Antharangam

அவரை ஒதுக்கிவிடுங்கள்!

By  | 

கேள்வி:
எனக்கு வயது 18. நான் ஒருவரை ஒரு வருடமாகக் காதலித்தேன். அவர்களது வீட்டிலும் எனது வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. ஆனாலும் நான் அவரைக் காதலித்துவந்தேன். திடீரென அவர், என்னை இன்னொருவருடன் தொடர்புபடுத்திக் கதைக்கத் தொடங்கினார். அதனால் அவருடன் கதைப்பதை நிறுத்தினேன். இப்போது அவர் மீண்டும் என்னுடன் கதைக்க முயற்சிக்கிறார். ஆனால், என்னால் அவரை மறக்கவும் முடியவில்லை மீண்டும் அவருடன் கதைக்கவும் முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்:
அவரை ஒதுக்கிவிடுங்கள். அதுதான் நீங்கள் செய்யவேண்டியது.
காதல் என்பது, ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் ஆசை மட்டும் அன்று. அது, பரஸ்பரம் நம்பிக்கையும், பாதுகாப்பும் தேடும் ஒரு உணர்வு. இவருடன் எனது வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டால் எனது வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் சுபீட்சமானதாகவும் இருக்கும என்ற நம்பிக்கையே காதலை வாழவைக்கும். ஆனால் இன்று நடப்பது என்ன? கண்டதும் காதல். உடனேயே மோதல். மறுகணமே பிரிவு.
இந்நாட்களில், சுமார் இருபத்தைந்து வயதுக்குப் பிறகு வரும் காதலே உண்மைக்காதலாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அன்றைய பெண்களிடம், பதினாறு வயதிலேயே குடும்பத்தை நடத்துவதற்கான முதிர்ச்சி காணப்பட்டது. ஆனால் இன்றோ, சுமார் இருபத்து இரண்டு வயது வரை, உடற்கவர்ச்சி மட்டுமே பெரிதாகத் தோன்றுகிறது. இதனால்தான், ‘ப்ரேக் அப்’ – அதாவது, காதல் முறிவுகள் – சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.
உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இன்னும் யதார்த்த வாழ்க்கைக்குத் தகுதியானவராக இல்லை என்பதே எமது கணிப்பு. இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு இருப்பது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் மீதும் உங்கள் காதல் மீதும் உங்களவருக்குத் தோன்றியுள்ள சந்தேகம் மிக மிக ஆபத்தானது.
ஒருவர் மனதில், தன் மனைவிஃகணவன் அல்லது காதலன்ஃகாதலி மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், அதைப் போக்குவது மிக மிகக் கடினமானது. உங்கள் மீதான உங்கள் காதலரின் சந்தேகம், தற்போதைக்கு இல்லாதிருந்தாலும், அவரது மன அடியாழத்தில் நிச்சயமாகப் பதிவாகியிருக்கும். அது, எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் தலைதூக்கலாம். ஒருவேளை, திருமணத்திற்குப் பின் மீண்டும் உங்கள் மீது சந்தேகம் தோன்றினால, அது நரக வாழ்க்கையாகவே மாறிவிடும்.
எனவே, இத்தனை சிக்கல்கள் நிறைந்த உங்கள் காதலை (!) கைவிட்டுவிட்டு, இன்னொரு மூன்று வருடங்களை, உங்கள் பெற்றோருக்குப் பிள்ளையாக, சுதந்திரப் பறவையாக அனுபவியுங்கள். அதுவே இப்போதைக்குச் சரியான முடிவு.

You must be logged in to post a comment Login