Cinema

காற்று போல, ஒளி போல இசை பரவிக்கிட்டே இருக்கிறது!

By  | 

தானாக வருவதே இசை!அனைத்து தரப்பினரையும் மயக்கும் பாடல்களை இசைப்பது எப்படி என்பது குறித்து, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா:

இயக்குனர் ஒரு இடம், சூழல் சொன்னதும் என்ன வருதோ அது தான் அந்த இசையின் உச்சிப்புள்ளி. உங்களை மறந்த ஒரு நிலையில் கொண்டு போய் அது நிறுத்தும். அந்த சமயம் மனசு காலியாக இருக்கும்; இதெல்லாம் மாயம். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொன்னால், எதையோ போடுகிறோம்; ஏதோ ஒண்ணு வருது. என் மனசுக்கும், ரசிகன் மனசுக்கும் ஒரு பரிவர்த்தனை நடக்குதில்லையா, அது தான் விஷயம்.

பலரும் டாக்டருக்கு படிக்கிறாங்க; நமக்கு மருந்து கொடுக்கிறாங்க. ஆனால், ஒரு சிலர் கொடுக்கிற மருந்து தானே, நல்ல வேலை செய்யுது. அது ஒரு சித்தி, வரப்பிரசாதம்.

என் இசை எவ்வளவு பேர் வாழ்க்கையில் ஊடுருவி விளையாடுதுன்னு தெரியுது. நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்த பெருமையை கேட்டு கேட்டு எனக்கு சர்வ சாதாரணமாக போய் விட்டது.

எந்த முனைப்பும் இல்லாமல் தான் பாடல்களை கம்போஸ் செய்கிறேன். இது இயற்கையாக வருது. ஒருத்தருக்கு அமைதியைக் கொடுத்து, துாங்கவே முடியாதவங்களை ஆறுதல்படுத்தி, தட்டிக் கொடுக்குது. எனினும், திட்டமிட்டு நான் எதையும் செய்றதில்லை. எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம் தான்; தானாக நிகழ்ந்தது தான். காற்று போல, ஒளி போல என் இசை பரவிக்கிட்டே இருக்கிறது. அது எனக்கு சந்தோஷம் தருது.

பாடல்களின் தன்மை இப்படித் தான் இருக்கணும்னு கம்போஸ் பண்றதில்லை. அலை இப்படி அடிக்கணும்னு நினைச்சு வருதா; குருவி பறக்கிறதும், திடீரென கிளையிலிருந்து எழும்பி போவதற்கும் ஏதேனும் வரையறை வைத்துள்ளதா… எல்லாமே தன்னெழுச்சியாக நடக்கிறது. ஒரு படைப்புன்னு ஒண்ணு தான் இருக்குது.

அதைப் போல இன்னொன்னு வரக் கூடாது. அதை செய்தால் அவன் போலி. அது பிரதிபிம்பம். ஒரு நல்ல பாட்டு. அதை ரிக்கார்டு பண்ணும் போது, அந்த இயக்குனருக்கு அதன் மதிப்பு தெரியாது; தயாரிப்பாளருக்கு தெரியாது; ஹீரோவாக நடிச்ச நடிகருக்கு தெரியாது. முக்கியமா, பாடலுக்கு வாசித்த இசைக் குழுவுக்கும் தெரியாது.

முதல் படத்திலேயே பெரிய பேர் கிடைத்து விட்டது. அது என்னால் நடக்கவில்லைன்னு தெரியும். நான் காரணமே இல்லாமல், வேறு எதுவோ இடையில் நடந்திருக்குதுன்னு புரிஞ்சு போச்சு. உலகமே துச்சமாக போன பின்னாடி தோற்றமென்னடான்னு ஆகிப் போச்சு. சன்னியாசி களுக்கான மனோபாவம் வந்து விட்டது; யாரையும் பொருட்படுத்துறதில்லை; உலக நிகழ்வுகளை உள்ளே வாங்கிக் கொள்வதில்லை.

இதுவரை மறைந்திருந்த திரை விலகி, உண்மை தெரியுது. உண்மை தெரிந்ததும், இந்த பொய் வேஷங்களை எல்லாம் கழற்ற வேண்டியது தானே!

You must be logged in to post a comment Login