Health

இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுநிலை ஏற்படலாம்!

By  | 

 

 

டொக்டர் குணசிங்கம் சுகுணன், 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், நாட்டையும் மக்களையும் தொற்றிலிருந்து முற்றாக விடுவிக்கும் நோக்கில் அரசும் அரசு சார்ந்த சுகாதார சேவையகங்களும் முன்னின்று கடமையாற்றுகின்றன. அவை விடுத்துள்ள கடுமையான சட்டதிட்டங்களுக்கு மத்தியில் நோய் குறித்த வெருட்சியோடு பெருமளவு மக்கள் தங்கள் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சனநெருக்கம் பெருகிய அம்பாறை மாவட்டத்திலும், குறிப்பாக அதன் வியாபார மையமாக விளங்கும் கல்முனை நகரிலும் இதேநிலை தென்படுவதால், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான டொக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்களிடம்,
அப்பிரதேசங்களில் தற்போதைய தொற்றுப்பரவல் நிலை மற்றும் அங்கு வாழும் மக்களின் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னரான வாழ்க்கை முறை தொடர்பாக கேட்டறிந்தோம். இதன்போது அவர் மித்திரன் வாரமலருக்கு அளித்த செவ்வி இதோ….

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட இடங்களை பற்றியும் அங்கு கொவிட் 19 தொற்றுப்பரவல் எத்தகைய நிலையில் உள்ளதென்பதையும் கூறுங்கள்…
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகமானது, பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான பகுதிகளில் வசிக்கும் 5 லட்சத்துக்கு அதிகமான பொது மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கிவருகின்றது. இச்சேவைகளை 25 வைத்தியசாலைகள், 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் மூலம் நேரடியாக வழங்குகிறது.
எமது பிரதேசத்தில், கட்டார் நாட்டுக்கு சமய கடமைகளுக்காக சென்று திரும்பிய ஒருவர் மூலம் முதலாவது கொவிட் 19 தொற்று அடையாளப்படுத்தப்பட்டது. பிறகு அவருடைய மனைவிக்கும் தொற்று ஏற்பட, அவர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்தே இப்பிராந்தியத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
அந்த இருவருடனும் நேரடி தொடர்புகொண்ட 82 பேர் பொலன்னறுவையில் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் தமின்ன தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லை என உறுதியானதால், அனைவரும் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
அதைத் தவிர, பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடொன்றிலிருந்து திரும்பியிருந்தபோது தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்றிருப்பது உறுதியாகி, கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் அந்த நபரும் தொற்றிலிருந்து குணமாகி தற்போது சுகதேகியாக வீடு திரும்பியுள்ளார்.
ஆக, இன்றைய நிலையில் எமது பிரதேசத்தை சேர்ந்த யாரும் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
எமது பிராந்தியத்தில் உள்ள ஒலுவில் துறைமுக பகுதியில் கடற்படையினரால் தனிமைப்படுத்தல் முகாமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகாமில் ஆரம்பத்தில் 81 பேர் ஜா எல – சுதுவெல்ல பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் எமது பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் அல்லர்.
அவர்களில் 13 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர். ஏனையோரில் பலர் தொற்று ஏற்படாதவர்களாய் வீடு திரும்பிவிட, தற்போது 19 பேர் மட்டுமே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (மே 14),
மேலதிகமாக, வெலிசறை கடற்படை முகாமோடு தொடர்புடையவர்கள் என 80 கடற்படையினர் ஒலுவில் முகாமுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதை தொடர்ந்து, மறுநாள், வெள்ளிக்கிழமை (மே 15) அவ்விருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதன் பிறகே மேலதிக தகவல்களை தெரிவிக்கக்கூடியதாக இருக்கும்…
இவ்வாறுதான் எமது பிராந்தியத்தில் கொவிட் 19 நிலைப்பாடு காணப்படுகிறது.

