Astrology

ஐந்தாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்

By  | 

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான எண் கணித பலன்கள்

எண் கணிதத்தில் ஏனைய எண்களை விட விசேடமானது எண் 5. ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களுக்கு நடுவில் அமைந்திருப்பதே இதற்கு பிரத்யேக காரணம். அதனால் இந்த எண்ணிற்கு ஏனைய எண்களில் இல்லாத வசீகரமும்,காந்த ஈர்ப்பும் உண்டு.

இந்த திகதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் முதல் எழுபது வயது நிறைவடையும் பெண்மணிகள் வரை தங்களது புத்திசாலித்தனத்தை தருணங்கள் அமையும் போதெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். குறிப்பாக அலுவலகங்களிலும் அல்லது இல்லங்களிலும் எந்த விடயமாக இருந்தாலும், இவர்களின் பார்வை வித்தியாசமானதாகவும் இருக்கும். அனைவரும் ஏற்கக் கூடியதாகவும் இருக்கும். எளிதாக விளக்க வேண்டுமென்றால்…

அனைத்து வித்தைகளையும் கற்பிப்பதற்கு குரு இல்லாமல், எளிதாக விரைவில் கற்றுக் கொள்வார்கள். அத்தகைய ஆற்றல் இவர்களுக்கு இயற்கையிலேயே உண்டு. அதே தருணத்தில் ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யாமல், அமைதியாக இருந்து வெற்றி பெறும் சூட்சுமத்தையும் அறிந்தவர்கள்.

மற்றவர்களைவிட முகத்தோற்றத்தை வசீகரமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு அவர்களின் கண்களே சக்தி வாய்ந்ததாக இருக்கும். இவர்களுக்கும் 1, 10,19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை போல் செயல் ஆற்றலில் வேகம் கொண்டவர்கள். இவர்களின் வேகத்தை மடைமாற்றவோ அல்லது திசை மாற்றமோ செய்து வெற்றி பெற வைப்பது எட்டாம் எண் காரர்கள். அதாவது இவர்களுக்கு 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் தாமாகவே முன் வந்து உதவி செய்வார்கள். அவர்களின் உதவியை இவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த திகதியில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தால்.. அவர்களுடனான நட்பு காதலாகவும் மாறும். கண்ணியமாகவும் தொடரும். திருமணத்திலும் முடியும். திருமணத்திற்கு பிறகும் இவர்களுக்கிடையேயான புரிதல் நீடிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வதில் வல்லவர்களாகயிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு தாங்கள் சிறந்த அறிவாளிகள் என்ற ‘ஈகோ ’அடிக்கடி எட்டிப் பார்க்கும். எதிராளிகளை அவர்களின் அறிவின்மையே தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளால் வித்தியாசமான த்வொனியில் பேசி, நகைச்சுவையாக வெளியில் தெரியும்படி பேசுவார்கள். ஆனால் அதன் உள்ளே ‘குத்தல்’ தனம் இருக்கும்.

இவர்கள் மற்றவர்களை விட, தங்களது மூளையின் இயக்கத்தை அதிகமாக பயன்படுத்திக் கொள்வதால் நரம்பு தொடர்பான பாதிப்புகளை 40 வயதிற்கு மேல் எதிர்கொள்வார்கள். அதிலும் குறிப்பாக மாதவிடாய் சுழற்சி காலத்திலும், மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இதனை அவதானித்து அதற்கேற்ற நிவாரணமாக உணவு வகைகளை தெரிவு செய்து திருமணத்திற்கு முன்பிருந்தே சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேறு சிலருக்கு நுரையீரல், தோள்பட்டை, தோலின் மேற்பகுதி, விரல்கள், நாக்கு ..ஆகிய பகுதிகளிலும் ஆரோக்கிய கேடுகள் ஏற்படும். இதற்கேற்ப மருத்துவர்களிடம் சென்று பாதிப்பை துல்லியமாக விவரித்து அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தினமும் காலையில் உணவிற்கு முன்பாக மூன்று துளசி இலையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் விலை குறைவாக இருக்கும் தருணங்களில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட மாதுளம் பழத்தை இரவு உணவாக எடுத்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். இது உங்களின் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாக்கும். வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு உணர்த்தும்.

இவர்கள் ‘அதிர்ஷ்டசாலிகள்’ என்று தான் சொல்லவேண்டும். சில தருணங்களில் இவர்களுக்கே அதிர்ஷ்டம் அதிகமாக வரவேண்டும் என்றால்.. இந்த ஆண்டு முழுவதும் நின்ற கோலத்தில் உள்ள பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் ஆலயம் அருகில் இல்லையென்றால் நின்றநிலையிலுள்ள பெருமாளின் புகைப்படத்தை உங்களின் பூஜையறையில் இடம்பெறச் செய்து வணங்கலாம்.

இந்த திகதியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் உங்களால் கௌரவம் உயரும். அந்த வீட்டின் புகழும் விரிவடையும். ஏதேனும் அவப்பெயரோ அல்லது அவச் சொல்லோ ஏற்படும் தருணமாக இருந்தால்.. அந்த தருணங்களில் உங்களை சுற்றி இருக்கும் ஏழை மாணவ மாணவிகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள். அது ஓராண்டாகவும் இருக்கலாம் அல்லது உயர் கல்வியாகவும் இருக்கலாம். வித்யா தானம் செய்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் அதிகம்.

