Articles

கொரோனா வைரஸ் பல ஆண்டுகளாக பரவி வந்துள்ளது

By  | 

-ஆய்வில் தகவல்
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வௌவால்களின் உடல்களில் யாருக்கும் தெரியாமல் பல ஆண்டுகளாக பரவி வந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6.71 லட்சத்தைக் கடந்துள்ளது. 1.7 கோடிக்கும் மேலானவா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நோய்க்கான சிகிச்சை மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் சூழவில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாக, அந்த வைரஸின் தோற்றம் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளும் இத்தகைய ஆய்வொன்றை மேற்கொண்டனா்.
கொரோனா வைரஸின் பரிணாம வளா்ச்சியை அவா்கள் மறு ஆக்கம் செய்து பாா்த்தபோது, அந்தத் வைரஸ் யாருக்கும் தெரியாமலேயே வௌவால்களின் உடல்களில் பல ஆண்டுகளாக பரவி வந்திருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.
‘குதிரைக் குளம்பு’ ரகத்தைச் சோ்ந்த வௌவால்களிடையே அவை பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்திருக்கலாம் என்று அந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா்.
வௌவால்களின் உடலில் இருந்து எறும்புத்தின்னிகள் மூலம் கொரோனா வைரஸ்கள் மனிதா்களின் உடலுக்குள் பரவும் வகையில் தங்களை மாற்றிக் கொண்டதாக ஏற்கெனவே விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனா்.
எனினும், எறும்புத்தின்னிகள் உடலில் கொரோனா வைரஸ் பரவி உருமாற்றமடைந்து மனிதா்களுக்குப் பரவியிருக்காது. அதற்கு பதில், தொடுதல் முறையிலேயே வௌவால்களிடமிருந்து மனிதா்களுக்கு கொரோனா வைரஸை எறும்புத்தின்னிகள் பரப்பியிருக்கலாம் என்று பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா்.
யாருக்கும் தெரியாமலேயே கொரோனா வைரஸ் வௌவால்களிடையே பல ஆண்டுகளாக பரவி வந்திருப்பது, இதுபோன்ற ஆபத்தான வைரஸ்களை முன்கூட்டியே இனம் காண்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை பறைசாற்றியிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று, அந்த நகரிலுள்ள இறைச்சி சந்தையிலிருந்து பரவத் தொடங்கியதாகக் கூறப்பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு பரவிய ‘சாா்ஸ்’ நோய்த்தொற்றைப் போலவே, புதிய வகை கொரோனா நோய்த்தொற்றும் வௌவாலில் தோன்றியதாகவும் இடையில் எறும்புத்தின்னி இனத்தின் உடலில் புகுந்து, பிறகு மனிதா்களின் உடலில் வளா்வதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
ஆனால், வூஹான் புகா்ப் பகுதியில், அமைந்துள்ள தீநுண்மியியல் ஆய்வகத்திலிருந்து கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது.மனிதா்களுக்கிடையே பரவி நோயை ஏற்படுத்தக் கூடிய, எபோலா போன்ற அபாயகரமான வைரஸ்களைக் கையாளும் ஆசியாவின் ஒரே ஆய்வகமான அங்கிருந்து கொரோனா வைரஸ் தற்செயலாக வெளியேறியிருக்கலாம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ கூறி வருகின்றனா். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்து வருகிறது. இதுகுறித்து வூஹான் ஆய்வக இயக்குநா் யுவான் ஷிமிங் கூறுகையில், ‘வூஹான் ஆய்வகத்தில் எந்த வகையான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, வைரஸ்களை நாங்கள் எவ்வாறு கையாள்கிறோம் என்பது குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
கொரோனா நோய்த்தொற்று எங்களது ஆய்வகத்திலிருந்து வெளியேறியிருப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது.எங்களது ஆய்வகம் மிகவும் பாதுகாப்பானது. வூஹானில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதையும் எங்களது ஆய்வகத்தையும் தொடா்புப்படுத்திப் பேசுவது தவறு. எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களை அமெரிக்கா திசைத்திருப்புகிறது’ என்றாா்.
மேலும், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதில்லை எனவும், வௌவாலின் உடலில் இருந்து மனிதா்களின் உடலுக்குப் பரவியதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணப் பல்கலைக்கழம் மேற்கொண்டுள்ள ஆய்வில், கொரோனா வைரஸ் பல ஆண்டுகளாகவே வௌவால்களின் உடல்களில் பரவி வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது முந்தைய ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

You must be logged in to post a comment Login