Stories

எண்ணங்களாலே…

By  | 

வழமை போன்று அந்த வார சந்தை களைகட்டிக்கொண்டிருந்தது. தனது காய்கறிகளை ஒழங்குபடுத்திக்கொண்டே வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை வழங்கிக் கொண்டிருந்தான், வசந்த். ஆனாலும், அடிக்கொரு தடவை சந்தை வாசலை பார்த்தபடி இருந்தான். அவனை அறியாமல் கண்கள் யாரையோ எதிர்பார்த்து தேடின.
நேரம் 10 மணியை கடக்கப்போகிறது. அப்போதுதான் இந்த சைக்கிள் சந்தைக்குள் நுழைந்தது. சுபானி சைக்கிளை விட்டிறங்கி அதனை நிறுத்தி வைக்க இடம் தேடினாள்.
இவள் வருகைக்காகவே காத்திருந்த வசந்த் ஏக்கத்தோடு அவள் நிற்கும் பக்கமாக தலையை நீட்டிப் பார்த்தபோது,
பக்கத்து தட்டில் தேங்காய் விற்கும் ராகவன்,


“என்ன மச்சி, உன் ஆளு வந்திடிச்சு போல” என்றான்.
‘டேய், சும்மா இருடா. அது நம்மட வழமையான கஸ்டமரு..”
“யாரு இல்லன்னா…? கஸ்டமருதான். காக்க வைச்சு பார்த்திருந்து தவிக்கவைக்கிற கஸ்டமருங்கிறதை… மச்சி உன் முகம் சொல்லுதேடா!”
“டேய் டேய்… வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருடா”
“சரி சரி.. மச்சி நீ நடத்து. அந்தா நேர உங்கிட்டதான் வருகுது. நீ வியாபாரத்தை பாரு..” என்றபோது, வந்தவளை பார்த்து,
“வாங்க வாங்க… என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிட்டீங்க..?” என்றான் வசந்த்.
“இல்ல வீட்டில கொஞ்சம் வேலை. அதையெல்லாம் முடிச்சிட்டு வாறேன்..”
“ஆமா.. போஞ்சி, கெரேட், லீக்ஸ் மட்டுமா இருக்கு…”
“இந்தா… பீட்ருட், மாலுமிரீஸ் எல்லாம் இருக்கே..”
“ஓகே.. எல்லாத்திலேயும் ஒவ்வொரு கிலோ போடுங்க” என்றவாறு அவன் அளவிடுவதை பார்த்துக்கொண்டிருந்த சுபானியிடம் மெல்ல பேச்சு கொடுத்தான், பக்கத்துத்தட்டு ராகவன்.
‘என்ன மேடம், நாங்களும்தான் தேங்காய் விற்கிறோம். எங்ககிட்டையும் வாங்கலாமில்ல…”
“ஆமா… இந்த தேங்காயெல்லாம் உங்க காணியில விளைஞ்சதா?”
“இல்லையே.. ஏன் அப்படிக் கேட்கிறீங்க..”
“நீங்க வெளியில வாங்கி வந்துதானே விற்கிறீங்க..”
“ஆமா, அதுக்கென்ன?”
“ஆனா, இவரு விக்கிற மரக்கறியெல்லாம் அவரோட தோட்டத்திலேயே விளைஞ்சது.. இந்த மாதிரி வியாபாரிகளுக்கு தான் நாம முன்னுரிமை கொடுக்கணும்.. அதுக்கப்புறமாதான் உங்க மாதிரி ஆட்கள் கிட்ட வாங்கணும். அதனாலதான் நான் வாரவாரம் இவர்கிட்ட வந்து வாங்கிறேன்.. புரிஞ்சுதா?”
“ஓ.. ரொம்ப நல்ல பொலிஸி.. வாங்குங்க தாயே…. வாங்குங்க…!”
“சரி… சரி.. நீங்களும் நல்லதா நாலு தேங்காயை போடுங்க!”
இவ்வாறாக மரக்கறிகளை வாங்கிக்கொண்டு சந்தையை விட்டு வெளிக்கிளம்பினாள், சுபானி.
“போயிடிச்சு… போயிடிச்சு… சைக்கிள் போயிடிச்சு… ஏண்டா வசந்த், இப்படியே வாறதையும் போறதையும் பார்க்கிறே… மரக்கறியை மட்டுமே வித்துக்கிட்டிருக்கிறே… இப்படியே போனா எப்படிடா லவ்வு டெவலப்பாகும்? நீ கொஞ்சம் உன் மனசில உள்ளதை வெளிக்காட்டணும் இல்லையா?”
