General

கட்டிளமை பருவத்தில் நேரும் குழப்பங்கள்!

By  | 

நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் நாளாந்தம் உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ, ஆன்மிக ரீதியாகவோ பல மாற்றங்களை சந்தித்துக்கொண்டு வருகிறோம். அதில் ஒரு பகுதியாகவே பருவமாற்றம் காணப்படுகிறது.

குழந்தை பருவம், பிள்ளைப் பருவம், கட்டிளமைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என மனித வாழ்க்கையில் 5 பருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை நாம் கடந்திருக்கலாம் அல்லது கடக்கவிருக்கலாம்.

எனவே, கடந்த பருவங்களை எவ்வாறெல்லாம் நாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கொண்டு, எதிர்கால சந்ததிகளை நெறிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது. இவற்றில் கட்டிளமைப்பருவம் முக்கியமான ஒரு பருவமாக காணப்படுகிறது.

இப்பருவத்திலேதான் பிள்ளைகள் வீட்டிலிருந்து சமூகத்தை நோக்கியதான பயணம் ஆரம்பமாகிறது. இந்த காலப்பகுதியில் பிள்ளைகள் செய்யும் செயற்பாடுகள், எடுக்கும் முடிவுகள் போன்றன அவர்களின் எதிர்காலத்தை நல்லதாக அல்லது கெட்டதாக மாற்றப்போகும் சக்திகளாக காணப்படுகின்றன.

எனவே, இப்பருவ பிள்ளைகளிடத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இப்பருவத்தின் குணாம்சங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமான ஒன்றே. அப்போதுதான் இவர்கள் குழப்பமடையும்போதோ தடுமாறும்போதோ சிறந்த முறையில் நெறிப்படுத்தி, சமூகத்துக்கு உகந்தவர்களாக மாற்றமுடியும்.

பிள்ளை என்பது உணர்வு, சிந்தனைகளால் நாளாந்தம் வளர்ச்சியடையக்கூடிய ஒரு ஜீவன். இந்த வளர்ச்சி அனேக பெற்றோர்களுக்கு கவலையை தருவதாகவும், எப்போதும் ஒரு பிள்ளையை பிள்ளை பருவத்தினராகவே பார்க்க ஆசைப்பட்டு, பின் பெற்றோர்கள் அதில் தோல்வியை சந்திப்பதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒரு குழந்தை சீரான பருவ வளர்ச்சியில் ஒவ்வொரு படியாக கடந்து செல்லும்போது ஏற்படாத குழப்பம், பிள்ளைப்பருவத்திலிருந்து கட்டிளமைக்கு மாறும்போது ஏற்பட்டுவிடுகிறது.

இந்த பருவப் பிள்ளைகள் பிறர் முன்னாள் கௌரவம், அழகிய தோற்றம், ஆடம்பர வாழ்க்கை என பல விடயங்களை எதிர்பார்ப்பதோடு, இவற்றையெல்லாம் பெற்றோர்கள் கேட்காமலே தரவேண்டும் எனவும் காத்திருக்கின்றனர். மாறாக, கிடைக்காவிட்டால், கணப்பொழுதில் கோபத்தை ஏற்படுத்தி, வேறு பிரச்சினைகளை உருவாக்கக்கூடியதாகவும் மாறிவிடுகின்றது.

எனவே, பெற்றோர்கள் நட்புறவுடனும் கௌரவத்துடனும் பழக வேண்டும்.

பெற்றோர்கள் அவதானம், அக்கறை என்ற போர்வையில் குழந்தைகளிடம் காட்டும் அணுகுமுறை இப்பருவத்தினருக்கு பொருந்தாது.

அன்புடன் நடந்துகொள்ளல் என்ற அடிப்படையில் இவர்களை கட்டுப்படுத்த முடியாது.

எந்த நேரமும் பிள்ளை நம்முடனேயே இருக்கவேண்டும், எங்கும் செல்லக்கூடாது என்று பெற்றோர்கள் நினைத்துவிடக்கூடாது.

மேலும், அவதானம் என்கிற பெயரில் பிள்ளைகளை அடக்கி ஆள்வது, நண்பர்களுடன் கதைப்பதையோ கூடுவதையோ தடுப்பது, பொழுதுபோக்கில் ஈடுபடுவதை தவிர்க்க முயற்சிப்பது என்கிற கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

இப்பருவ பிள்ளைகள் உலகை அறிவது நண்பர்களின் மூலமாகத்தான். எனவே, சுதந்திரமாக பேசுதல், விளையாடுதல்  போன்றவற்றில் தமக்கு பிடித்தமான நண்பர்களை தெரிவு செய்வர்.

இதனை மாற்றுக்கருத்தோடு நோக்குவது, ஆரோக்கியமானதல்ல. ‘நண்பர்களுடன் பேசக்கூடாது, உன்னை பாழாக்கிவிடுவார்கள்’ என கட்டுப்படுத்துவதும், ‘அப்படியே பழகினாலும், இவர்களுடன்தான் பழகவேண்டும்’ என வரையறை போடுவதும் இவர்களிடம் பலிக்காது.

பெற்றோர்கள் அவதானமாக இருக்கவேண்டுமே தவிர, அவர்களின் சுதந்திரத்துக்குள் நுழைந்துவிடக்கூடாது.

இன்றைய அனேக பெற்றோர்கள் இவ்வயது பிள்ளைகளை விளையாட்டுப் போட்டி, சுற்றுலா, சிரமதானம், கலைவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்ளச் செய்வதில்லை. காரணம் கேட்டால், ‘கல்வியில் கவனம் குறைந்துவிடும்… வழிகேட்டில் சென்றுவிடுவார்கள்’ என்றெல்லாம் கூறுவார்கள்.

ஆனால், பிரபல்யத்தை எதிர்பார்க்கின்ற இப்பிள்ளைகள் ஏனையவர்களை கவர்வதற்காகவே சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மேற்சொன்ன விடயங்களில் கலந்துகொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

இவை பெற்றோர்களாலோ, ஏனையவர்களாலோ தடுக்கப்படுமிடத்து முரண்பாடுகளுக்கு ஆளாவார்கள்.

எனவே, பிள்ளைகளை அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட அனுமதியளிப்பதோடு, ஒத்துழைப்பும் நல்கவேண்டும்.  அவதானமாகவும் இருக்கவேண்டும்.

அவதானமாக இருப்பதும் பிள்ளைகளுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தும் என்பதால், அதையும் மறைவாக பின்பற்றுவதே நல்லது.

எனவே, கட்டிளமைப் பருவ பிள்ளைகளை அன்புடனும் அவதானத்துடனும் வழிநடத்துவதன் மூலம் இப்பருவ குழப்பங்களிலிருந்து உங்கள் பிள்ளைகளை மீட்டு, பாதுகாத்து, பிற்கால வாழ்க்கையை அவர்களாகவே திருப்தியோடு வாழக்கூடிய பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுப்பது, எம் எல்லோரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஏ.எல். இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

 

You must be logged in to post a comment Login