Interview

என்ன அவமானப்படுத்திய அந்த சிலரால் வென்றிருக்கிறேன்… 

By  | 

இளம் இயக்குநர் யுவன்

1.வணக்கம் சகோதரா!
அன்பு கலந்த வணக்கம் அண்ணா

2. முதலில் உங்களைப் பற்றிய அறிமுகம்…
எனது பெயர் வு.யுவராஜன். நான் அழகிய தலவாக்கலையின் லோகி தோட்டத்தில், தேயிலை செடிகளுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தற்போது எனது சமூகத்தை மேலே கொண்டுவர என்னால் முடிந்த அனைத்து விடயங்களையும் செய்து வருகிறேன்.

3. இதுவரை எத்தனை குறும்படங்களை இயக்கியுள்ளீர்கள்?
மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளேன். முறையாக, சதை,  விஷமி, CD4 ஆகியன.

4. இறுதியாக நீங்கள் இயக்கி வெளிவந்த CD4 திரைப்படம் பற்றி சொல்லுங்கள்…?
CD4 என்பது நான் நீண்ட நாட்களாக எடுத்தே ஆகவேண்டும் என்று காத்திருந்து எடுத்த படம். வழமையாக விடுமுறை நாட்களில் எமக்கு அருகாமையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு சேவை செய்ய செல்வேன். அங்குள்ள அம்மாக்களின் கதைகளை கேட்கும்போது மனிதப்பிறவியே வெறுக்கும். அப்படிப்பட்ட விடயங்கள் இனி நடைபெறுவதைத் தடுக்க முடியாது. ஆனால், குறைக்க முடியும். அதன் காரணமாகத்தான் இந்த குறும்படத்தை இயக்கினேன்.
அத்தோடு CD4 என்பது எமது இரத்த கலன்களில் காணப்படும் ஒருவகை உயிரணு. அது உள்ளவர்கள் கிட்டத்தட்ட 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வர். இவ்வாறு ஜப்பான் நாட்டில் ‘சிரஞ்சீவிகள் தேசம்’ என்றொரு கிராமமே உள்ளது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அன்புதான் ஆயுளின் உச்சம்.

5. இப்படத்தில் நடித்த நடிகர்களைப் பற்றி அறிமுகம் செய்யலாமே, அவர்களின் கதாபாத்திரங்களுடன்…
இதில் சதீஸ் (ஆசிரியர்) மகனாகவும், சந்ராணி (ஆசிரியை) அம்மாவாகவும், திலீபா மருமகளாகவும், பிரசாந்தி முதியோர் இல்ல பொறுப்பதிகாரியாகவும், ஹரி டொக்டராகவும், கமேஷ்நாத் முதியோர் இல்ல வேலைக்காரராகவும் நடித்துள்ளனர்.

6. இக்குறும்படத்தில் பணியாற்றிய ஏனைய துறை சார்ந்தவர்கள்…
இதில் இரண்டு ஆசிரியர்கள் நடித்துள்ளனர். வேறு துறையை சார்ந்தவர்கள் யாரும் இல்லை.

7. உங்கள் குறும்படங்களில் நா வியந்தவை காட்சியமைப்புதான். கெமரா சிறப்பாக இயக்கப்படுகிறதே… இந்தக் கலையை எங்கே கற்றீர்கள்?
இதற்கு முழு காரணம் என் அண்ணாதான். அவர்தான் எனக்கு திரைப்படத்தின் காட்சியமைப்புகளை எவ்வாறு திட்டமிட வேண்டும், எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்ற அனைத்து விடயங்களையும் கற்றுத் தந்திருக்கிறார். இவ்வாறான காட்சியமைப்புகளுக்கு அவர்தான் காரணம், பிரசாத் அண்ணா…!

 8. உங்கள் குறும்படக் காட்சிகளில் ‘ஏங்கில்’ வைப்பது, அதைப் படம் பிடிப்பது இதை முழுக்க கெமராகாரரிடம் ஒப்படைத்து அவரின் சுதந்திரத்துக்கு இடம் கொடுத்துவிடுவீர்களா? இல்லை எல்லாம் உங்களது தெரிவுதானா?
இல்லை, நான் ஒரு கதையை எழுதும்போதே அதன் காட்சியமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் பதித்துவிடுவேன். நாங்கள் சூட் செய்ய திட்டமிட்ட அவ்விடத்தை நான் சில நாட்களுக்கு முன்பதாகவே சென்று பார்வையிடுவேன். அத்தருணமே நான் ‘ஏங்கில்’களை நிர்ணயித்துவிடுவேன்.

