக்கி உன் தாவணி நுனி எடுத்து மெல்ல உன் இடையிலிருந்து எடுத்த தாவணியை இடுப்பிலே சொருகிய போது என் உதடுகள் ஒட்டிக்கொண்டு பிரிக்கமுடியாமல் தவித்தது. எச்சில் கொண்டு ஈரமாக்கி

“எடுத்த இடத்திலேயே வச்சிட்டேன் அடியே என்னை கொஞ்சம் பாரேன்” என்ற போது “கைய எடுடா வெட்கம் வெட்கமா வருது” என்றாய் ஹஸ்கியில், தலையை உயர்த்தாமல்..

“அடியே சண்டகாரி நியாடி இது” என்ற போது “போடா எனக்கு என்னமோ பண்ணுது” என்று என்னை தள்ளிவிட்டு எதிரில் வந்த அம்மாவின் கண்ணத்திற்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு “அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று நீ அம்மாவின் காலில் விழுந்து வணங்கிய போது சத்தியமா சொல்றேண்டி நானும் அம்மாவும்அழுதுட்டோம்.

– லிங் சின்னா

You must be logged in to post a comment Login