Antharangam

கை பட்டாலே…!

By  | 

கேள்வி:
எனக்கு வயது 21. பயிற்றப்பட்ட தாதியாக ஒரு தனியார் வைத்தியசாலையில் பணியாற்றுகிறேன். இளம் ஆண் நோயாளர்களின் கை பிடித்து அவர்களின் இரத்த அழுத்தம் பார்க்கும்போதும் அவர்களைத் தொட்டுச் செய்ய வேண்டிய சிகிச்சைகளின்போதும் எனக்குள் தேவையற்ற சிந்தனைகள் ஏற்படுகின்றன. இதை எப்படித் தாண்டுவது?

 

பதில்:
பாராட்டுக்கள்! இந்தச் சிந்தனைகள் தேவையற்றவை என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதாலும் அவற்றைத் தாண்ட வேண்டும் என்ற உங்களது தெளிவான தீர்மானத்துக்காகவும் தான் இந்தப் பாராட்டுக்கள்!

தாதிச் சேவை என்பது மிக மிக உயர்ந்தது. இன்னும் சொல்வதானால், வைத்தியரை விட, தாதியரே பெரிதும் போற்றப்படவேண்டியவர்கள். ஏனென்றால், ஒருவரின் உறவினர்கூட செய்யத் தயங்கும் பணிகளை எவ்வித அசூயையும் இன்றிச் செய்யும் மனப்பாங்கு கொண்டவர்கள் நீங்கள்.

உங்களுக்கு இப்போதிருக்கும் பிரச்சினை, உங்கள் வயதினாலும் அனுபவமின்மையாலுமே ஏற்படுகிறது. இந்த வயதில் ஒரு ஆணைத் தொடுவது என்பது சற்றுக் கிறக்கம் தரக்கூடியதுதான் என்றாலும் இதைத் தாண்டுவதற்கு ஒரு வழியிருக்கிறது. அதுவும் உங்களால் நிச்சயமாகச் செய்யக்கூடிய ஒன்றுதான்!

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இயல்பிலேயே தாய்மையுணர்வு நிறைந்திருக்கிறது. அந்தத் தாய்மையுணர்வைத் தட்டிவிடுங்கள். இளம் வயது ஆண்களை உங்கள் குழந்தைகளாக எண்ணத் தொடங்குங்கள். அவர்களுக்கு உங்களது உயர்தர சேவையை வழங்கி, அவர்கள் ஆரோக்கியம் பெறச் செய்ய வேண்டும் என்று நினையுங்கள்.

ஒருவரை குழந்தையாகப் பார்க்கும் திறன் உங்களுக்குள் வந்துவிட்டால், வயதின் காரணமாக ஏற்படக்கூடிய கிளர்ச்சி நிச்சயமாக உங்களுக்குள் தோன்றாது.

ஞாபகம் வைத்திருங்கள்! உங்களைப் போன்ற எத்தனையோ தாதியர், தமது கருணையாலும் சேவை மனப்பாங்கினாலும் உலக அரங்கில் பெருமை பெற்றிருக்கிறார்கள். அத்தகைய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சிறு சிறு சலசலப்புகளைப் பெரிதுபடுத்திக்கொள்ளாமல், அத்தகைய பெருமையைப் பெற முயற்சியுங்கள்.

You must be logged in to post a comment Login