Antharangam

காதல் அவசியமா…?

By  | 

கேள்வி:
எனக்கு வயது 20. நான் ஒரு பெண். நான் பணியாற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளரான ஒருவர், அண்மையில் ஒரு நாள் என்னிடம் தனது காதலைத் தெரிவித்தார். நானும் ஏற்றுக்கொண்டேன். இப்போது நாம் இருவரும் காதலித்து வருகிறோம். சில நாட்களாகவே என்னுடன் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி வருகிறார். எனது முகத்துக்கு மேல் ஏதாவது ஒரு அடையாளத்தை வைத்து மறைத்துவிட்டு தரவேற்றுகிறார். இதில் எனக்கு விருப்பமில்லை. முகம் தெரியாதுதான் என்றாலும் எனது ஆடைகளை வைத்து என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனது வீட்டில் என்னை விட மூத்த சகோதரிகள் மூன்று பேர் இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்குத் திருமணமாகவில்லை. இவர் தரவேற்றும் படங்களை யாராவது பார்த்து பிரச்சினை வந்தால் எனக்கு மட்டுமன்றி, எனது சகோதரிகளுக்கும் பிரச்சினை வரும் என்று அச்சப்படுகிறேன். இதை அவரிடம் சொன்னால், அவர் கேலி செய்துவிட்டு மீண்டும் தான் நினைத்ததையே செய்கிறார். என்ன செய்வது?

 

பதில்:
எதையெல்லாம் தனிமையில், அந்தரங்கமாகச் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் இணையவழியெங்கும் பதிவேற்றிவிடுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டது. இந்தப் பழக்கத்தால் ஆபத்து இருக்கிறது என்று எவ்வளவுதான் எச்சரித்தாலும் அவரவருக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே அதை நம்புகிறார்கள். உங்கள் விடயமும் அப்படித்தான்!

முதலில், மூன்று சகோதரிகள் – திருமணமாகாத சகோதரிகள் – இருக்கிறார்கள் எனும்போதே, உங்கள் வீட்டின் பொருளாதார நிலையை உணர முடிகிறது. இல்லாவிட்டால், இருபது வயதில் நீங்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும்? உங்கள் குடும்பம் இருக்கும் நிலையில், இப்போது, அதுவும் உடனே சம்மதிக்கும் அளவுக்கு காதல் அவசியமாகிப் போய்விட்டதா?

காதல் தவறானதல்ல! காதலை உணராத மனிதன் இருக்கவே முடியாது. ஆனால், காதல் என்ற பெயரில் கன்னியர்கள் சில கயவர்களிடம் சிக்கிக்கொள்வதுதான் கசப்பான உண்மையாக இருக்கிறது. இப்போது பாருங்கள்…. உங்கள் படத்தை, நீங்கள் மறுத்தும்கூட, இணையத்தில் தரவேற்றி விளையாடுகிறார் உங்கள் காதலர்…! உங்கள் நியாயமான பயத்தையும் கோரிக்கையையும் கூட அவர் கண்டு கொள்ளவில்லை…!

உங்கள் காதலர் உண்மையாகவே உங்களைக் காதலிக்கிறார் என்றாலும் பரவாயில்லை. உங்களது அனுமதி இல்லாமல் உங்கள் புகைப்படங்களை இணையத்தில் தரவேற்றுவது மிக மிகத் தவறு. அதற்காக நீங்கள் அவருடன் கோபித்துக்கொள்ளலாம். தவறே இல்லை!

உங்கள் காதலர் உங்களை உண்மையிலேயே காதலித்தார் என்றால், நீங்கள் பயப்படும் அளவுக்கு அவருக்கும் ஒரு பயம் இருந்திருக்கும். அப்படியில்லை எனும்போது, அவரது காதலைச் சந்தேகிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால், இது முள் மீது விழுந்த சேலை… மிகக் கவனமாகத்தான் கையாளவேண்டும்.

உங்கள் காதல் அப்படியே இருக்கட்டும். ஆனால், வெளியே அவருடன் சுற்றித் திரிவதை முதலில் நிறுத்துங்கள். அதற்கு, தகுந்த காரணங்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், இத்தனை நாள் கிடைத்த இன்பம் கிடைக்காமல் போகிறதே என்ற கோபம் உங்கள் காதலருக்குள் எழலாம். ஒருவேளை அவரும் பொழுதுபோக்குக்காகக் காதலிப்பவராக இருந்தால், நிச்சயம் உங்களது மறுப்பு அவரைப் பழிவாங்கச் சொல்லும். அவருக்கென்ன….? ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரேயொரு புகைப்படம் இணையத்தில் வந்தாலே போதும்… அதை வைத்து வரலாறே எழுதிவிடுவார்கள்.

எனவே, நாசூக்காக அவரைக் கொஞ்சம் விலக்கிக்கொள்ளுங்கள். அதுவும் இப்போது நாடு இருக்கும் நிலைமையைக் காரணம் காட்டியே கொஞ்ச நாட்களுக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்புகளை உதறிவிடுங்கள். இதுவே பழக்கமாகிவிட்டால் உங்களுக்குப் பிரச்சினையே இல்லை.

You must be logged in to post a comment Login