Cinema

எதையுமே ‘பொசிட்டிவ்’வாக எடுத்துக்குவேன்!

By  | 

தன் நடிப்பு, வாழ்க்கை பற்றி பிரபல இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி:

குடும்பம்
என் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், மனைவி ஜெயலட்சுமி, அக்கா பொண்ணு. என் அம்மாவுக்கு பிறகு, என்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார். அவர் தான் என் உலகம்.

மகன், பிளஸ் 2 முடித்து, கல்லுாரி செல்கிறார்; மகள், ஏழாவது படிக்கிறார்.மகன் பிளஸ் 2 படிக்கிறதுக்குள்ள, வீடே ரணகளமாக இருந்தது. என்ன மார்க் எடுப்பாரோ அப்படி இப்படின்னு, பலரும் பல விதமான சிந்தனையில் இருந்தாங்க. பிளஸ் 2வில், 79.6 சதவீத மார்க் எடுத்து, பாஸ் ஆகி இருந்தார். உண்மையில் பாராட்டி னேன். ‘மிக உயர்ந்த மார்க் வாங்கியிருந்தாலும் கஷ்டம் தான்; இதற்கு குறைவாக இருந்தாலும் கஷ்டம் தான். 60க்கும், 100க்கும் இடையில் மார்க் வாங்கி இருக்கிறாய்; வாழ்த்துக்கள்’ என்றேன். அந்த மார்க் எடுத்தவர்களுக்குத் தான், முன்னாடி, பின்னாடி இருப்பவர்கள் உதவி செய்வர் என்றேன்.

திரையுலக பிரவேசம்
பார்த்தாலே பரவசம் படத்தில், நடிகர் விவேக் உடன், ஒரு சீனில் தான் நடிக்க வைத்தார், இயக்குனர் இமயம் கே.பாலசந்தர். அவரின் ஆசிர்வாதத்தில், இன்று முழு நேர நடிகராக, ஏராளமான படங்களில் நடித்து வருகிறேன். அதுக்கான விதை, பாலசந்தர் போட்டது. நல்ல நண்பனாக, குருவாக, தந்தையாக இருந்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருக்கிறார். அவர் இறந்து விட்டார் என்கின்றனர். ஆனால், எனக்கு அவர், உயிருடன் இருப்பது போன்ற நினைப்பே உள்ளது. அந்த அளவுக்கு என்னுடன் நிறைந்திருக்கிறார் அவர்.

லொக்டவுன்
இந்த, ‘லொக்டவுன்’ நேரம், பல அற்புதமான உணர்வுகளை, சிந்தனையை வழங்கியுள்ளது. நிறைய விஷயங்களை புதிதாக கற்றுக் கொடுத்துள்ளது. ‘மரணம் என்றால் என்ன; வேலையே இல்லை என்றால் நாம் என்ன செய்வோம்; எப்படி பிழைப்போம்’ என, பல விஷயங்களை கற்றுக் கொடுத்து உள்ளது. அதுபோல, பணம் இருக்கிறவன், இல்லாதவன் என, எல்லாரையும் ஒன்று போல வைத்திருக்கிறது இந்த கொரோனா. இயற்கை, ‘ரீசெட்’ பொத்தானை அமுக்கியது என்றால், எல்லாரும் பின்னாடி போயிட்டு திரும்பித் தான் வரவேண்டும் என, அடிக்கடி நான் சொல்வேன். அதைத் தான் கொரோனா செய்துள்ளது.

மீம்ஸ்
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி, ‘மீம்ஸ்’ வரும் போது, அதை ஆர்வமாக எடுத்து வந்து என் மகன் காட்டுவார். அப்போது அதில் உள்ள கருத்துகளை பார்த்து, அவர் ஆவேசப்படுவார். ‘இதையும் பாராட்ட வேண்டும்; பொசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என நான் சொல்வேன்.எனக்காக அவர்கள் எவ்வளவு உழைப்பை செலவிட்டுள்ளனர் என்று பார் என்பேன். அப்படித் தான் நான் எடுத்துக் கொள்வேன். சினிமாவும், காலமும் இப்போது ரொம்ப மாறிக்கிட்டு இருக்குது!

You must be logged in to post a comment Login