Antharangam

இந்த காதலுக்கு நான் காரணமல்ல!

By  | 

கேள்வி: 

எனக்கு வயது 37. எனக்கு சொந்தமாக நான்கு வீடுகள் இருக்கின்றன. மேலும் நான் வீடு, சொத்து விற்பனைத் தரகராகவும் இருக்கிறேன். இன்னும் திருமணமாகவில்லை. காதல்தான் என் பிரச்சினை. எனது தூரத்து உறவினர் ஒருவரது வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவர்களுக்கு ஒரு மகள். வயது 23. அவள் சரியான சுறுசுறுப்பு. வாயும் ஓயாது. பேசிக்கொண்டே இருப்பாள். அவர்கள் வீட்டில் அவளது கதையை யாரும் கேட்பதில்லை. எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அதனால், அவள் பேசும் கதையை நான் காது கொடுத்துக் கேட்பேன். அதேபோல், அவளுக்கு சார்பாக அவளது குடும்பத்தில் யாரும் கதைக்க மாட்டார்கள். சிறுபிள்ளை என்பதால் நான் அவளுக்கு ஆதரவாக அவளது குடும்பத்தினருடன் பேசுவேன். ஆனால், அவளை நான் எப்போதும் காதலித்திருக்கவில்லை. திடீரென அவள்தான் தன் காதலை என்னிடம் சொன்னாள். நான் அதிர்ந்துபோய் மறுத்துவிட்டேன். உடனே அவள் தன் குடும்பத்தார் முன்னிலையில் போட்டு உடைத்துவிட்டாள். அவர்களுக்கும் பேரதிர்ச்சிதான்! இப்போது அவளது வீட்டுக்கு நான் போவதில்லை. ஆனால், அவள் தன் காதலைச் சொன்னது முதல் எனக்கும் அவள் மீது விருப்பமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை எப்படி சுமுகமாக முடித்துக்கொள்வது?

  

பதில்: 

மீண்டும் அந்த வீட்டுக்குப் போகாமல் இருந்தாலே பிரச்சினை சுமுகமாக முடிந்துவிடும். அதேநேரம், அந்தப் பெண்ணின் தந்தைக்கு அழைப்பை ஏற்படுத்தி மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். அந்தப் பெண்ணின் மனதில் உங்கள் மீதான காதல் தோன்றியதற்கு நீங்கள் காரணம் இல்லை என்றாலும் கூட, தார்மீகப் பொறுப்பு உங்களுக்கே இருக்கிறது. எனவே, நடந்தது குறித்து உங்கள் வருத்தத்தை அப்பெண்ணின் தந்தையிடம் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு அந்தப் பெண்ணின் மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது எனும்போது, நீங்கள் திருமண வாழ்க்கைக்குத் தயாராகத்தான் இருக்கிறீர்கள், அல்லவா? எனவே, கூடிய விரைவில் நல்லதொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்கள்.

இவையிரண்டும் நடந்துவிட்டால் உங்கள் பிரச்சினை தீரும்!

 

You must be logged in to post a comment Login