Antharangam

எனக்கொரு ஆசை!

By  | 

கேள்வி:

எனக்கு வயது 33. நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். எனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன். இப்போது எனக்குத் திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் நினைக்கின்றனர். அதில் எனக்கும் விருப்பம்தான். ஆனால் எனக்கென்று ஒரு ஆசை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே அது! குழந்தை இருந்தாலும் சரி. திருமணம் செய்துகொள்வதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் எனது பெற்றோர் அதற்குத் தயாராக இல்லை. கடுமையாக எதிர்க்கிறார்கள். எனது ஆசையில் தவறேதும் இருக்கிறதா?

 பதில்:

ஆஹா… இந்தக் காலத்தில் இப்படியொரு ஆசையா? வரவேற்கத்தக்கது மட்டுமன்றி, பாராட்டுக்களும் உங்களுக்கு உரித்தாக வேண்டும். ஆனால், நடைமுறையில்…?

முதலில், உங்களுக்கு இப்படியொரு ஆசை ஏற்பட்டது ஏன் என்பதை நீங்களே உங்களுக்குள் ஆராய்ந்து பாருங்கள். நிச்சயமாக இந்த ஆசைக்கு ஒரு ஆரம்பப் புள்ளி இருக்கவேண்டும். ஒருவேளை, இளம் வயதில் புரட்சிகரமான சிந்தனைகளுடன் வளர்ந்திருந்தீர்கள் என்றால் இப்படி ஒரு யோசனை தோன்றியிருக்கலாம். ஆனால், இளம் வயது ஆசைகள், வரவிருக்கும் உங்கள் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்கள் விருப்பத்தில் நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், அதற்கான காரணங்களை உங்கள் குடும்பமோ, சமூகமோ – ஏன், ஒருவேளை உங்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வரும் கணவனை இழந்த பெண் கூட – ஏற்றுக்கொள்ளுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம் சமூகத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. யாரேனும் ஒருவர், மற்றவர்களின் போக்குக்கு எதிராக, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முயன்றால், அதில் அவருக்கு என்ன நன்மை என்றே ஆராயும். மேலும் அவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதால்தான் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் நம்பும். உங்கள் விடயத்திலும் அப்படித்தான் நடக்கும்.

கணவனை இழந்த பெண்ணை, அதுவும் குழந்தையுள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு, உங்களக்கு உடல் ரீதியாக ஏதோவொரு பிரச்சினை இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கும். இதுபோன்ற பேச்சுக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியே மாளாது.

மேலும், உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் பெற்றோர் எவ்வகையிலும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்னதான் இது உங்களது தனிப்பட்ட விருப்பம் என்றாலும் சகோதரன் என்ற முறையில் நீங்கள் எடுக்கும் பல முடிவுகள் உங்கள் சகோதரிகளின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏன், நீங்களே கூட உங்கள் முடிவை திருமணத்தின் மறுபரிசீலனை செய்து வருந்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

எனவே, உண்மையில் அவ்வாறான ஒரு பெண்ணுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அப்படியொரு  பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவரது எதிர்கால நலனுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சியுங்கள். அவருக்கு ஒரு வேலை வாய்ப்பு அல்லது சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள். அவரது குழந்தையின் கல்விச் செலவைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். உதவுவதற்கு இவ்வாறு பல வழிகள் இருக்கின்றன.

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உங்களது பரோபகாரச் சிந்தனை வரவேற்கத்தக்கதே என்றாலும் அதற்காக உங்களது வாழ்க்கையைப் பணயம் வைக்க வேண்டும் என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல!

You must be logged in to post a comment Login