Interview

இது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…!

By  | 

பாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல்

1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே…
வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த். தந்தை சிவபாலசுந்தரம். தாய் மகேஸ்வரி. இறக்குவானையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன் நான். எனது பாடசாலைக் கல்வியை இஃஎம்பி பரியோவான் தமிழ்க் கல்லூரியில் நிறைவு செய்தேன். தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்வாங்கலுக்காக காத்திருக்கிறேன். கடந்த வருடம் ‘ஒரு இரசிகனின் பார்வையில் பொன்னியின் செல்வன்’ என்ற தலைப்பிலான எனது முதல் நூலை வெளியிட்டேன்.

2.எழுத்துத்துறையில் எப்போதிருந்து உங்களுக்கு ஆர்வம்?
சிறுவயதிலிருந்தே ஆர்வம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. சாதாரண தரம் படித்து முடித்த காலப்பகுதியில் இந்த ஆர்வம் சற்று தலைகாட்டியது. உயர்தரம் படிக்கும்போதுதான் ஆர்வம் மேலோங்கி எழுத ஆரம்பித்தேன். வெளிப்படையாக சொல்வதென்றால், எப்போது பொன்னியின் செல்வனைத் தொட்டேனோ, அப்போது தொற்றியது இந்த ஆர்வம். அதனை வாசித்து முடித்தேன்; எழுத ஆரம்பித்தேன்.

3.வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகாள்ளுங்கள்…
வாசிப்பு என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால், ஆர்வத்தோடு தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை சாதாரண தரம் எனக்குக் கற்றுத் தந்தது. அப்போது எனக்கு தமிழாசிரியையாக இருந்த திருமதி.குமுதினி அவர்களே ஆர்வத்தை ஏற்படுத்தியவர். சாதாரண தரப் பரீட்சை முடிந்து வீட்டிலிருந்த காலப்பகுதியில் வாசிக்க ஆரம்பித்தேன்.
நான் முதலில் வாசித்த நூல் மு.கருணாநிதி எழுதிய ‘ரோமாபுரிப் பாண்டியன்’ எனும் வரலாற்று நாவல்தான். இதில் பற்றிப்பிடித்த ஆர்வம்தான் இரண்டாவதாக என்னை பொன்னியின் செல்வனுக்கு இட்டுச்சென்றது. பழந்தமிழர் வரலாறுகளை படிப்பதில் எனக்கோர் அலாதி பிரியம். அதனாலோ என்னவோ வரலாற்று நூல்களை – நாவல்களை மனம் அதிகம் நாடுகிறது.

4.பொன்னியின் செல்வன் நாவல் குறித்து ஒரு விளக்க கட்டுரை என சொல்லலாமா, உங்கள் நூலை?
ஆம், அப்படியும் வைத்துக்கொள்ளலாம். நாவல் குறித்தான எனது மன ஓட்டங்களை சற்று ஆய்வு ரீதியில் தந்திருக்கிறேன். ஆனால், இது பொன்னியின் செல்வனுக்கான ஒரு முற்றுமுழுதான விமர்சனமோ நூலாய்வோ அல்ல என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.

5. ‘ஒரு ரசிகனின் பார்வையில் பொன்னியின் செல்வன்’ நூல் குறித்து சொல்லுங்கள்…
ஒரு நூல் குறித்தான பார்வைகள் பலவிதம். அவற்றில் ஒரு ரசிகனாக, எனது பார்வையில் பொன்னியின் செல்வன் எத்தகையது என்பதுதான் இந்நூல். ஆசிரியர் கல்கி அவர்களை நேசிக்கும், ஆராதிக்கும் ஆயிரமாயிரம் ரசிகர்களில் நானும் ஒருவன். அப்படியொரு ரசிகனாக இருந்து எனது மனவோட்டங்களை நூலில் தவழவிட்டிருக்கின்றேன். சற்று இலக்கிய இரசனையையும் கூடச் சேர்த்துப் பகிர்ந்திருப்பதால், சாதாரணமாக ஒரு ரசிகனின் எண்ணவோட்டங்கள், புரிதல்கள் என்பவற்றிலிருந்து இந்நூல் சற்று வேறுபடக்கூடும்.