நீங்கள் வருவாய் ஈட்டும் பெண்களாக இருந்தால் அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களாக இருந்தால்… உங்களின் மாத வருவாயில் ஒரு மாதம் 8 வீதம், அடுத்த மாதம் 6 வீதம் வரை தானமாக கொடுக்க வேண்டும். அந்த தானம் நேரடியான பண பயன்களாக இருப்பதை கூடுமானவரை தவிர்க்கலாம்.

இந்த குறிப்பிட்ட சதவீத அளவிற்கு பணத்தை, ஆண்டு முழுவதும் சேகரித்து, புனித யாத்திரை அல்லது ஏழைகளின் கல்விச் செலவு அல்லது அவர்களுக்கான பாட பொருளை வழங்குவது, நரம்பு சம்பந்தமான சிகிச்சை பெறும் பணமில்லா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக உதவுவது… என பல வகைகளில் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களது குடும்பமும், உங்களது வாரிசுகளின் எதிர்காலமும் சூட்சுமமாக நல்ல பலனை பெறும்.

உங்களுடைய வேகமான, நேர்மறையான சிந்தனைகள்.. உங்களுடைய கணவரின் எண்ணத்திற்கு ஈடாகவோ அல்லது மாறாகவோ செல்லக்கூடும். இதனால் உங்களுக்கு உங்களுடைய கணவர் அல்லது காதலர் மீது கோபமும் வரக்கூடும். அதே தருணத்தில் உங்களுக்கு வரக்கூடிய கோபத்தின் ஆயுள் என்பது குறைவுதான். ஏனென்றால் நீங்கள் கோபம் தணிந்த பின் சொல்லும் விளக்கத்தை, காதலரோ, கணவரோ, நண்பர்களோ கேட்டு, வியப்படைவதுடன், உங்களைப்பற்றிய எண்ணத்தையும் மாற்றிக் கொள்வார்கள். உங்களின் அருகாமையை எப்போதும் விரும்புவார்கள். உங்களின் பேச்சையும் கவனிக்க தொடங்குவார்கள். இதனால் தங்களுடைய தவறுகளை மன்னிக்கும்படி எதிர்பாராத தருணத்தில் வேண்டுகோள் வைத்து சமாதானமடைந்து விடுவார்கள். ஆனால் உங்களின் ‘கலாய்க்கும்’ பேச்சை சிலர் விரும்புவதில்லை. இதனால் சிலர் இவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள்.

எப்போதும் அழகாகவே இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். சற்று ஆடம்பரமாகவும் வாழ வேண்டுமென்று விரும்புவார்கள். எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றத்துடன், மகிழ்ச்சியான பாவனைகளுடன் வலம் வருவார்கள். சிலருக்கு வாசனை திரவியங்கள் மீதும் ஆர்வமிருக்கும். இவர்களின் நட்பை எதிர் பாலினத்தவர்கள் பெரிதும் விரும்புவார்கள். இவர்கள் எப்போதும் தங்களுடன் இருக்க வேண்டும் என்று 1, 10, 19, 28, 4, 22, 13, 31, 5, 14, 23, 8, 17, 26, 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கான நட்புவட்டமும் இந்த திகதிகளில் பிறந்தவர்களுடன் அமைந்திருக்கும்.

இவர்களில் 14 ஆம் திகதிகளில் பிறந்தவர்களும், 23ஆம் திகதியில் பிறந்தவர்களும் உலக சாதனையாளர்கள் அல்லது கவனம் ஈர்க்கக்கூடிய தலைமை பண்பை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் பச்சையான காய்கறிகள் மீது தணியாத விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் இனிப்பு சுவையின் மீது பெரு விருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதே தருணத்தில் எதை சாப்பிட்டாலும் சுவைக்கு முதன்மையான இடத்தை வழங்குவார்கள். இவர்கள் தயாரிக்கும் உணவு சுவையானதாகவும் இருக்கும்.

இவர்கள் பட்டி மன்ற பேச்சாளர்களாக இருந்தால்.. நகைச்சுவை பொங்க பேசுவார்கள். இவர்களின் பேச்சு அரங்கத்தை இவர் பால் ஈர்த்துவிடும். சிலர் ஆன்மீக சொற்பொழிவாளர்களாகவும் இருப்பார்கள். அவர்களும் தெரியாத விவரங்களை, காரண காரியங்களோடு பேசும் போது, ஆச்சரியம் பிறக்கும்.

இளம் வயதிலுள்ள இந்த எண்ணுக்குரிய பெண்கள் அழகான தோற்றத்துடன், வசீகரிக்கும் கண்களை உடைய ஆண்களுடன் அறிமுகமாகி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய பலவீனங்களை அறிந்த பிறகு, நட்பை பலப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாக இருந்தால்.. அவர்களிடமிருந்து விலகுவதுடன், அவர்களுக்கு மௌனமாய் பாடத்தை கற்பித்து விட்டு விலகுவார்கள்.

நீங்கள் புதிதாய் எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் புதன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். பச்சை வண்ணத்திலான பாரம்பரிய உடைகள் அல்லது நவீன உடைகளை பெண் பார்க்கும் போது அணிந்தால்.. மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான தகவல்கள் கிடைக்கும்.

தொடரும்…

-அஸ்வினி பிரியன்.

 

You must be logged in to post a comment Login