Beauty

இயல்பான நிறமே இயற்கையான அழகு

By  | 

அறிமுகம்…
பெயர் : ரீவிகா (தீபி)
வயது : 25
அப்பா : தங்கேஸ்வரன்
அம்மா : றெஜினிகுமாரி
பிறந்தது: யாழ்ப்பாணம்
வளர்ந்தது: வவுனியா
படித்தது : வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
தொழில் : அழகு கலை நிபுணர்

02. அழகு கலை தொடர்பான உங்கள் பார்வை…?
அழகு கலை இயற்கையாக இருக்கும் ஒன்று. நம் அழகு மற்றும் தோற்றத்துக்கேற்ப பாணியை (Style) மெருகூட்டி, நம் ஆளுமை விருத்தியையும் (Personality Development) அதிகரித்துக்கொள்ள உதவுவது… நம் கலாசாரத்தின் அடையாளங்களை ஒப்பனை தயார்ப்படுத்தல் மூலம் எடுத்துக்காட்டுவது அழகுக்கலையே. இது தற்போது திறன் விருத்தி தொழில்சார் செயற்பாடாகவும் மாறியுள்ளது.

03. அழகுக்கலை என்றாலே பெண்களுக்கு பிடிக்கும்… அந்த வகையில் உங்களுக்கு அதன் மீதான ஈர்ப்பு எப்போது ஏற்பட்டது?
நான் வவுனியாவிலிருந்து (2016) யாழ்ப்பாணம் வந்து Computer Networking படித்துக்கொண்டிருந்தபோது IT துறையில்தான் எனக்கு ஆர்வம் மிகுந்திருந்தது. ஆனாலும் நான் சாதாரணமாக மற்றவர்களிடமிருந்து என்னை தனித்து விளங்குவதற்கு வித்தியாசமான எனது ஆடைத்தெரிவே காரணமாக இருந்தது. அத்தோடு இலேசாக ஒப்பனை செய்துகொள்ளவும் பிடித்திருந்தது.
எனக்கு நானே மருதாணி இட்டுக்கொள்வது, முக ஒப்பனை செய்து பார்ப்பது என ஒவ்வொன்றாக பழக ஆரம்பித்தேன். அதன்பின் சமூக வலைத்தளங்களினூடாக சில விடயங்களை தேடி, சுயகற்றலில் ஈடுபட்டேன். ஒருநாள் எனக்கு தெரிந்த பெண்ணொருவருக்கு மணப்பெண் அலங்காரம் முழுவதுமாக செய்தேன். அவரது புகைப்படத்தை பார்த்த அவரது நண்பி, என்னை, தனது திருமணத்தின்போது மணப்பெண் ஒப்பனை செய்ய அழைத்தார். அது சிறப்பாக அமைய அப்படியே தொடங்கியது, எனது அழகான பயணம்.

04. அழகுக்கலையில் நீங்கள் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கிறீர்கள்?
– (Functional / Non Functional / Ad shoot) (Commercial shoots)
– முக ஒப்பனை (Facial makeup)
– சிகை அலங்காரம் (Hair dressing)
– சில சமயங்களில் ஆடை வடிவமைப்பு ஆலோசனைகள் (Dress design consulting)
– சருமப் பராமரிப்பு சிகிச்சைகள் (Skin care Treatment)
– மருதாணி வடிவமைப்பு (Mehndi)

05. சாதாரணமாக உங்களுக்கு நீங்களே மேக்கப் செய்வதற்கும், நீங்கள் வேறொருவருக்கு மேக்கப் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
முக அமைப்பு, உடல் தோற்றம், சரும வகைகள், சரும நிறங்கள், தலைமுடி அமைப்புக்கள், வாடிக்கையாளர்களுக்கு பொருந்தக்கூடியது, அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றது என என்னிலிருந்து ஏனையவருக்கு போடும் மேக்கப் முறையில் நிறையவே மாறுபடுகிறது.