6.பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க படித்துவிட்டீர்களா?
நாவலை முழுமையாக படிக்காமல் இப்படியொரு முயற்சியில் இறங்குவது என்பது சாத்தியமற்றது. ஒருவகையில் சொல்லப்போனால், நான் இன்னும் நாவலை படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். என்று முடிப்பேனோ தெரியாது. கம்பநாடன் கூறியது போல ஒரு பாற்கடலை சின்னஞ்சிறு பூனையால் என்று பருகி முடிக்க இயலும்!

7.பொன்னியின் செல்வன் நூலை எங்கே வாங்கினீர்கள்?
பாடசாலையில் எனக்கு வரலாறு பாட ஆசிரியராக இருந்தவர் திருமதி யசோதரை அவர்கள். அவரது வீட்டிலிருந்த புத்தக ராக்கையிலிருந்துதான் பொன்னியின் செல்வன் என்னை எட்டிப் பார்த்தார். ஏற்கனவே, பொன்னியின் செல்வன் பற்றி பலர் சொல்ல கேள்விப்பட்ட ஆர்வத்தில்… விடுவேனா புத்தகத்தை! வாங்கி வாசித்ததோடு இன்றுவரை அப்பதிப்பு என் கைவசமே. மிகப்பழைய பதிப்பு ஆதலால் அதிலுள்ள எழுத்துக்களும் ஓவியங்களும் என்னை விட்டுப் போக மனமின்றி நிற்கின்றன. எனது நூலிலும்கூட இதைப் பற்றிக் கூறியிருப்பேன்.

8.எத்தனை நாட்கள் எடுத்தன, முழுமையாக அந்த நூலை வாசித்து முடிக்க?
அப்போதிருந்த சூழ்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. இப்போதென்றால், ஒரு வாரத்துக்குள் முடித்துவிடலாம். புத்தகத்தை கையில் எடுத்தால், பிறகு நிகழ்காலத்தையே மறந்துவிட வேண்டியதுதான்.

9. நூலை எழுதுவதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் நூலை நீங்கள் எத்தனை தடவைகள் வாசித்தீர்கள்?
குறிப்பிட்டுக் கூறுவது கடினம். எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு ஆறேழு தடவைகள் வாசித்திருப்பேன். நூலை எழுதி முடிக்கும் போது 15 தடவைகளுக்கு அதிகமாக வாசித்திருப்பேன் என்று கூறலாம். ஏனெனில், ஒவ்வொரு கருத்தையும் ஆய்ந்து யோசித்து எழுதவேண்டியுள்ளது. ஆதாரமற்றதை எவ்வாறு எழுதமுடியும்?

10.உங்களது நூல் உருவான விதத்தை சொல்லுங்கள்…
வாசித்த முதல் பத்தியிலேயே என்னைக் கவர்ந்திழுத்த ஒரே நாவல் இன்றுவரை ‘பொன்னியின் செல்வன்’தான். அப்படியொரு பிரம்மாண்டத்தை வாசித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கமுடியுமா என்ன…!
எனது வாசிப்பு வட்டத்தின் முக்கிய இரு அங்கத்தினர் என் தோழிகளே. நாங்கள் இணைந்து உரையாடி கருத்துக்களை பகிர்ந்து பொன்னியின் செல்வனை கொண்டாடியிருக்கிறோம். மேலும், இருக்கவே இருக்கின்றனர் தமிழாசிரியர்கள். அவர்களோடு பல நாட்கள் பகிர்ந்து ஆலோசித்திருக்கிறேன். இணையத்தில் உலவி பொன்னியின் செல்வனை தேடியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வோர் இரவுகளிலும் என்னை தூங்கவிடாமல் இன்பத்தொந்தரவு செய்யும் பொன்னியின் செல்வன் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்திருக்கின்றது. இவை அனைத்தின் சங்கமம்தான் இந்நூல். முதலில் உயர்தரத்தில் எனது தனியாள் செயற்றிட்டமாகத்தான் எழுத ஆரம்பித்தேன். பிறகு நூலாக எழுதிட எண்ணம் தோன்ற பலர் ஊக்கமளித்தனர். பிறகுதான் நூலாகவே எழுதி பாடசாலைக்கு சமர்ப்பித்தேன். பின்னர், இரண்டு வருட காத்திருப்பில் கடந்த வருடம் வெளியிட்டேன்.