9. இலங்கையின் குறும்பட துறையின் தற்போதைய நிலை?
இலங்கையில் குறிப்பாக, மலையகத்தில் ஒரு குறும்படத்தை எடுப்பது போர்க்களத்தில் போர் புரிவதற்கு சமன். ஏனென்றால், இங்கு எந்த இடத்தில் கெமராவை வெளியே எடுத்தாலும், ஆயிரம் பிரச்சினைகள் வரும். யார் யாரோ பிரச்சினைக்கு வருவார்கள். இதற்கு யாரும் ஒத்துழைப்பு வழங்குவதும் இல்லை. அப்படியே ஒரு படத்தை செய்தெடுத்தாலும் அதற்கான டப்பிங் செய்வதற்கு கொழும்புக்கே செல்லவேண்டும். அதற்கும் ஒரு கணக்கு செலவாகும். இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக மலையகத்தில் இன்னும் சில திறமையான இளைஞர்கள் அடையாளமின்றி இருந்து வருகின்றனர். ஏன், இலங்கையில் எடுக்கப்பட்ட ‘கோமாளி கிங்ஸ்’ என்ற திரைப் படம் ஒரு தரமான திரைப் படம். ஆனால், அதற்கான ஒரு அங்கீகாரத்தை நம் நாடு வழங்க வில்லையே.

10. திரைப்படத்துறையை முறைப்படி கற்றுள்ளீர்களா அல்லது சுயமாக கற்றவைகளா?
இது முறைப்படி கற்றவையல்ல. எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து கலைநிகழ்வுகளும் என்னூடாகத்தான் நடைபெறும். அங்குதான் நான் இயக்கிய பல கலைநிகழ்வுகளை அரங்கேற்றி ஒரு இயக்குநரானேன். அதன் பிறகு நான் பார்த்த திரைப்படங்களை வைத்துத்தான் இயக்குகிறேன். இன்றும் ஒவ்வொரு படத்திலும் நான் பல அனுபவங்களை பெற்றிருக்கிறேன்.

11. உங்களது ஏனைய துறைசார்ந்த விடயங்கள்?
எனக்கு கலைத்துறையில் ஈடுபாடு அதிகம். அத்தோடு கவிதை எழுதுவேன், ஏதோ கொஞ்சம் நன்றாக வரைவேன்.

12. நடிகர்களை எப்படி தெரிவு செய்கிறீர்கள்? தேர்வு வைத்தா, தெரிந்தவர்களைக் கொண்டா?
மலையகத்தைப் பொறுத்தவரை நடிப்பதற்கு நடிகர்கள் குறைவு. அதேபோல இங்குள்ள பெரும்பாலானோர் விஜய், அஜித்தைப் போல மாஸ் கதாபாத்திரத்தையே விரும்புகின்றனர். ஒருவர் நடிக்க முன்வர வேண்டுமானால் முதலில் அவர் தன்னை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை எடுப்பதற்காக தான் என் நண்பர்களை வைத்து முதலாவது படத்தை இயக்கினேன். அதன் தொடர்ச்சியில் இந்த CD4க்கு முக்கிய சில கதாபாத்திரங்கள் எனக்கு தேவைப்பட்டது. அதன் பின் அதற்கேற்ப ஆட்களை தேடினேன். அவ்வாறு எனக்கு ஓரிரு நாட்கள் பழகியவர்களையும் சதீஸ் ஆசிரியரையும் இணைத்துகொண்டு இப்படத்தை இயக்கினேன்.