06. ஒருவருக்கு மேக்கப் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள்?
சாதாரணமாக வாடிக்கையாளர்ஃ மணப்பெண் வேண்டுகோளுக்கேற்ப கிட்டத்தட்ட முக்கால் மணிநேரத்திலிருந்து ஒரு மணித்தியாலம் வரை முக ஒப்பனைக்கு மாத்திரமே நேரம் தேவைப்படும். சில சமயங்களில் நேர அளவு மாற்றமடையலாம். அதனைவிட ஒரு முழு அலங்காரம் என்பது சிகை அலங்காரங்கள் மற்றும் ஆடை அணிவித்தலை பொறுத்து மேலதிக நேரங்கள் தீர்மானிக்கப்படும்.

07. இக்கலையை பிரத்தியேகமாக கற்றீர்களா?
ஆம். ஆனால், அதில் எனக்கு திருப்தியில்லை. நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. அதன்பின் நான் யாரிடமும் கற்கவுமில்லை. தற்போது உள்ளது போல் சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்து நான் விரும்பிய பொருத்தமானவர்களை தெரிந்து, கற்பதற்கு அப்போது என்னால் முடியவில்லை.

08. அழகு கலை துறையில் நிலைத்திருக்க அவசியம என நீங்கள் கருதுவது…?
* Makeup பொருட்கள் தெரிவு பற்றிய அறிவு
* சரும வகைகள் மற்றும் சரும நிறங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
* படைப்பாற்றல் (Creativity) இருக்கவேண்டும்.
* வாடிக்கையாளர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையோடு கையாளவேண்டும்.
* கடுமையான முயற்சியும் உழைப்பும் தேவை.
* புதிய வரவுகளை பற்றி ஆராய்ந்து அறியவேண்டும்.

09. இத்துறையில் உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள்…?
* Makeup Artist  என்கிற அங்கீகாரம்.
* இலங்கையில் மட்டுமன்றி, இந்தியாவிலும் விளம்பர ஒப்பனை மற்றும் மணப்பெண் அலங்காரங்களில் வாய்ப்பு பெற்று, பாராட்டுக்களை பெற்றேன்.
* ஒரு நாள் பயிற்சி வகுப்புக்களை நடத்தி, அதில் மாணவர்களின் பின்னூட்டல்களை பெற்றேன்.
* tpl  Talented Beautician Award, Slahab Upcoming Artist Award, Maatrumothiron 1st place Award.
* ஊடகங்களுக்கு பேட்டிகள் வழங்குவதுண்டு.
* Modelling துறையில் ஆர்வமுள்ள சிலரை அறிமுகப்படுத்தியும் உள்ளேன். இவ்வாறாக இத்துறையில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன்.

10. நமது பெண்கள் குறிப்பாக, மணப்பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதில் விடும் தவறுகள் என நீங்கள் கருதுவது?

மணப்பெண்களாக இருக்கும் பெண்கள் அன்றோ அல்லது முதல் நாளோ மட்டும் தங்களை பராமரிக்காமல், கிட்டத்தட்ட 3 – 6 மாதங்கள் அல்லது குறைந்தபட்சம் 1 மாதமாவது தங்களை பராமரிப்பது அவசியம்.
நம் நாட்டில் இரசாயன முகப்பூச்சுகளுக்கு தடையில்லை. இதனால் தற்போது அனேகமானோர் சரும நிறத்தை கூட்டுவதற்கு தாமாகவே இந்த இரசாயன முகப்பூச்சுக்களை (Whitening Cream) மற்றும் Whitening Injections போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக அறிந்தேன். அவை முற்றிலும் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதனால் இவற்றைப் பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

11. அழகுக்கலையை கற்பது பெண்களுக்கு எவ்வாறு உதவுகின்றது?
அழகுக்கலை கற்ற பெண்கள் தம்மைத்தாமே அழகுபடுத்திக்கொள்வதால் அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஆளுமை விருத்தியும் ஏற்படும்.
இதையே தொழில் ரீதியில் பார்த்தால், இது ஒரு சுயதொழில், உங்களுக்கு நீங்களே முதலாளி என்ற மனமகிழ்ச்சி கிடைக்கிறது. சரி, பிழைகளை ஆராய்ந்து, நம் சிறந்த சேவையையும், உச்ச திறமையையும், நம் படைப்புத்திறனையும் தனித்துவமாக வெளிப்படுத்துகையில், வாடிக்கையாளரின் திருப்தி முழுமைப்படும். அப்போது சமூக அந்தஸ்தும் உழைப்புக்கு தகுந்த ஊதியமும் நம்மை வந்துசேரும்.

