Antharangam

என்னை அறியாமலேயே…!

By  | 

கேள்வி:

எனக்கு வயது 25. அடுத்த மாதம் எனக்குத் திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். ஆனால், என்னை அறியாமலேயே நான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருக்கிறேன். இதனால் எனக்கு மிக பயமாக இருக்கிறது. யாரிடமும் இதனைச் சொல்ல முடியாமல் எனக்குள்ளேயே நான் அழுகின்றேன். இதனால் திருமணத்தின் பின் எனக்குப் பிரச்சினை ஏதும் ஏற்படுமா?

பதில்:

உங்களை அறியாமலேயே துஷ்பிரயோகப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்றால், சிறு வயதிலேதான் அது நடந்திருக்க வேண்டும். அந்தப் பாதிப்பு உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. அதுவே, பயமாக வெளிப்படுகிறது. இதற்கு, உளவள ஆலோசனை மிக முக்கியம். அதைவிடவும், அந்த ஆலோசனைகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதும் மிக முக்கியம்.

திருமணத்தின் பின், சில வேளைகளில், உங்கள் கணவர் உங்களை நெருங்கும்போது உங்களுக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து உங்களைச் சங்கடப்படுத்தலாம். இதனால், தாம்பத்திய உறவில் சில குளறுபடிகள், திருப்தியற்ற தன்மை என்பன ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால், நாளடைவில் இது சரியாகிவிடும்.

இந்தச் சங்கடத்தை விரைவிலேயே உங்கள் மனதிலிருந்து களைய வேண்டும் என்றால், உறவுக்கு முன் முடிந்தவரை கணவருடன் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, இயல்பாகவே உங்கள் உறவை ஆரம்பியுங்கள். இதனால், உங்கள் அருகில் இருப்பவர், உங்களைத் தீண்டுபவர் உங்களது கணவர் தான் என்ற எண்ணம், உங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.

மேலும், பழைய சம்பவம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்போது, அதிலிருந்து உடனடியாக மீள வழிபாருங்கள். இது, உங்கள் ஒருவரது முயற்சியால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியம். எனவே, இதற்கு நீங்கள் உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

You must be logged in to post a comment Login