Q&A

எல்லாமே நோய்பயம்!

By  | 

கேள்வி
வயது 46. திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. கணவர், மருந்துக்கடை வைத்திருக்கிறார். எனக்கு 18 வயதில் மகன், 16 வயதில் மகள் இருக்கின்றனர்.

எனக்கு ஒரு அண்ணன். நான் அவர் மீதும், அவர் என் மீதும் அளவிட முடியா பாசம் கொண்டுள்ளோம். சீட்டு கம்பெனியில் பணிபுரியும் அண்ணனுக்கு திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு 10 வயதில் மகன் இருக்கிறான்.

அண்ணனின் மனைவி என்னுடன் படித்தவள். உயிர்த்தோழி. நட்பை உறவாக்க விரும்பி, அவளை அண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இருவரும் காதலர்களாக பல விதங்களில் ஊக்குவித்தேன்.

இருவருக்கும் திருமணமான ஆறு மாதத்தில், பிரச்சினை ஆரம்பித்தது. அண்ணனின் மனைவி, தாங்க முடியாத காது வலி என துடித்தாள்.

காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காட்டினான், அண்ணன்.

“எந்த பிரச்சினையும் இல்லை…” என கூறினார், மருத்துவர்.

அடுத்த சில மாதங்களில் நெஞ்சு வலிக்கிறது என துடித்தாள்.

“எனக்கு இதயத்தில் ஏதோ பிரச்சினை. ஓட்டை கீட்டை இருந்தாலும் இருக்கும். நான் இன்னும் சில நாட்களில் செத்துவிடுவேன்…” என புலம்புவாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துப் போய், இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்தான், அண்ணன்.

‘நோர்மல்’ என ரிசல்ட் வரும். “டாக்டர் டூப்ளிகேட்” என்பாள்.

சில மாதங்கள் ஆகின. வயிற்றை கசக்கி பிழிந்து, தீயில் இட்ட புழு போல துடித்தாள், அண்ணி.

“எனக்கு சிறுநீர் சரியா போகல. அந்த பாதையில் எரிச்சல். கர்ப்பப்பையில கத்தி எடுத்து குத்தின மாதிரி வலிக்குது. சந்தேகமே இல்லை… எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வந்துருச்சு…” என வீறிட்டாள்.

வழக்கம் போல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, ‘எந்த பிரச்சினையும் இல்லை…’ என ரிசல்ட் வந்தது. மருத்துவர்களை திட்டித் தீர்த்தாள், அண்ணி.

தொடர்ந்து, புதுப்புது நோய்கள் வந்திருப்பதாக குதிப்பாள். தலையில் எண்ணெய் தேய்த்து வார மாட்டாள். அழுக்கு நைட்டியில் இருப்பாள். குழந்தைகள் உட்பட எங்கள் அனைவரையும் சபிப்பாள்.

இதில் பரிதாபத்துக்குரிய பிறவி யாரென்றால், அண்ணன்தான். சம்பாதித்த பணமெல்லாம் மனைவிக்கு மருத்துவ செலவாய் கரைந்தது.

“என் வாழ்க்கை நாசமாக நீதாம்மா முழு முதல் காரணம்…” என்ற அர்த்தத்தில், என்னை பார்ப்பான்.

என்ன செய்தால், அண்ணனின் வாழ்க்கையில் ஒளியேற்றலாம் என கூறுங்கள்…

பதில்
திருமணத்துக்குப் பின், பெண்கள், தேவதைகளாக மாறுகின்றனரா, சாத்தான்களாக மாறுகின்றனரா… சாத்தான்கள், தேவதைகளாக மாறுகின்றனரா என்பது அவர்களுக்கு அமையும் கணவனை பொறுத்தது.

ஆரோக்கிய நிலையில் இருந்துகொண்டு, உலகின் எல்லா நோய்களும் தன்னை தொற்றியுள்ளன என பயப்படும் மனநோய்க்கு ‘நோஸோபோபியா’ என்பர்.

சிறு வயது துன்பியல் சம்பவங்கள், பாலியல் வன்முறைகள், பெற்றோரால் உதாசீனப்படுத்தல் போன்ற காரணங்களால் உன் அண்ணிக்கு மன நோய் வந்திருக்கலாம். எல்லாவற்றையும் விட முக்கிய காரணம், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட அதிருப்தியாக இருக்கலாம்.

கணவனின் சம்பாத்தியம் திருப்திகரமாய் இல்லை. தாம்பத்தியம் போதாது… மனதை குத்திக் கிழிக்கும் அளவுக்கு மோசமான வார்த்தைகளால் பேசுகிறான்… தாம்பத்தியத்தில் ‘சாடிஸ்டிகல்’ முறைகளை கையாள்கிறான்… மனைவியின் அந்தரங்க விடயங்களில் அத்துமீறுகிறான் போன்ற விடயங்கள் கூட, அதிருப்திக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கக்கூடும்.

ஒரு நல்ல நோக்கத்துடன்தான், உன் தோழியை அண்ணனுக்கு மணம் முடித்திருக்கிறாய். பிள்ளையார் பிடிக்க குரங்காய் போயிருக்கிறது.

அண்ணியை ஒரு பெண் மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல். மன அழுத்தத்திலிருந்து அண்ணி விடுபட, அவர் கற்றுத் தருவார்.

அண்ணியிடம் மனம் விட்டுப் பேசவேண்டும், அண்ணன். அவர் சம்பந்தமான எவ்வகை அதிருப்திகள் இருந்தாலும், அவற்றை  முழுமையாக களைய ஆவன செய்யவேண்டும்.

நீ, உன் அண்ணியிடம் தனியாக பேசு.

பான்பராக் போன்றவற்றை அண்ணி உபயோகித்தால் தடுத்து நிறுத்து. அதற்கு பதில், மெல்வதற்கு கிராம்பு கொடு. புத்தகம் வாசித்தல், செல்லப் பிராணிகளை வளர்த்தல், தோட்டம் பராமரித்தல், தையல் வேலை, இசை கேட்டல், ஓவியம் வரைதல் போன்ற பொழுது போக்குகளில் அண்ணியை ஈடுபடுத்து.

உங்களது அன்பும் ஆதரவும் மருத்துவரின் மன நல சிகிச்சையும் அண்ணியை ‘நோர்மல்’ வாழ்க்கைக்கு திரும்ப செய்யும். வாழ்த்துக்கள் சகோதரி!

You must be logged in to post a comment Login