அப்பகுதிகளில் மொத்தமாக எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்? அவர்கள் எந்தெந்த பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள்? எவ்வாறு பிரித்தறியப்படுகிறார்கள்?
தனிமைப்படுத்தல் எனும்போது வெளிநாட்டிலிருந்து திரும்பிய எம் நாட்டை சேர்ந்தவர்கள், உல்லாச பயணிகளாக பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு வருகை தந்தவர்கள் என மொத்தமாக 994 பேர் இரண்டு வாரகால சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் 10 பேர் தவிர ஏனையோர், தங்கள் தனிமைக்காலம் நிறைவடைந்து, தொற்று இல்லாதவர்கள் என இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் 10 பேர் மட்டுமே எமது பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதைவிட, இதுவரை (இந்த இரண்டு மாத காலத்தில்),
உள்நாட்டுக்குள் அபாய வலய பிரதேசங்களிலிருந்து எமது பிரதேசத்துக்கு திரும்பியவர்கள் மற்றும் வேறு விதங்களில் நோயாளிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்கிற ரீதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, தொற்று அற்றவர்கள் என முடிவாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, எமது பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 200 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்கூட கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே. அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
மேலும், ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் 161 பேர் வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் தற்போது 97 பேர் மட்டுமே உள்ளனர்.

உமது பிரதேசத்தில் வாழும் மக்கள் சட்ட நடைமுறைகளை சரிவர பின்பற்றுகிறார்களா?
கல்முனை, சாதாரண நாட்களிலேயே சன நெரிசல் மிகவும் உயர்வடைந்து காணப்படும் ஒரு பிராந்தியமாகும். மருதமுனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, பொத்துவில் முதலிய பகுதிகள் வியாபாரத்துக்கு பெயர் பெற்ற இடங்கள். அந்த வகையில், கல்முனை பொதுச் சந்தை ‘சிறிய தம்புள்ள சந்தை” போன்று காணப்படும். கல்முனையில் ஆடை விற்பனை வியாபார நிலையங்களும் கூடுதலாக காணப்படுகின்றன.
இதன்போது, கொவிட் 19 ஏற்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டும் தளர்த்தப்பட்டுமிருந்த ஆரம்ப நாட்களில்கூட மக்கள் இங்கே ஒன்றுகூடுவது மிகவும் அதிகரித்திருந்தது. பின்பு தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள இந்நாட்களில் கூடுதலான சன நெருக்கம் இருப்பினும், மக்கள் ஓரளவுக்கு நடைமுறை சட்டங்களை பின்பற்றுகிறார்கள் என்பதில் திருப்திகரமான நடப்புநிலை கல்முனையில் காணப்படுகிறது என என்னால் கூறமுடியும்.
இனியும் நாடு சுமுக நிலைக்கு திரும்பி பாடசாலைகள் திறக்கப்படும்போது, மாணவர்களுக்கான போக்குவரத்து, பாடசாலைகளில் நெருக்கடி என்பனவற்றை கருத்திற்கொண்டு அவர்களது பாதுகாப்பில் மேலதிகமாக கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.

இரண்டு அபாயவலய மாவட்டங்கள் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் இரவு வேளைகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டும், ஏனைய பொழுதுகளில் (காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) தளர்த்தப்பட்டும் உள்ள நிலையில், மக்கள் இரவு மட்டுமே வீடுகளில் இருந்துவிட்டு அதிக நேரத்தை வெளியில் செலவிடுகிறார்கள். இவ்வாறிருப்பின், தொற்று எப்படி கட்டுப்படுத்தப்படும்?
ஆரம்பத்தில் நாட்டை முற்றுமுழுதாக முடக்கியிருந்தோம். அதேபோல் முழுதாக தளர்த்தவேண்டும். அதையும் படிப்படியாகத்தான் செய்தாக வேண்டும். பகல் வேளைகளில் ஊரடங்கை தளர்த்தி இரவு வேளைகளில் அமுல்படுத்தியுள்ள இந்நிலையை இன்னும் சிறிது காலத்துக்கு தொடரப்போகிறோம். ஏனென்றால், காலை 5 முதல் இரவு 8 மணி வரையான நாளின் பெரும்பொழுதுகளில் மக்களை மேற்பார்வை செய்வது இலகுவானது.
அப்பொழுதுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவில்லை. இன்னமும் நாங்கள் பொதுச் சந்தைகளைகூட திறக்கவில்லை. இதன் மூலம் ஓரளவு மக்களின் ஒன்றுகூடலை தவிர்த்து வருகின்றோம்.
இனிவரும் காலங்களில் இரவில் போடப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தவும் ஏதுவான சூழல் நிலவுகிறது. பாடசாலைகள் திறக்கக்கூடும்.
தற்போது இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுநிலையின் முதலாவது கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளோம். இரண்டாவது அலை வருமா, வராதா என்கிற ஐயப்பாட்டில்தான் இந்த சுமூக நிலைக்கு இறங்கியுள்ளோம். மக்கள் சரியாக நடந்துகொண்டால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். மக்கள் தெளிவடைய வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டும். அவ்வாறெனில், இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தலால் எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது.
ஊரடங்கு சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டு மக்களினதும், நாட்டினதும் இயக்கங்கள் இயல்புக்கு வரவேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். அது, மிக விரைவில் நடைபெறும்.

