Interview

சவால்களை எதிர்கொள்ள உலக தேடல்கள் அவசியம்

By  | 

சூரியன் எப். எம் கஸ்ட்ரோ ராகுல்

உங்களை பற்றி?
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு என்னுடைய சொந்த இடம்,  கஸ்ட்ரோ என்றது அப்பா எனக்கு வைத்த பெயர் இது வேல்ட் யுனிக் ஆன நேம்  இந்த பெயருக்காகவே வாழ்க்கையில எதையும் பெஸ்ட்டா பண்ணணும் என்றது இப்போது வரைக்கும் என்னுடைய மாறாத மனநிலை. வீட்டில நான் தான் கடைசிப்பிள்ளை அதனால ரொம்ப செல்ல பிள்ளை எல்லாம் இல்ல. 02 அண்ணா 02 அக்கா இருக்காங்க. பிடிச்சத செய்யணும் ஆசைப்பட்டத அடையணும் என்றதுக்காக வெறியாக உழைச்சிட்டே இருப்பேன். ஆனா வெற்றி என்றத இலகுவாக அடைந்ததாக சரித்திரமே இல்லை எப்போதுமே எனக்கான பாதையில் நானே தனியாக போராடிற்று இருப்பேன். அந்த போராட்டமும் எனக்கு பிடித்தவைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. நான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில ஊடத்துறை படிச்சன். ஊடகத்துறை படிக்கிறதுக்கு முன்னமே ஏதாவது ஊடகத்துறையில  வேலை செய்யணும் என்று ஆசை வந்திச்சு. அதற்கான வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் சூரியன் கொடுத்தது. 07 வருடங்களாக சூரியனோடு பயணிக்கின்றேன். இப்போ கும்மாளம் நிகழ்ச்சி . ஞாயிற்று கிழமைகளில் சண்டே உதயராகங்கள் நிகழ்ச்சி அப்புறம் கள்ள மனத்தின் கோடியில் நிகழ்ச்சி. ( தென்னிந்திய நட்சத்திரங்களின் நேர்காணல்) செய்தி வாசித்தல் என்று சூரியனோடு ரொம்ப சந்தோசமா போய்கிட்டு இருக்கு.

ஊடகத்துறை ஆர்வமும் அறிமுகமும் எப்போது ஏற்பட்டது?
2013 ஆம் ஆண்டு நான் ஊடகத்துறை இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது. வானொலி ஊடகம் பற்றி மேலதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றதுக்காக கொழும்பில் உள்ள வானொலி ஒன்றில் நான் Internship செய்ய வந்தேன். அப்போது அந்த வானொலியில் ARV லோசன் அண்ணா பணிப்பாளராக இருந்தார். அந்த வேளையில் தான் அவரை முதன்முறையாக பார்க்க கிடைத்து. அத்தோடு அவரின் அறிமுகமும் கிடைத்தது. நல்லபடியாக Internship முடித்துவிட்டு நான் மறுபடியும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டேன் . Internship காலத்தில் நான் செய்த வேலைகள் பிடித்து விட்டதாலோ என்னவோ ,  லோசன் அண்ணா எனது நண்பன் ஜனகனுக்கு அழைப்பெடுத்து “கஸ்ட்ரோவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு அதனால தயாராக இருக்க சொல்லுங்க” என்று சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் நானும் கிட்டத்தட்ட 03 மாதங்கள் காத்திருந்தேன். அந்த நேரத்தில தான் லோசன் அண்ணா சூரியனுக்கு மறுபடியும்  பணிப்பாளராக போனார். 2013 ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 05 ஆம் திகதி குரல் தேர்வு கொடுக்க சூரியனுக்கு வரமுடியுமா என்று லோசன் அண்ணா அழைப்பெடுத்து கூப்பிட்டார். குரல் தேர்வுக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி “சூரியனின் அடுத்த தலைமுறை” என்ற பிரமாண்ட குரல் தேடல் மூலமாக சூரியன் வானொலிக்குள் உள்வாங்கப்பட்டேன். நான் ஊடகத்துறை படித்தாலும் வானொலிக்குள் வரவேண்டும் ஒரு அறிவிப்பாளராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை லட்சிம் கிடையாது. லோசன் அண்ணா அவராகவே என்னை கூப்பிடும் போது தானாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுவோமே என்று தான் சூரியனுக்குள் வந்தேன் . 07 வருடங்களாக பயணிக்கிறேன் என் சூரியனோடு. சூரியன் என்றது வெறுமனே ஒரு வானொலி மட்டுமல்ல அது ஒரு அங்கீகாரம், அது ஒரு அடையாளம் , அது ஒரு புகழ், அது ஒரு பிரம்மாண்டம் இப்படி நிறையவே சொல்லலாம். அறிவிப்பாளன் என்ற அங்கீகாரமும், கனதியான ரசிகர்களின் அன்பையும் நிறையவே கொட்டித் தந்திருக்கிறது சூரியன். இப்படி கற்றவை பெற்றவை ஏராளம் சூரியன் மூலமாக.

