Cinema

உன்னை அறிந்தால்…

By  | 

இந்த உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அது ஆளாளுக்கு வேறுபடலாம், வித்தியாசப்படலாம். ஆனால், தனக்குள் என்ன திறமை ஒளிந்திருக்கின்றது என்பதே தெரியாமல்தான் இன்று பலர் உள்ளனர். ‘நான் எதற்கும் உதவாதவன். என்னிடம் எந்தத் திறமையும் இல்லை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது’ என்று தன்னைத் தானே தாழ்த்திக்கொள்கின்றனர். தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசியின் பிறப்புக்கும் இருப்புக்கும் ஓர் அர்த்தம் உண்டு. அதிலும் மனிதன் மேலானவன் இல்லையா! அற்புதமான மனிதப் படைப்பினுள்தான் பல திறமைகள் இலைமறைகாயாய் இருக்கின்றன.

இதற்கு பல உதாரணங்களை முன்வைக்கலாம். ஒருவனால் பெரிதாக கல்வியில் சாதிக்க முடியவில்லையெனில், தான் எதற்கும் உபயோகமில்லாதவன் என்று அவன் மூலையில் முடங்கிவிடக்கூடாது. அவனுக்குள் வேறு ஏதாவது ஒரு திறமை நிச்சயம் இருக்கும். அதை அவன் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவர வேண்டும். இன்று இந்த உலகில் சாதனைகள் நிகழ்த்தி, முன்னுதாரணமாக விளங்குகின்ற பலர் தன் திறமையை கண்டறிந்து, அதன் வழியை பின்பற்றி சாதித்தவர்கள்தான்.

திறமைக்கு வயதில்லை. கட்டுப்பாடுகள் இல்லை. ஒருவருக்கு நன்றாக பாடும்  திறமை இருந்தால், அதை வீட்டுக்குள், நான்கு சுவற்றுக்குள் தான் வரை மட்டுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல், வெளியுலகுக்கு தன் பாட்டுத் திறமையை எடுத்துச் செல்லவேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்  சுற்றியுள்ளவர்களின் அவதூறான பேச்சுக்கும், தன்னம்பிக்கையை உடைத்தெறியும் வசைச்சொற்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எனினும், அவையே நம்மை செதுக்கக்கூடிய உளி. நம்மை நாமே செதுக்கிக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம் எனில், அவர் பெண்ணாக இருந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. ‘பெண்பிள்ளைக்கு எதற்கு இந்த நடனம் எல்லாம்’ என நினைத்து அந்தப் பிள்ளையின் திறமையை வெளிக்காட்டவிடாமல் தடுத்துவிடும், இந்த சமுதாயம். இதுபோன்ற தடைகளை தகர்த்தெறிந்து எமது முன்னேற்றத்துக்காக போராடவேண்டும்.

ஒருவருக்கு தத்ரூபமாக சித்திரம் வரையமுடியுமெனில், அதை நான்கு பேருக்கு தெரியப்படுத்தவேண்டும். அப்போதுதான் அவரது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாடு என்றால், அதன் பின்னே செல்லுங்கள். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

பலர் நாமே வியந்து ஆச்சரியமாக பார்க்கும் அளவுக்கு வித்தியாசமான திறமைகளை தன்னகத்தே கொண்டிருப்பர். ஆனால், அதை வெளிக்காட்ட அவர்களே கூட முயல்வதில்லை. அதை அறிந்து, பாராட்டி, அவர்களை இன்னும் ஊக்கப்படுத்த பெற்றோர்களும் சரி, சுற்றியிருப்பவர்களும் சரி முன்வருவதுமில்லை.

இன்று சினிமா துறையினர் அல்லது ஏனைய துறையினரின் சாதனை வரலாற்றை கேட்டோமேயானால், ஆரம்பத்தில் திறமைக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, வாய்ப்பே கிடைக்காமல் பல இடங்களில் நிராகரிப்புகளை சந்தித்து வந்தவர்களாகத்தான் இருப்பர். இன்று அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டுபோய் விட்டிருப்பது அவர்களின் திறமையே என்பதையும் பார்க்கிறோம்.

பணம் படைத்தவனுக்குத்தான் இந்த உலகம் என்பதெல்லாம் பொய். எங்கு திறமை இருக்கிறதோ, அவனுக்கு நிச்சயம் ஒருநாள் வெற்றியின் வாசல் திறக்கும். மற்றவர்கள் உங்கள் திறமையை பாராட்டுவதற்கு முன், உங்களை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே பாராட்டுங்கள். முதலில், உங்களை நீங்கள் அறிந்தால்தான் இந்த உலகம் உங்களை அறியும்.

உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கு தகுதியுண்டு. காலம் வரும் வரை காத்திருக்காமல், இன்றே நல்ல நாள் என நினைத்து, வாழ்வில் முன்னேறுவதற்கான வழியை கண்டறியுங்கள்.
உன்னை நீ முதலில் அறிந்துகொள்!

து.சிந்துஜா

You must be logged in to post a comment Login