Antharangam

‘அதை’ எப்படித் தவிர்ப்பது?

By  | 

கேள்வி:

எனது வயது 26. எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. நானும் என் கணவரும் வேலைக்குச் செல்கிறோம். தற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என எண்ணியிருக்கிறோம். இதனால், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் உறவில் இணைகிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து அதிகளவில் விந்து வெளியேறுகிறது. இதனால் அவருக்குப் பாதிப்புக்கள் ஏதேனும் வருமா? மேலும், கருத்தரிக்கக் கூடாது என்பதற்காக, உறவின் பின், அன்னாசி, எள்ளு போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவேன். இதனால், எதிர்காலத்தில் குழந்தைப் பேற்றில் சிக்கல்கள் ஏதும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?

பதில்:

குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்க, மாதத்திற்கு இருமுறை மட்டுமே உறவுகொள்வதும், உறவின் பின் அன்னாசி, எள்ளு எனச் சாப்பிடுவதும் ஏன்? ஆணுறைகள், பெண்ணுறைகள், மருந்துகள், ஊசிகள், கீழ் மணிக்கட்டில் ஒரு சிறு சிகிச்சை என்று பல வழிகள் இருக்கின்றனவே? அவற்றைக் கைக்கொண்டால், தாம்பத்திய உறவிலும் எதுவித கட்டுப்பாடுகளுக்கும் தேவையே இராதே?

புதுமணத் தம்பதியரான நீங்கள், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு கொள்வதால், உங்கள் கணவரிடம் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படும் விந்தின் அளவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு பிரச்சினையோ, நோயோ அல்ல.

ஆனால், இவ்வாறாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், முக்கியமாக, திருமணமாகி, மனைவி அருகே இருந்தும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதனால், அவருக்கு வேறு சில சிறு சிறு பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அன்னாசி, எள்ளு என்பவற்றை உறவுக்குப் பின் உண்டுவிட்டால் கருத் தங்காது என்று கூறிவிட முடியாது. எனவே, கருவுறாமல் இருப்பதற்கு அது சிறந்த ஒரு முறை என்று சொல்ல முடியாது.

உங்களைப் பொறுத்தவரையில், உங்கள் மாதவிடாய் சுழற்சி மிகச் சரியாக 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுமிடத்து, மாதவிடாய் நின்றபின் வரும் ஏழு நாட்களும், மாதவிடாய் தோன்றுவதற்கு முன்னான ஏழு நாட்களும் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி இன்பம் துய்க்கலாம். அல்லது, மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு முறையில் கர்ப்பத்திற்குத் தடை போடலாம். மற்றும்படி, நீங்கள் தற்போது கைக்கொள்ளும் முறைகள் எந்தவிதத்திலும் பாராட்டத்தக்கதல்ல!

You must be logged in to post a comment Login