Cinema

சமூகத்தை காத்தால்… நாமும் பாதுகாப்பாக இருப்போம்!

By  | 

– நடிகை லட்சுமி ப்ரியா 

வழக்கமாக சின்னத்திரையில் இருந்து தான், நட்சத்திரங்கள் சினிமாவுக்கு நடிக்க செல்வர். ஆனால், முதல் படம் வெளியாவதற்கு முன்பே சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கும் காலடி எடுத்து வைத்துள்ளார் லட்சுமி ப்ரியா. அவருடனான சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பின்வருமாறு:

உங்களை பற்றி?
அப்பா ராணுவத்தில் பணியாற்றிவர். அம்மா சேலம், அப்பா வேலுார். சென்னை அண்ணா நகரில் பள்ளி படிப்பு. எஸ். ஆர். எம்.,மில் இன்ஜினியரிங் முடித்தேன். வங்கியில் இரண்டு ஆண்டு பணியாற்றினேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின்னர் வேலையை விட்டு விட்டேன்.

உங்கள் முதல் படம்?
லைக்கா தயாரிப்பில் யோகிபாபு, கருணாகரன் நடிக்கும், பன்னிக்குட்டி என் முதல் படம்.

சினிமா வாய்ப்பு வந்தது எப்படி?
வேலை பார்த்து கொண்டிருக்கும் போதே பொழுதுபோக்காக மொடலிங்  செய்தேன். சினிமாவில் வாய்ப்பு வந்தது. பன்னிக்குட்டி படத்தின் இயக்குனர் அனுசரணின் திறமை, கிருமி படத்திலேயே தெரிந்தது. அதனால், அந்த படத்தில் நடித்தேன்.

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு போனது ஏன்?
சினிமாவில் நடித்தபோது நிறைய தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மாங்கல்ய தோஷம் தொடர் எனக்கு பெயர் வாங்கித்தரும் வகையில் இருந்தது; இரண்டு பாத்திரம். இரண்டுமே வித்தியாசமானது. நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அதனால் சின்னத்திரைக்கு வந்தேன்.

சின்னத்திரைக்கு வந்ததால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமே?
என்னைப் பொறுத்தவரை எல்லாமே நடிப்பு தானே. எனக்கு ஒரே வித்தியாசம் தான் தெரிந்தது. சினிமாவில் காலை 9:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை நடிக்க வேண்டியிருக்கும். சின்னத்திரையில் காலை 9:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை நடிக்க வேண்டியிருக்கும்; அவ்வளவு தான்.

பன்னிக்குட்டி எந்த மாதிரியான படம்?
ஒரு பன்னிக்குட்டியை இரண்டு கும்பல் தேடும்; இது தான் கதை. காமெடியான படம். கருணாகரன், யோகிபாபு, ராமர், லியோனி, சிங்கம்புலி என, ஒரு காமெடி பட்டாளமே இருக்கிறது. மதுரை சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தது.

மாங்கல்ய தோஷம் தொடருக்கு தேர்வானது எப்படி?
நான் நடிக்கும் பாத்திரத்திற்கு மட்டுமே ஆறு மாதமாக காத்திருந்தனர். எனக்கு ஏழு மணி நேரத்திற்கு மேல் ஒத்திகை வைத்து தான் தேர்வு செய்தனர்.

மூடநம்பிக்கை பற்றி உங்கள் கருத்து?
மாங்கல்ய தோஷம் கதையே மூடநம்பிக்கையை மையமாக கொண்டது தான். தனிப்பட்ட முறையில் எனக்கு மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லை. நாம் என்ன செய்கிறோமோ அது தான், நமக்கு நடக்கும். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டதே நடக்கும்.

கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது?
கொரோனா பரவாமல் இருக்க, பாதுகாப்பாக தனித்து இருப்பது முக்கியம். சமூகத்திலிருந்து விலகி இருப்பது, நம்மை காத்துக் கொள்வது மட்டுமின்றி, சமூகத்தையும் காப்பதாகும். பொலிஸார் காலில் விழுந்து கெஞ்சுகின்றனர்; அதை பார்க்கும் போதே கஷ்டமாக இருக்கிறது. நம்மை காக்கவே இப்படி செய்கின்றனர். நம் குடும்பத்தினருக்காக, எப்படி நாம் செயல்படுவோமோ, அந்த போல சமூகத்திற்காக நாம் செயல்பட வேண்டும்.

You must be logged in to post a comment Login