ஏனைய நிகழ்ச்சிகளுக்கும், கும்மாளம் நிகழ்ச்சி தொகுப்பதிலுமுள்ள சவால்கள்?
கும்மாளம் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்த நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சிக்கு பாடல்களை தயார் செய்வதும் நான் தான். ஒரு ஒலிபரப்பாளனுக்கு தன்னை சுத்தியும், இந்த உலகத்தில என்ன நடந்திட்டு இருக்கு என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவனின் அடிப்படைத் தகுதிகளில் ஒன்று. அது சினிமா , அரசியல் , விளையாட்டு , பொது விடயங்கள் என்று சொல்லிட்டே போகலாம். ஆன கும்மாளம் நிகழ்ச்சி செய்யும்போது இத்தனை விடையங்களிலும் அத்துப்படியாக இருக்க வேண்டும் சாதாரண அறிவிப்பாளனை விட பரந்துபட்ட தேடல் இருக்கவேண்டும். ஒவ்வோரு நாளும் நம்மை சுத்தி புதிது புதிதாக நடக்கின்ற அத்தனை விடையங்களிலும் தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தை அவதானித்துக் கொண்டு இருக்கணும். இந்த உகலத்தில ஒரு சம்பவம் நடக்கின்றது என்றால் நாளை எப்படி நிலமை மாறும் என்ற ஊகிப்பு திறனும். இதற்கு முதல் அப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கா என்ற தேடலும் இருந்தால் மாத்திரமே கும்மாளம் நிகழ்ச்சியினை இலகுவாக தொகுத்து வழங்க முடியும். என்னைப் பொருத்தவரை கும்மாளம் நிகழ்ச்சி சவாலான நிகழ்ச்சி அல்ல, அந்த நிகழ்ச்சிக்காக எப்போதும் நான் விழிப்பாகவே இருப்பேன். ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதில் இருந்து என்னை தயார்படுத்திக் கொண்டே இருப்பேன், அன்றைய நாளில் என்னென்ன விடயங்கள் பேசுபொருளாக மாறுகின்றது என்று தேடிக்கொண்டே என்னை தயார்படுத்திக்கொள்வேன். மற்றைய நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் போது இது சவாலா என்று நீங்கள் கேட்பதில் நான் சொல்ல விரும்புவது ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப் பட்டிருக்கும் ஞாயிற்று கிழமைகளில் நான் செய்யும் சண்டே உதயராகங்கள் நிகழ்ச்சி, அது ஒரு போட்டி நிகழ்ச்சி அதனால ஒவ்வொரு கிழமையும் புதிது புதிதாக பேட்டிக்கான ஐடியாக்களை யோசிக்க வேண்டி இருக்கும். அது ஒன்றும் சவாலான விடயம் அல்ல… ஆனால்,  நான் செய்த கள்ள மனத்தின் கோடியில் நிகழ்ச்சியில் ஒரு சவால் இருக்கிறது. அது ஒரு இயக்குநரையோ அல்லது பாடகரையோ அல்லது நடிகரையோ நேர்காணல் செய்கின்ற போது அவர்களுடன் கொஞ்சம் நெருக்கமாக பேசிவிடுவேன் பழகிவிடுவேன் அந்த நேரத்தில் குழப்பகரமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட விடயங்கள், அவர்களை மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கேள்விகளை முடுக்கி விடுவது என்று இப்படியாக நான் கேள்வி கேட்கின்ற போது எங்கே அவர்களில் மனம் நொந்துவிடுமோ என்று எண்ணி சிலவேளைகளில் நான் கேட்க நினைத்த கேள்விகளை தவிர்த்தும் உண்டு. சில வேளைகளில் கேட்க நினைத்த கேள்விகளை சுற்றிவளைத்து கேட்டதும் உண்டு. இது தான் என்னைப் பொருத்தவரைக்கும் சவாலான விடயம். கும்மாளம், சண்டே உதயராகங்களை விட கள்ள மனத்தின் கோடியில் நிகழ்ச்சி செய்யும் போது தான் சவாலே இருக்கு.