“டேய்.. என் மனசில விருப்பம் இருக்கு. ஆனா அவ மனசில இருக்கான்னு தெரியலையேடா..”
“அதைத்தான் சொல்றன்… முயற்சி செய்து பாருன்னு”
“பயமா இருக்கேடா..”
இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த பயங்கரமான வெடிப்புச் சத்தம் சந்தையையே கிலிகொள்ளச் செய்தது. சத்தம் வந்த திசையை நோக்கி ஒடினான் ராகவன். கூடியிருந்த கூட்டம் சிட்டாய் பறந்தது.
சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்துவிட்டு, வந்து கொண்டிருந்த எதிர்த்தட்டு சிங்காரத்திடம்‘என்னண்ண… என்ன நடந்திச்சு” என வசந்த் கேட்க, சந்திக்கு அப்பால் இருந்த‘டிரான்ஸ்ஃபோமர்’ வெடித்துச் சிதறியதாக சொன்னார், அவர்.
“அப்பாடா.. நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். ஏண்ணே.. யாருக்காச்சும் ஏதாச்சும் பாதிப்பா?” வசந்த் கேட்க,
“தெரியல்லப்பா.. கொஞ்சம் இரு பார்ப்போம்” என்றார் அவர்.
அந்நேரம் அம்புலன்ஸ் வாகனம் விரைந்துவரும் சத்தம் மிக அருகாமையில் கேட்டது.
“அண்ணே.. அம்புலன்ஸ் வாற சத்தம் கேக்குது. யாராச்சும் மாட்டிக்கிட்டாங்களோ தெரியல்ல…”
“அப்படிதான் போல இருக்கு” என அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மரக்கறி வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஒதுக்கிக்கொண்டிருந்தனர்.
இனி வியாபாரம் செஞ்ச மாதிரிதான்…
இனி சனம் எங்க வரப்போகுது…
இப்படியாக வியாபாரிகள் பேசிக்கொள்ள மீண்டும் அம்புலன்ஸ் சத்தம்.
“மாட்டிக்கொண்டவங்கள ஏத்திட்டுப் போறாங்க போல…” யாரோ சொல்வது அவனுக்கு கேட்டது.
ராகவன் எங்கிருந்தோ தலைதெறிக்க ஓடிவந்தான்.
“டேய் வசந்த்… உன்னோட ஆள்தாண்டா மாட்டிக்கிட்டா.. ரோட்டில சைக்கிள் கிடக்குது. கூடை சரிஞ்சி மரக்கறியெல்லாம் சிதறிப்போய் கிடக்குது. அம்புலன்ஸில ஏத்துறப்போ நான் பார்த்தேண்டா. ஒரே இரத்தம்…”
யாரோ தலையில் சம்மட்டியால் அடிப்பதை போன்றிருந்தது, வசந்துக்கு. தலைசுற்ற ஆரம்பித்தது.
“மச்சான் ஒண்ணும் யோசிக்காத. கடையை சாத்து.. உடன ஆஸ்பத்திரிக்குப் போய் என்ன ஏதுன்னு பாத்துட்டு வருவோம்..”
இருவரும் மருத்துவமனை சென்று அவளுக்கு சிகிச்சை வழங்கும் ஐ.சி.யூ வார்ட்டை தேடிச் சென்றபோது வெளியே ஒருவர் அங்குமிங்கும் தவிப்போடு நடந்துகொண்டிருந்தார்.
அவரிடம் ராகவன்,
“ஐயா, அந்த டிரான்;ஸ்ஃபோமர் வெடிச்சு அம்புலன்ஸில கொண்டு வந்தவங்களை..”
“ஆமா… நீங்க யாரு?”
“ஐயா, நாங்க சந்தையில வியாபாரம் செய்றவங்க. தங்கச்சி அப்பதான் வந்து எங்ககிட்ட சாமான் வாங்கிட்டுப் போச்சு. இப்படியாகிப் போச்சே…”
“தம்பிகளா.. அவ என் புள்ளைதாம்பா. கால்ல பெரிய காயம். அதனால அவளுக்கு ரத்தம் அதிகமா போயிடிச்சு. ஒட்சிசன் குடுத்து ஐ.சி.யூவில வைச்சிருக்கிறோம். உடனே ரத்தம் ஏத்தனுமுன்னு சொல்லுறாங்க. அதில ஒரு பிரச்சினை…