12. இன்று வேறு துறைகளைப் போன்று இந்த துறையிலும் போட்டி அதிகரித்துவிட்டதே… அதனை எவ்வாறு சமாளிக்கின்றீர்கள்?
போட்டி கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றே. ஆனால், நாம் நம் வழியினை மறக்காமல், நமது முயற்சியை கைவிடாமல், எப்போதும் நம் துறை குறித்த நவீன வரவுகளை புதுப்பித்துக்கொண்டே செல்லவேண்டும். புதுப்புது தேடல்களோடு நம்மிடம் உள்ள சரி, பிழைகளை நாமே இனங்கண்டு, எங்களுக்கான தனித்துவத்தினை உருவாக்கிக்கொண்டால் இத்துறையில் முன்னோக்கி நகரலாம். அடுத்தவருடன் போட்டி போடுவதில் கவனம் செலுத்தினால், நமது வழி மாற நேரிடலாம். ஏனெனில், இத்துறையைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு தனித்திறமை உண்டு. அதனால்தான் சிறந்த அழகுக்கலை நிபுணர்கள் தற்போது அதிகம் உருவாகியுள்ளனர்.

13. யார் யாருக்கெல்லாம் நன்றி கூற விரும்புகிறீர்கள்?
இத்துறையில் நான் தொடர்ந்து முன்னேற உதவிய எனது குடும்பத்துக்கும், எனக்கு ஊக்குவிப்பையும் பாராட்டுகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் என் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் நன்றி.

14. அழகுக்கலையை கற்க விரும்பும் பெண்களுக்கு உங்களது அறிவுரைகள்…
அழகுக்கலை சிறந்த தொழில்திறன் சார்ந்த துறைதான். இருப்பினும், இதில் பள்ளிப்பருவப் பெண்களே அதிகமாக கவனம் செலுத்துவதை தற்போது பார்க்கமுடிகிறது. அவர்கள் முதலில் தங்கள் பள்ளிப்படிப்பையே கவனிக்கவேண்டும்.
அழகுக்கலையில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதென்றால், அதை முறையாக கற்க விரும்பினால், தேர்ச்சி பெற்ற நிபுணர்களை ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து கற்பது அவசியம்.
உங்கள் குடும்பத்தினரோ நலன்விரும்பிகளோ அளிக்கும் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தி, அவர்களின் நம்பிக்கையை காப்பது அவசியம். அதில்தான் இத்தொழிலின் அந்தஸ்து தங்கியுள்ளது.

15. மேக்கப் பிரியைகளுக்கு நீங்கள் கூறும் பிரதான மேக்கப் டிப்ஸ்…
கூடுதலான பெண்கள் Makeup செய்துகொள்வதை விரும்புகின்றனர். முதலில் சருமப் பராமரிப்பு அவசியம். உங்கள் சரும வகைக்கும் சரும நிறத்துக்கேற்பவும் Makeup Products பயன்படுத்தவேண்டும்.
“வெள்ளையாக இருக்கணும்… அந்த மாதிரி மேக்கப் போடுங்க”, “நல்லா வெள்ளையாக்கிவிடுங்க” என பல வாடிக்கையாளர்கள் கேட்பதுண்டு. அதை விடுத்து, உங்கள் இயல்பான சரும நிறம் என்னவோ, அதே நிறத்துக்கேற்ப மேக்கப் போடும்போது இயற்கை அழகு கிடைக்கும்.
உங்கள் சருமத்துக்கு பொருத்தமான உற்பத்திகளை நீங்களே ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். அல்லது உங்கள் சருமப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறந்த Dematologistஐயும், மேக்கப் பற்றி தெரிந்துகொள்வதற்கு சிறந்ததொரு Makeup Artistஐ (MUA) தேர்ந்தெடுத்து நாடுங்கள்.
அழகுக்கலை நிபுணர்களின் தொழிலை மரியாதைக்குரியதாக கருதி, அதற்கேற்ப நடந்து கொள்வதும் அவசியமாகும்.

-ஸ்ரீபா

You must be logged in to post a comment Login