தற்போது அரச, தனியார் செயற்பாடுகள் வேகமெடுத்து வருகின்றன. பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்நடவடிக்கைகள் நோய் பரவலிலிருந்து மக்களை பாதுகாக்குமா? அல்லது நோய்ப்பாதிப்பை ஏற்படுத்துமா?
தற்போது பொதுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் அரச, தனியார் உத்தியோகத்தர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த முறை விரிவுபடுத்தப்படும். போக்குவரத்து பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம். கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுநிலை ஏற்படலாம்.
இலங்கையில் கொவிட் 19 பரவல் மிகத் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டு குறைவான இறப்பு வீதமே பதிவாகியுள்ளது. மக்களும் ஓரளவு எமது எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்கிறார்கள். இயல்பு நிலை திரும்பும்போது இன்னும் உறுதியாக அவர்கள் தங்களது பொது சுகாதார கடமைகளை பின்பற்றவேண்டும்.
மிக விரைவில் விமான நிலையங்களும் திறக்கப்படவுள்ளன. அதனை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படும்.
அதைவிட நோயை இனங்காணக்கூடிய அன்டிஜன், அன்டிபொடி முதலான ரத்தத்தில் செய்யப்படும் பரிசோதனைகள்கூட நடைமுறைப்படுத்தக்கூடும். இலங்கையில் பல காரணங்களுக்காக இதுவரை கொண்டுவரப்படாத இவ்வகை பரிசோதனைகள் தேவையேற்படின் அறிமுகப்படுத்தப்படலாம்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வருபவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்படலாம். வெளி தேசங்களிலிருந்து நம் நாட்டை வந்தடையும் நபர்களால் ஏற்படக்கூடிய தொற்றுநிலை இதன் மூலம் தடுக்கப்படலாம்.
இவ்வாறான திட்டங்களை அரசு படிமுறையாக செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. இயல்புநிலையை கட்டுப்பாடுகளுடன் கொண்டுவருவதை மிக நேர்த்தியாக ஆற்றுவதற்கு ரீ-ஓபன் ஸ்ரீலங்கா எனும் செயற்றிட்டத்தை உருவாக்கியுள்ளது.
சுகாதார துறை உத்தியோகத்தர்கள் தங்கள் முழு அர்ப்பணிப்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாரும் முப்படையினரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினை சேர்ந்தவர்களும் எம்மோடு இணைந்து கடமையாற்றுகின்றனர்.
இதன்போது கல்வித் திணைக்களங்கள் உட்பட ஏனைய திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடனும் இணைந்து நாங்கள் செயற்படவுள்ளோம்.
ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்….
மக்கள் சுய ஒழுக்கம் மிக்கவர்களாக, சமூக சிந்தனையுடையவர்களாக, நோயின் ஆழத்தை அறிந்தவர்களாக, சுகாதார துறையினரும் அரசாங்கமும் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுபவர்களாக இருப்பராயின், இந்த கொவிட் 19 தொற்றை மிக லாவகமாக வெற்றிகொண்டதாய் இந்த தேசம் அடையாளப்படுத்தப்படும்.
நாட்டின் ஜனாதிபதியும் அவருக்கு கீழான ஜனாதிபதி செயலணியும் சுகாதார அமைச்சும் இணைந்து ஆற்றும் இவ்வளப்பரிய பணி மகத்தானது. இதன் வழியே மக்களும் ‘ஒரே தேசம்” என்கிற உணர்வோடு செயற்பட்டால் நாம்,
இதிலும் வெல்வோம், எதிலும் வெல்வோம்!

(இந்நேர்காணலின் தொடர்ச்சியை எதிர்வரும் மே, 24ஆம் திகதி மித்திரன் வாரமலரில் எதிர்பாருங்கள்….)

நேர்காணல்: மா. உஷாநந்தினி

You must be logged in to post a comment Login