Articles

இன்பமாய் வாழ வார்க்கப்பட்ட படைப்பு

By  | 

கவிநிலா அன்பழகி கஜேந்திரா,

(எழுத்தாளர், கவிஞர்)

மன்னார்.

 

சட்டத்தை வரைபவர்கள்

ஆண்களாக இருக்கும்போதே

பெண்ணடிமைத்தனம்

தலைதூக்குகின்றன. 

ஒரு சமூகத்தின் விடுதலை என்பதற்குள் பெண் விடுதலை ஒரு பிரிவாகிறது. அதனால்தான் ‘பெண் அடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்கிறார் பாரதி.

தாலியைச் சுமந்து தணலில் கருகும் பெண்களின் நிலையை உணர்ந்ததால்தானோ ‘பெண்ணாகப் பிறப்பதிலும் மண்ணாகப் பிறக்கலாம்” என்கிறது, ஒரு பழமொழி.

சட்டத்தை வரைபவர்கள் ஆண்களாக இருக்கும்போதுதான் பெண்ணடிமைத்தனம் குடும்பங்களில் பிரச்சினைகளாகத் தலைதூக்கிப் பரிணமிக்கின்றன. குடும்பத் தகராறுகள், மண(ன) முறிவுகள் ஏற்படுகின்றன. ஆண்கள் ஆணாதிக்க கொள்கைகளிலிருந்து விடுபட்டாலே குடும்ப உறவில் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். விட்டுக்கொடுத்து கணவன் மனைவி பரஸ்பரமாக அன்பு செலுத்தினாலே போதும், மீதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

கணவன்தான் மனைவியை முழுமையாக மாற்றுகிறான். மனைவிதான் கணவனை பரிபூரண முழுமையாக மாற்றுகிறாள். ஒன்றில்லாமல் ஒன்றிருக்காது.

ஒன்றுக்குள் ஒன்று தாகமாய், தவிப்பாய், ஏக்கமாய், எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து, இன்பமாய் வாழ்வதற்காக வார்க்கப்பட்ட படைப்புதான் ஆண், பெண் படைப்பு. ‘கணவன் இல்லாத பெண் நிர்வாணமாக இருக்கிறாள், மனைவி இல்லாத ஆண் நிர்வாணமாக நிற்கிறான்…” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். இவள் இல்லாமல் என்னால் வாழ முடியாதா என்ற ஆணவம் கணவனுக்கு வந்துவிட்டால் குடும்பம் நிலைகுலைந்துவிடும்.

‘குற்றம் சொல்லாத சுற்றமே இல்லை” உறவுகளின் உளறல்களைப் பெரிதாக பொருட்படுத்தாமல், தங்களுக்குள் விட்டுக்கொடுத்து, ஒற்றுமையாக வாழ்வது என்று தீர்மானித்துவிட்டால் குடும்பத்தில் அதிக பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

எந்தவொரு வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி, ஆண் அடிமைப்படுத்துகின்றானோ அங்கே ஒரு மனித விலங்கு வெற்றி பெறுகின்றது என்று பொருள். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தோற்றுப்போவதற்கு தயாராக இருந்தால், அங்கே ஆண், பெண் குடும்ப உறவு வெற்றி பெறுகின்றது என்பது பொருள்.

‘பெண்மையைப் போற்றுதல் நல்லறம்

பெரும் பேறாய்க் காப்போம் இல்லறம்”

 

 

You must be logged in to post a comment Login