Love

காதல் கரண்டி பட்டன் காதல்!

By  | 

காதலுக்கு முன்னால் மாமலையும் சிறு கடுகுதான். எஸ்.எம்.எஸ்., வட்ஸ் அப், மின்னஞ்சல், மெசஞ்சர் என காதலைச் சொல்ல புதுப் புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வீராதி வீரன்களுக்கும் பழைய தயக்கம் போகவே இல்லை.

பழைய சினிமாக்களில் வசனம் வழியாகச் சுற்றிச் சுற்றி காதலை சூசகமாகச் சொல்வதெல்லாம் இன்றைக்கு எடுபடாது. நேரடியாக, எளிதாக விடயத்தைச் சொல்ல வேண்டும். அதற்குப் பல வழிகளை நம்மவர்கள் கண்டுபிடித்தாலும் ‘பல்பு’ வாங்கிப் பாழாய்ப் போவதும் உண்டு. எனினும், வெளிநாடுகளில் பெண்கள் காதலை சொல்லும் விதமே வேறு!

பட்டன் காதல்
ஜப்பானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காதலைச் சொல்ல ரொம்பப் புதிய, எளிதான முறையைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

தாங்கள் விரும்பும் பெண் முன்னால் சென்று தங்கள் சட்டையின் இரண்டாம் பட்டனைக் கழற்றிக் காண்பிக்கவேண்டும். இப்படிச் செய்தால், ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. காதலிக்க விரும்புகிறேன்’ என்று அர்த்தமாம். அந்தப் பெண்ணுக்கும் பிடித்திருந்தால், தனது சட்டையின் இரண்டாம் பட்டனைக் கழற்றித் தன் சம்மதத்தைச் சொல்வார். இரண்டாம் பட்டன்தான் இதயத்துக்கு அருகில் இருக்கிறது. தன் மனதைத் திறந்து காண்பிப்பதற்குச் சமமானது இந்த இரண்டாம் பட்டன் விடயம். காதலிக்காக நெஞ்சைப் பிளந்து இதயத்தைத் தரவேண்டிய அவசியம் இல்லை. பட்டனைத் திறந்து காண்பித்தாலே போதும்.

சொக்லேட் காதல்
ஜப்பானில் பெண்கள் தங்கள் காதலைத் தெரியப்படுத்த இன்னொரு வினோதமான வழியையும் கடைப்பிடிக்கிறார்கள். பிடித்த ஆண்களுக்கு நம் பெண்கள் உணவு  சமைத்துத் தருவதைப் போன்றதுதான் அது.

ஆனால், இது கொஞ்சம் நவீன முறை. பொதுவாக அங்கே ஒரு பெண் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடை சொக்லேட்டைத் தந்துவிட்டு, வீட்டில் தயாரித்த சொக்லேட்டை மறைத்து எடுத்துக்கொண்டு சென்றால், அது காதல்தான். ஹோம் மேட் சொக்லேட்டை பரிசாகப் பெறுபவர் அதிர்ஷ்டசாலி. அவர் இந்தக் காதலை ஏற்றுக்கொண்டால் இரண்டாவது பட்டனைக் கழற்றிக் காண்பிக்கலாம்!

காதல் கரண்டி
இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் காதலைச் சொல்ல அந்தக் காலத்தில் வினோதமான வழக்கம் இருந்திருக்கிறது.

ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் உடனே அவன், மர உளி, சுத்தியல், ரம்பம் எல்லாம் வாங்க வேண்டியிருக்கும்! காதலைச் சொல்ல உடனடியாக ஒரு தச்சு வேலை செய்தாக வேண்டும். செய்யப்போகும் பொருள் காதல் கரண்டி (Love spoon). கரண்டி என்றதும் நாம் பயன்படுத்தும் தேநீர்க் கரண்டி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட காதல் கரண்டி அது. தானே செய்த இந்தக் கரண்டியை தான் விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவேண்டும். இப்படிக் கொடுத்தால் ‘அந்தப் பெண்ணைத் எனக்குப் பிடித்திருக்கிறது… அவளைக் காதலிக்க விரும்புகிறேன்’ என்று அர்த்தம். இந்த வழக்கம் வேல்ஸில் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், அந்தக் காதல் கரண்டி இப்போதும் அலங்காரப் பொருளாக நடைமுறையில் இருக்கிறது.

You must be logged in to post a comment Login