இந்த ஏகலைவனுக்கு துரோணர் யார்?
எப்போதுமே இந்த ஊடகத்துறையில் என்னுடைய குரு அண்ணன் லோசன் அண்ணா அவர் இல்லா விட்டால் சூரியனில் வாய்ப்பே எனக்கு கிடைத்திருக்காது. இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது. நிறைய விடயங்களை அவரிடம் இருந்து நாம படிச்சுக்க வேண்டியது இருக்கு என்னுடைய 07 வருட ஊடகப் பயணத்தில்  அவர் வழிகாட்டிய விடயங்கள் நிச்சயம் என்னை மெருகேற்ற உதவும்.

சமூக வலைத்தளங்களில் உங்களை பாராட்டுகின்றவர்களைப் போல, எதிர்மறை விமர்சனங்களை முன் வைக்கின்றவர்களை எப்படி கையாளுவீர்கள்?
என்னை சமூக வலைத்தளங்களில் எதிர்மறையா விமர்சனம் செய்தவங்க யாரும் இல்ல. ஆனால் என்னை நன்றாக தெரிந்த பழகின, புரிந்த நண்பர்கள் சிலர்  வேணும் என்றே விமர்சனம் பண்ணுவாங்க அதை எல்லாம் கண்டுக்கிறது இல்லை. அது தொடர்பாக அவர்களுக்கு ஒப்புவிக்க போவதும் இல்லை. அது எனக்கு விமர்சனம் மாதிரி தெரியல ஒரு விதமான காழ்ப்புணர்ச்சி இது நண்பர்கள் மத்திய இருந்து வாரது வழமை தானே. மற்ற படி நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வேன் என்னை மாற்றிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வேன்.

வானொலித்துறைக்குள் இல்லையென்றால் நீங்கள் எங்கே?
நிச்சயமாக ஊடகத்துறைக்குள் தான் நான் இருந்திருப்பேன். வானொலி இல்லை என்றால் Investigate Journalists, Documentary Producer இவை இரண்டும் எனக்கு பிடித்தமானவை இதிலே பயணிச்சிருப்பேன். ஆனால் இப்போது தான் நிறை ஆர்வம் வேறு துறைகள் மீதும் வர ஆரம்பிச்சு இருக்கு. பார்க்கலாம்…!

சமூக வலைத்தளங்களின் வருகை, வானொலி & தொலைக்காட்சிகளின் தாக்கத்தை குறைத்திருப்பதாய் தோன்றுகிறது. உங்கள் பார்வையில் இது எப்படியிருக்கிறது?
காலமாற்றம் என்பது எப்போதும் நிகழ்வது தான் ஆனால் அந்த மாற்ற நீரோடையில் சேர்ந்து பயணிக்கும் போது தான் ஒரு துறையில் நிலைத் தன்மையை அளவீடு செய்ய முடியும். நிச்சயம் சமூக வலைத்தளங்களின் வருகை என்பது வானொலிக்கும், தொலைக்காட்சிக்கான இடையிலான நெருக்கத்தை கொஞ்சம் குறைத்தாலும்  சமூக வலைத்தளங்களின் துணையோடு வானொலியும் தொலைக்காட்சியும் இன்னும் உயிர்ப்போடு பயணிக்கின்றது. இன்னும் பயணிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உண்மையில் இந்த சமூகவலைத்தளங்கள் வந்த பிறகு வானொலியும் தொலைக்காட்சியும் அடுத்த தளத்துக்கு நகர்ந்திருக்கிறதே என்றே நான் எண்ணுகிறேன்.