11.நூல் வெளியிட உங்களை ஊக்கப்படுத்தியது யார்?
எனது தமிழாசிரியர்கள், பாடசாலையின் அதிபர், நண்பர்கள் என இன்னும் பலர்.

12. நூல் வெளியாக முக்கிய பங்கு வகித்தவர்கள்?
உயர்தரத்தில் தமிழாசிரியையாக இருந்து எனது தமிழறிவையும் ஆளுமையையும் நிலையான பாதையில் பயணிக்க வைத்தவர் ஆசிரியை செல்வி சுதர்சனி அவர்கள். நூல் வெளியாவதில் பெரும்பங்கு வகித்தவரவர். மேலும், பாடசாலையின் அதிபர் திருவாளர் கமலேஸ்வரன் அவர்கள், ஆசிரியைகளான திருமதி குமுதினி, திருமதி உஷாராணி ஆகியோரை குறிப்பிட்டுக் கூறலாம்.

13.பொன்னியின் செல்வன் நாவல் போன்றதொரு மிக முக்கிய நாவலை விமர்சன பார்வையாக எழுதுவதென்பதின் பாரதூரத்தை அப்போது உணர்ந்திருந்தீர்களா?
நான் முன்னரே கூறியது போல் இது ஒரு முற்றுமுழுதான விமர்சனமல்ல. இலக்கிய ரசனையோடு எழுதப்பட்ட ஒரு ரசிகனின் எண்ணவோட்டங்கள். அப்படியிருக்கையில், அப்போது நான் பாரதூரத்தை பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை. சிறப்பாக எழுதவேண்டுமே என்றதொரு கவனத்தில் எழுதினேன், அவ்வளவுதான்.

14.இப்போது உணர்கிறீர்களா?
பாரதூரம் என்பதைத் தாண்டி இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணமுண்டு.

15. உங்கள் பள்ளிக் காலத்து தொகுப்பான பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையில், ஒரு ரசிகனாக அந்த நூல் உங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என எண்ணுகிறீர்களா? இல்லை, இன்னும் சில விடயங்களை மாற்றியிருக்கலாம் என நினைக்கிறீர்களா?
உண்மையைச் சொன்னால் ‘இல்லை’ என்றுதான் கூறமுடியும். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் இந்நூலை எழுதினேன். ஆகவே, அப்போதைய எனது அறிவு, ஆளுமை, பொன்னியின் செல்வன் தொடர்பான எனது அனுபவம், தேடல் என்பவற்றின் வெளிப்பாடாகத்தான் இந்நூல் இருக்கும். இன்றைய நிலைமையிலிருந்து பார்க்கும்போது, ‘அடடா! இன்னும் சிறப்பாக நூலை எழுதியிருக்கலாம்’ என்றுதான் தோன்றுகின்றது. காரணம், இப்பொழுது எனது வாசிப்புத்திறன், ஆய்வுக்கண்ணோட்டம், பொன்னியின் செல்வன் தொடர்பான தேடல் அறிவு என்பன பரந்திருக்கின்றன. ஆகவே, இன்று எழுதியிருந்தால் இன்னும் அதிக விடயங்களை உட்புகுத்தி சிறப்பாக என்னால் எழுதியிருக்க முடியும். எப்படியிருப்பினும், நூலின் தரத்தை வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, நானாக எதையும் கூறி விளக்குவது பொருத்தமற்றது. ஒரு பாற்கடலை சின்னஞ்சிறு பூனை குடிக்க முயன்றிருக்கின்றது, அவ்வளவே!

