Antharangam

அலைபேசியால் வந்த பிரச்சினை!

By  | 

கேள்வி:

எனது ஒன்பது வயது மகள்தான் எனது பிரச்சினையே! மிகவும் கெட்டிக்காரியான அவள், இந்த நீண்ட விடுமுறையில் அலைபேசிக்கு அடிமையாகிவிட்டாள். எனது கணவர் வீட்டில் இருந்தபடியே கணினி மூலம் தனது வேலைகளைச் செய்து வருகிறார். நான் ஆசிரியை. எனது மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கற்பித்து வருகிறேன். இதனால், கடந்த இரண்டு மாதங்களில் பல நாட்கள் காலை நேரங்களில் வீட்டில் தொலைக்காட்சி பயன்படுத்துவதில்லை. அந்த நேரத்தில் எனது மகளை சமாதானப்படுத்துவதற்காக அலைபேசியைக் கொடுத்திருந்தோம். இப்போது அவளிடமிருந்து அதை வாங்க முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அலைபேசியும் கையுமாகவே இருக்கிறாள். அதைப் பிடுங்கிவிட்டால் போய்ப் படுத்துக்கொள்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.

 பதில்:

பல வீடுகளிலும் இருக்கும் பிரச்சினைதான். அதுவும் இந்த நேரத்தில் பிள்ளைகளைப் பேணுவது சிரமமான காரியம்தான். எப்படியோ, மகள் இப்போது அலைபேசிக்குப் பழகிவிட்டாள். அவளை அதிலிருந்து மீட்பதற்கும் அதே அலைபேசியையே பயன்படுத்த வேண்டும், முள்ளை முள்ளால் எடுப்பதுபோல!

ஆனால், அதற்கு நீங்களும் சற்று ஒத்துழைக்க வேண்டும். உங்களது நேரத்தை அவளுக்காகச் செலவழிக்காமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.

அவளின் கைகளில் இருந்து பிடுங்குவதற்குப் பதிலாக, அவளே அலைபேசியை கீழே வைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அலைபேசியில் சித்திரம் வரைவது எப்படி, சிறு சிறு விளையாட்டுக்களை விளையாடுவது எப்படி என்று பல விளக்கங்கள் ஒளிப்பதிவுகளாக இருக்கின்றன. அவற்றை அவளைப் பார்க்க வையுங்கள். நீங்களும் அருகில் இருந்து, அந்த ஒளிப்பதிவுகளை பேச்சு மூலம் விளங்கவையுங்கள்.

உதாரணமாக, ஒரு ஓவியத்தை வரையும் ஒளிப்பதிவைக் காண்பிக்கும்போது, அந்த ஓவியத்தை எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறார்கள், அடுத்தடுத்து எந்தப் பாகத்தை வரைகிறார்கள் என்பதை வார்த்தைகளால் கூறுங்கள். இதனால், அவள் மனதில் அந்த ஓவியம் பற்றிய குறிப்புகள் பதிந்துவிடும்.

அடுத்து, அலைபேசியை வைத்துவிட்டு, அந்த ஓவியத்தை வரைந்து தரும்படி சொல்லுங்கள். அவள் வரைந்து தருவதைப் பாராட்டி அவளை ஊக்குவியுங்கள். இதுபோன்றே சிறு சிறு விளையாட்டுக்கள், கைவினைகள் ஏன், சில சமையல் குறிப்புகளைக் கூட அவளைக் கொண்டு செய்வியுங்கள்.

தான் பார்த்து மகிழ்வதைவிட, செய்து மகிழ்வதில் கிடைக்கும் திருப்தியை அவள் அனுபவிக்கட்டும். ஒருமுறை அதை அனுபவித்துவிட்டால், நீங்களும் சரியாக அவளை ஊக்குவித்துவிட்டால், தொடர்ந்து அவள் செயல்களில் ஈடுபடுவாள். மாறாக, அலைபேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டால், அவளைப் பொறுத்தவரையில் அதுவொரு பெரும் ஏமாற்றமாகவே இருக்கும்.

இன்னும் ஒரு சில தினங்களில் பாடசாலைகள் ஆரம்பமாகிவிடும். அதுவரை இப்படியே அவளைச் செயற்பட வைத்துவிட்டால் வெற்றிதான்!

You must be logged in to post a comment Login