Others Poetries

எழுதிக் கொண்டேயிருங்கள்…

By  | 

கூரிய கத்தியும்
குறி பார்த்து சுடும் துப்பாகியுமே ஆயுதமென்ற வரையறைக்குள் இருந்து வெளியே வாருங்கள்

வெற்றுக் காகிதம் விலைமதிப்பற்ற ஆயுதம் என்பதையும் எழுதுகோல் என்பது உலக ஆயுதங்களின் அதிபதி என்பதையும் உணர்ந்திடுங்கள்

காதலை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் காலம் முழுதும் எழ முடியாதென்பதை கருத்தில் கொண்டு எழுங்கள்

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி கிடைக்கும் வரை எழுதுங்கள்…

தொடுக்கப்படும் தொடர் கொலைகள் இடை நிறுத்தப்படும் வரை இடை நிறுத்தாமல் எழுதுங்கள்…

தொட்டுத் தழுவ வேண்டிய தொட்டில் மலர்களை கட்டிலில் களியாடும் கயவர்களை சினந்து சீற்றத்துடன் எழுங்கள்…

கண்ணியமற்று பெண்ணினத்திற்கு எதிராக துஸ்பிரயோகங்களை தொடரும் காளையர்களை காறி உமிழ்ந்து எழுதுங்கள்…

இன்றைய இயற்கை வளச் சுரண்டல்களால் நாளை நாம் சுமக்க போகும் சுமைகளை சுட்டிக் காட்டி எழுதுங்கள்…

இதோ நான் எழுதிக் கொண்டிருக்கும் எழுதுகோலின் இறுதி சொட்டு இரத்தம் முடியப் போகிறது…

மற்றொரு எழுதுகோலுடன் வந்து உங்களோடு இணைகிறேன் நீங்கள் எழுதிக் கொண்டேயிருங்கள்…

குலேந்திரன்
மயிலந்தனை…

You must be logged in to post a comment Login