16. மேற்படி நூல் குறித்து மறக்கமுடியாதபடி சாதகமான கருத்துக்கள் எவையும் உங்களுக்கு கிடைத்தனவா? குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எவரின் கருத்துக்களாவன…
நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த, பலாங்கொடை கல்வி வலய ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி கலாரமணி அம்மையார், “பொன்னியின் செல்வனில் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார் இவர். நாவலை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்” என்று கூறியதும், நூலாய்வு செய்த பதுளை பாரதி மகா வித்தியாலய ஆசிரியர் திருவாளர் இந்திரகுமார் அவர்கள் “இவரது மொழிநடை மிக பாராட்டுதற்குரியது. 17, 18 வயதில் இப்படியானதொரு மொழிநடையை உருவாக்கிக்கொள்வதென்பது சாதாரணமானது அல்ல, பாராட்டப்படவேண்டியது” என்று கூறியபோது எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக, பாராட்டாக அவற்றை உணர்ந்தேன்.

17. அடுத்த உங்கள் படைப்பு என்னவாக இருக்கும்? எப்போது வெளியிடுவீர்கள்?
நான் பயனிக்கவிருக்கும் துறைக்கு இன்னும் அதிகமான வாசிப்புகள், தேடல்கள் அவசியம். முதல் முயற்சியாக நான் எப்படியோ காலடி எடுத்து வைத்துவிட்டேன். இனி, எனது காலடிகளை உறுதியாக நிலைத்து வைக்கவேண்டும். ஆகவே, இப்போதைக்கு வாசிப்பு என்னை வளர்த்துக்கொண்டிருக்கின்றது என்று கூறலாம். அடுத்த படைப்பு மேலும் தரமானதாக இருக்கும் என்ற உறுதியை இப்போதைக்கு அளிக்க இயலும்.

18.எழுத்து, வாசிப்பு, விமர்சனம் உள்ளிட்ட இவ்விலக்கிய துறையில் உங்களது அனுபவம் எப்படியிருக்கிறது? இதை தொடர விரும்புகிறீர்களா?
அனுபவம் புதுமை… நாளுக்கு நாள் புதுமைகளை சந்திக்கின்றேன். அவை என்னுள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றோடு பயணித்து எனது துறையை தொடர விரும்புகின்றேன். தமிழ், தமிழர் வரலாறு என்பவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான். ஆகவே, ஓர் ஆய்வாளனாக மறைந்த, மறந்த தமிழர் தம் பெருமையை வெளிக்கொண்டுவரும் ஒருவனாக வளரவேண்டும் என்பது எனது பெருவிருப்பு.

19.எந்தவொரு முன் அறிமுகமும் இல்லாத (இலக்கிய துறையில்) இடத்திலிருந்து சுயமாக இந்தத் துறைக்கு வந்திருக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள்?
வரவேண்டும் என்று இருந்திருக்கின்றது, வந்துவிட்டேன். ஏதோ ஒரு உந்துதல், ஆர்வம் இத்துறைக்கு என்னை இட்டு வந்திருக்கின்றன. நான் தெரிவு செய்த பாதை சரியானது, எனக்குப் பொருத்தமானது என்பதில் முழு நம்பிக்கை எனக்குண்டு. முன் அறிமுகமின்றி சுயமாக வந்துவிட்டேன். இனிவரும் பயணம் சுயத்தோடு தனித்துவமாக செல்லும். காலமே அனைத்துக்கும் பதில்.

20.உங்கள் வாழ்வில் நீங்கள் நன்றி சொல்ல நினைப்போர்…
மிகக் கடினமான வினா என்றால் இதுதான். எண்ணிக்கை பரந்தது. முடிந்தளவு சுருக்கமாகச் சொல்வதாயின், என்னை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தை, ஆளுமையை வளர்த்தெடுத்த பாடசாலை, அறிவுக்கண் திறந்த ஆசான்கள், இன்றும் என்றும் வழிகாட்டியாய் துணைநிற்கும் ஆசிரிய உறவுகள், முதல் பிரசவத்தினை சுகப்பிரசவமாக்கித் தந்த நல்லுள்ளங்கள், தோள் கொடுக்கும் தோழமைகள் என்று பட்டியல் நீளும். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை தமிழனாய் தமிழ்ப்பற்றாளனாய் இவ்வுலகுக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு சிரம் தாழ்த்தி, அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகள் பல தெரிவித்துக்கொள்கிறேன்.
நேர்காணல்: ப. கணகேஸ்வரன(கேஜி)

You must be logged in to post a comment Login