Antharangam

அவரிடமே கேட்டுவிடுங்கள்…!

By  | 

 கேள்வி:

நான் ஒரு பெண். எனக்கு வயது 39. அண்மையில்தான் திருமணமானது. குடும்பப் பொறுப்புக்களை முடிக்கவேண்டியிருந்ததால் தாமதமாகத் திருமணம் செய்யவேண்டியதாயிற்று. எனது கணவர் ஒரு ஆசிரியர். அவருக்கு வயது 46. வயதான பின் திருமணம் செய்தாலும் கூட, எனக்கும் தாம்பத்தியத்தில் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் எனது கணவரின் நடவடிக்கைகள் என்னைத் திகைப்புறவும் திடுக்கிடவும் வைக்கின்றன. இரவில் கட்டிலில் வந்து படுத்து என்னைத் தொட்டுத் தீண்டி, முத்தமிட்டு கிறங்க வைப்பார். அவ்வளவுதான்! பிறகு படுத்துத் தூங்கிவிடுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல… திருமணமான நாள் முதலாக இப்படித்தான் நடக்கிறது. எனது கணவரின் குடும்பம் பெரியது. எல்லோரும் ஒன்றாக, ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். என் வீட்டில் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுமளவுக்கு யாரும் இல்லை. அதனால்தான் அந்தரங்கத்தின் உதவியை எதிர்பார்க்கிறேன். என் கணவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்?

 

பதில்:

ஓரிரு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் எது உண்மையான காரணம் என்பதை உங்கள் கணவர்தான் விளக்க வேண்டும்.

முதலில், அவரது இந்தச் செய்கை பற்றி நீங்கள் அவரிடம் எதுவுமே கேட்கவில்லையா? அல்லது அவராகவே இதுபற்றி உங்களிடம் எதுவும் கூறவில்லையா? 39 வயது என்பது தாம்பத்தியத்தை அனுபவிக்கும் எதிர்பார்க்கும் வயதுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், நாற்பது வயதுகளில்தான் பெண்கள் முழுமனதோடு தாம்பத்தியத்தில் இறங்குவர். அப்படியிருக்க, உங்கள் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யாதது குறித்து அவரிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

சில காரணங்கள் உண்டு என்பது இவற்றைத்தான்:

ஒன்று, அவருக்கு பெண்கள் மீது இச்சை இல்லாதிருக்கலாம். அதுமட்டுமன்றி, சில நேரங்களில் அவருக்கு ஆண்கள் மீது ஆசை – அதாவது ஓரினச் சேர்க்கையாளராகவும் இருக்கலாம். நீங்கள் அவரைத் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக, உங்கள் மீது ஆசை உள்ளவர் போல் தொட்டுத் தடவிவிட்டு, அதற்கு மேல் அவரால் நடிக்க முடியாது என்பதால் விலகிவிடலாம்.

அடுத்தது, அவருக்கு விரைவிலேயே காமம் வடிந்துவிடும் நிலை இருக்கலாம். சில ஆண்களுக்கு தூக்கத்திலேயே ஸ்கலிதம் ஆவதுபோல, அவரும் உங்களைத் தொட்டுத் தடவும்போதே உச்சம் பெறுவதனால் ஸ்கலிதமாகிவிடலாம். இது காரணமாக இருந்தால் இலகுவாக நீங்கள் இதை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இவை இரண்டும் இல்லாவிட்டால் கூட, அவரது குணநலன் மற்றும் ஆழ்மனப் பதிவுகளால் கூட அவர் முழுமையாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதிருக்கலாம்.

ஆனால் இவற்றுள் எதுவாக இருந்தாலும் நீங்கள் அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்! சிலவேளைகளில், அவரிடம் நீங்கள் விசாரித்துப் பார்த்தால், நீங்கள் நினைத்திராத வேறேதும் காரணங்கள் கூட அவரிடம் இருக்கலாம்.

எனவே, அவரிடம் தன்மையாக, உண்மையாக, அவரது பிரச்சினையைக் கேட்டு அதற்கு தீர்வு சொல்ல விழையும் ஒரு தோழியாக இது பற்றிக் கதைத்துப் பாருங்கள்.

You must be logged in to post a comment Login