13. உங்களது படைப்புகளுக்கான முதலீடு எப்படி கிடைக்கின்றன?
நான் எடுத்த மூன்று குறும்படங்களுமே யாரு டைய தலையீடுமின்றி எடுத்தவையே.
மலையகத்தில் நான் இக்குறும்படங்களை எடுக்க எத்தனையோ பேரிடமும், எத்தனையோ அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் சென்று உதவி கேட்டிருக்கிறேன். அவர்கள் ‘உங்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது, எதற்காக நாங்கள் கொடுக்கவேண்டும்’ என்றெல்லாம் சொல்வதை கேட்டிருக்கிறேன். நிறைய அவமானங்களை பெற்றிருக்கிறேன். அந்த கோபத்தில் சிறிது சிறிதாக பணம் சேர்த்தேன். அத்தோடு நான் Silk Thread நகைகளும் செய்வேன். அதில் வரும் பணத்தையும் நான் இதற்கு முதலீடு செய்வேன். நடிப்பவர்களுக்கு கூட என்னுடைய செலவில்தான் அனைத்தும் செய்வேன்.

14. உங்களது இந்தத் துறையின் சாதனையில் உங்கள் பெற்றோரின் பங்களிப்பு?
இதில் அதிக பங்கு என் அம்மாவுக்கே உண்டு. அம்மாவின் ஆசி பெற்று செல்லும் அனைத்து விடயங்களுமே எனக்கு வெற்றிதான். ‘உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்’என்று இன்றுவரை என்னுடைய சந்தோஷத்துக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர்தான் என் வாழ்வின் வெற்றி.

15. இலங்கையில் குறும்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றியளிக்கிறதா? அதற்கான உங்கள் முன்னெடுப்புகள்?
மன்னிக்கவும். நான் வர்த்தகத்துக்காக குறும்படங்களை இயக்கவில்லை. ஆதலால் இது பற்றி எனக்கு தெரியாது. நான் சமூக மாற்றத்துக்காகவும் எனது ஆசைக்காகவும் தான் குறும்படங்கள் இயக்குகிறேன். எப்படியாவது நன்றாக பயிற்சி செய்து ஒரு முழுநீள வெற்றி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது ஆசை!

16. மலையகத்தை சேர்ந்த படைப்பாளர்கள், சமூக பொறுப்பாளர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த வரவேற்பு அல்லது ஊக்கம் குறித்து?
என்னுடன் வெகுகாலமாக பேசாமல் இருந்த எனது ஜவ்பர் ஆசிரியர் நான் குறும்படங்களை தயாரித்த பிறகு பேச ஆரம்பித்தார். அது மிகப்பெரிய ஊக்கம். அத்தோடு மீடியாவின் தொடர்புகள் கிடைத்தது. நிறைய சமூக நல அமைப்புகளுடன் இணைய சந்தர்ப்பம் கிடைத்தது. இவை அனைத்தும் எனக்கு மேலும் ஊக்கத்தை தந்தன.

17. உங்கள் அடுத்த படைப்பு எப்போது வெளிவரும்? அது எதை கருவாகக் கொண்டதாக இருக்கும்?
ஏப்ரல் மாதம் வெளிவரும். அந்தப் படைப்பு முழுக்க முழுக்க மலையக சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யதார்த்தமான படைப்பாக அமையும்.

18. இத்தனை குறும்படங்களை இயக்கி உங்களை நீங்களே இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்த ஆதரவை அல்லது வரவேற்பை நம் சமூகம் கொடுத்திருக்கிறதா?
நிச்சயமாக… முன்பு ‘உங்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது’ என்றெல்லாம் பேசுவர். ஆனால், இப்போது ‘இவர் ஒரு குறும்பட இயக்குநர்’என்றே கூடுதலானோர் என்னை அறிமுகம் செய்கின்றனர். ஆனால், தயாரிப்பாளர் என்ற வகையில் யாரும் உதவி செய்ய விரும்புவதில்லை. ஆகவே, என் மீதான நம்பிக்கையை வளர்க்க நான் இன்னும் நிறைய செய்யவேண்டும் என்று நினைக்கின்றேன். அதை நிச்சயமாக செய்வேன்.

19. உங்களது இந்த வெற்றிக்கு காரணம் யார்? உங்களது நன்றிக்குரியவர்கள் யார் யார்?
என்னை அவமானப்படுத்திய அந்த சிலரால் வென்றிருக்கிறேன். அவர்கள் இல்லையெனில்இ இவ்வாறான குறும்படங்களை நான் தயாரித்திருக்க மாட்டேன். அத்தோடு எந்நேரமும் எனக்கு ஆலோசனைகளை வழங்கும் லோஜிக்கும் எனது நன்றிகள்!
– ப. கணகேஸ்வரன் (கேஜி)

 

You must be logged in to post a comment Login