Antharangam

ஆசை கொள்வது தவறா?

By  | 

கேள்வி:

பெண்களைக் கண்டால் ஆசை பெருகுவது தவறா? இயற்கையாகவே ஆண் மீது பெண்ணும் பெண் மீது ஆணும் மையல் கொள்வது நியாயமானதுதானே? ஏன் ஆண்களைக் கண்டு பெண்கள் அச்சமுறுகிறார்கள்? மேலும் பெண்களை இரசிக்கும் ஆண்களை இந்தச் சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது ஏன்?

 

பதில்:

அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டீர்களோ? கேள்விகள் எல்லாம் அதிரடியாக இருக்கின்றனவே?

பெண் மீது ஆண் ஆசை கொள்வதிலும் ஆண் மீது பெண் ஆசை கொள்வதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பரஸ்பரம் விருப்பம் இல்லாமல் தூண்டலோ, சீண்டலோ இடம்பெறும்போதுதான் அது தவறாகிறது.

நீங்கள் சொல்வது உண்மைதான்! பெண்ணைப் பார்த்து ஆண் கிறங்கிப் போகத்தான் செய்வான். அவனது உடல் அமைப்பு அப்படி! அதாவது, ஒரு (ஏறக்குறைய எல்லா) பெண்ணைப் பார்த்ததும் இயற்கையாகவே அவனுக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அந்த மாற்றம், வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போகிறது.

உதாரணமாக, நீங்கள் ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள், கிறங்குகிறீர்கள். அதன்பின், அடிக்கடி அந்தப் பெண்ணை நீங்கள் பார்க்க நேர்கிறது. ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணும் உங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறாள். அடுத்தடுத்த நகர்வுகளில் இருவரும் காதலில் விழுகிறீர்கள், கல்யாணத்தில் எழுகிறீர்கள். இது நியாயமானது, சாதாரணமானது, இயல்பானது!

ஆனால், ஒரு பெண் தன்னை வெறுப்பதோ அல்லது விருப்பம் இல்லாமல் இருப்பதோ தெரிந்தும் அந்தப் பெண்ணுக்கு இடைஞ்சல் கொடுப்பதுதான் மற்றவர்களால் தவறாகப் பார்க்கப்படுகிறது.

தான் காணும் பெண்களில் பெரும்பாலானவர்களை ஒவ்வொரு ஆணும் இரசிக்கவே செய்கிறான். இது, பெண்களுக்கும் தெரியும். ஒரு ஆண் தனது முக அழகை இரசிக்கிறானா அல்லது உடலழகை இரசிக்கிறானா என்பதை, ஆணின் கண்களைக் கண்ட மாத்திரத்தில் பெண்களால் ஊகித்துவிட முடியும்.

ஒருவேளை நீங்கள் சகோதரிகளுடன் பிறந்திருந்தால், உங்கள் நண்பர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் உங்கள் சகோதரிகள் தவிர்க்க முயற்சிப்பார்கள்; நன்றாகக் கவனித்துப் பாருங்கள். அல்லது, உங்கள் நண்பர்களின் சகோதரிகள் யாரேனும் உங்களை (உங்கள் பார்வை தவறாக இருக்கும் பட்சத்தில்) தவிர்ப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். காரணம், ஆணின் பார்வையை வைத்தை அவனது உள்ளத்தை உணரும் பெண்களின் திறன்தான்!

தம்மை எப்போதும் பிறர் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது பெண்களின் இயல்பு. அதனால்தான், ஆண்கள் தங்களது அழகைக் கண்டு இரசிக்க வேண்டும் என பெண்கள் ஒப்பனையே இட்டுக்கொள்கிறார்கள்.

ஆண்கள் இரசிக்க வேண்டும் என்று பெண்கள் எடுக்கும் முயற்சியோ, பெண்களை இரசிக்கும் ஆண்களின் முயற்சியே ஒருபோதும் தவறாகக் கருதப்படமாட்டாது, ஒரு எல்லைக்குள் இருக்கும்வரை! எப்போது அந்த எல்லை மீறப்படுகிறதோ அப்போது அது தவறாகிறது. தன் மீதான இரசனையானது எப்போதும் கைமீறிவிடலாம் என்ற அச்சத்தினால்தான் நெருங்கிவரும் ஆண்களைக் கண்டு பெண்கள் அச்சமுறுகிறார்கள்.

மேலை நாடுகளில் பரஸ்பரம் ஆண்களும் பெண்களும் பார்வையால் இரசிப்பதை யாரும் தவறாக எண்ணுவதில்லை. ஆனால், நம்மில் பெரும்பாலான ஆண்கள் தங்களை யோக்கியர்களாகக் காட்டிக்கொள்வதற்காக பெண்களைக் காணாதவர்கள் போல நடந்துகொள்வார்கள். அவர்களும் அவர்கள் சார்ந்தவர்களுமான சமூகம்தான், பெண்களை இரசிக்கும் ஆண்களைத் தவறாக முத்திரை குத்தப் பார்க்கிறது.

தூரமாக இருந்து கண்களால் இரசிப்பதற்கு இங்கு யாரும் எதுவும் தடையேயில்லை!

You must be logged in to post a comment Login