இவளோட ப்ளட் குரூப் ஏ பொசிட்டிவாம்… இதை எடுக்கிறதுதான் கஷ்டம். உடனே அதுக்கு ஏற்பாடு பண்ண சொல்றாங்க.
என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல்ல. மகன் வரும் வரைக்கும் பாத்துக்கிட்டு இருக்குறேன்” என்றார் படபடப்புடன்.
“ஐயா பயப்படாதையுங்க. என்னோட ப்ளட் குரூப்பும் அதுதான். நான் தாறேன் ஐயா உடன போய் டொக்டர் கிட்ட பேசுங்க” என்றான், வசந்த்.
அவன் அப்படி சொன்னதும் சுபானியின் அப்பா விரைந்து ஓடினார்.
வசந்தின் எண்ணப்படி ரத்தம் பரிமாற்றப்பட்டது.
சுபானியின் அப்பா வசந்தை நன்றியோடு பார்த்தார்.
அப்போது
“ஐயா, உங்களை டொக்டர் கூப்பிடுறாரு” என்கிற குரல் வர, மருத்துவரை பார்க்கச் சென்றார்… போனவர் வருவதற்குள் வசந்தும் ராகவனும் தவித்துப்போயினர்.
முகத்தில் எந்தக் கலவரமும் இல்லாமல் திரும்பி வந்தார் சுபானியின் அப்பா.
“டொக்டர் என்ன சொன்னாரு?”
“பயப்பட தேவையில்லையாம். நாளைக்கு வார்ட்டுக்கு மாத்திடுவாங்க. நீங்க நாளைக்கு கட்டாயம் வரணும்…” என்றார்.
“அப்ப வாங்களேன்… எல்லாரும் போயிட்டு நாளைக்கு வருவோம்…” என ராகவன் கூற,
“நீங்க போங்கப்பா. நான் மகனை வரச்சொல்லியிருக்கேன். அவன்; வந்ததும் வாறேன்…” என கூறிவிட்டார், அவர்.
அடுத்த நாள், அந்திநேரம்…. அந்த பெருமளவு சனக்கூட்டத்துக்கு மத்தியில் வார்ட்டுக்குள் நுழைந்தார்கள், வசந்தும் ராகவனும்.
“வாங்க தம்பிகளா வாங்க…”
அப்பாவின் அமர்க்களமான வரவேற்பு வசந்தின் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டது. கட்டிலை பார்க்கிறான்… சுற்றிலும் பலர் நின்றனர்.
‘நான் சொல்லல்ல. இந்த தம்பிதாம்மா ரத்தம் தந்திச்சு… இவங்கமட்டும் சரியான நேரத்தில வரல்ல.. சுபானி நிலைமை மோசமாகியிருக்கும்” என சுபானியின் அப்பா சொன்னபோது அனைவரது கண்களும் வசந்தை வட்டமிட்டன.
வசந்த் மெல்ல சுபானியை பார்த்தான்.
“ரொம்ப ரொம்ப நன்றீங்க… ஆனந்த், நான் உங்ககிட்ட அடிக்கடி சொல்லுவேனே… அந்த மரக்கறி கடைக்காரர் இவர்தாங்க…” என்றாள் தழுதழுத்த குரலில், சுபானி.
அவள் இரு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்தாள்.
“உங்க உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்ல… ஆனாலும் எங்க அன்பளிப்பா இந்த தொகையை வச்சுக்கோங்க” என்றான் ஆனந்த்.
“இதையெல்லாம் எதிர்பார்த்து நான் எந்த உதவியும் செய்யல. பணம் எதுவும் வேணாம்…” என்றான், யார் எவரென்பது புரியாதவனாக.
“தம்பி, இவர் வேற யாருமல்ல. என் மகள கட்டிக்கப்போறவரு…” என சுபானியின் அப்பா சொல்ல, வசந்த் ஏமாற்றத்தோடு ராகவனைப் பார்த்தான். ராகவன் ஆகாயத்தை பார்த்தான்.
அந்த ஒருதலைக் காதலனின் எண்ணங்களாலான ஒரு கற்பனைக்கோட்டை இடிந்து தரைமட்டமானது.

-ராதா

You must be logged in to post a comment Login