சமூகவலைத்தளத்தளங்களின் ஆதிக்கம் இப்போது எம்மோடு இருந்தாலும் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இருக்கும் ரசனை இன்னும் விட்டுப்போகவில்லை அதற்கான நேயர்வட்டம் இருந்துகொண்டே இருக்கும், அதனால் தான் இவ்விரண்டு ஊடகப்பரப்பும் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றது என கூறலாம். ஒரு சின்ன உதாரணம் இணையத்தளம், அல்லது Youtube களில் பாடல்கள் கேட்க பழகிவிட்டாலும், அதே பாடலை ஒரு வானொலியில் கேட்பது என்பது அது ஒரு விதமான ரசனை அதை அனுபவித்து பாருங்கள் நிறைய புரிதல் கிடைக்கும். ஆக இந்த சமூகவலைத்தள பரம்பல் இந்த ஊடகப் பரப்புக்களுக்கு மிகப்பெரிய தீனி, அதில் மிகப்பெரிய வியாபாரமும் இருக்கிறது.

போட்டி நிறைந்த இந்தத் துறையில், உங்களை எப்படி சவால்களை கடக்க கற்பித்துக் கொண்டீர்கள்?
நிச்சம் போட்டி எல்லாவற்றிலும் நிறைந்தே இருக்கவேண்டும் என்று அடிக்கடி நினைத்து கொள்பவன் நான். அதனால் தான் இந்த துறையை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள முடிகிறது. போட்டி இல்லை என்றால் ஒரு வெற்றியை ரசித்து ருசித்து கொண்டாட முடியாது.

சவால்கள் நேரங்கள் காலங்கள் சூழல்களுக்கு ஏற்றால் போல் மாறுபடும். உண்மையில் எனக்கு முன் வைக்கப்பட்ட சவால்கள் அத்தனையும் நான் நிதானத்தோடு பொறுமையோடும் தான் கடந்து வந்திருக்கிறேன் வந்துகொண்டு இருக்கிறேன்.ஊடகத்துறை பொறுத்தவரைக்கும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் என் போட்டியாளர்கள் தான். அந்த போட்டியில் நீச்சலடிக்க வேண்டும் என்றால் நிறைய தேடவேண்டும் அனுதினம் கற்கவேண்டும், புதியவற்றை நுகரவேண்டும், மனசுக்குள்ளே நிறைய கேள்விகளை கேட்கவேண்டும், ஒரு விடையத்தை அதன் அந்தம் வரை ஆராயவேண்டும் மிக முக்கியமாக மனிதர்களை புரிந்து வைக்கவேண்டும். இது ஒரு சமன்பாடு மாதிரி இதை ஒவ்வொரு காலநீட்சியிலும் உபயோகப்படுத்த தெரிந்தால் போதும் இந்த துறையில் நீடிப்பதும் நிலைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது என்பது உணர்ந்து கொள்ள முடியும்.

உங்களது பார்வையில், நீங்கள் இரசிக்கும் உங்களது துறையைச் சேர்ந்தவர்கள் யாவர்?
நான் ரசிக்கின்றவர்கள் என்றால், என்னை வானொலிக்கு அறிமுகப்படுத்தியவர் என் குருஜி லோசன் அண்ணா, ஒரு பரந்துபட்ட ஆளுமை என் வழிகாட்டி என்பதால் அவரை புடிக்கும், ஹோசியா அக்கா என்னை கவர்ந்த அறிவிப்பாளினி அவங்கிட்ட இருந்து நிறைய படிச்சுக்கலாம், மேனகா அக்கா, அவங்ககிட்ட இருக்கிற அந்த கலகலப்பு எப்பவும் என்னை கவரும் அப்புறம் அவங்க playlist, சைலி அக்கா எல்லாவிதமாகவும் நிகழ்ச்சி செய்வாங்க,சந்துரு அண்ணா நிகழ்ச்சி பண்ணும் போது அந்த நிகழ்சியில ஒரு Fun Mood Creat பண்ணுறது. மனோப்பிரியா செய்தி வாசிப்பு என என்னை மிகவும் கவர்ந்தவை!!

அறிவிப்பாளர் கஸ்ட்ரோ ராகுல் நிகழ்ச்சி படைக்கும் போது, அல்லது செய்தி வாசிக்கும்போது திணறிய சந்தர்ப்பங்களுண்டா?
நிகழ்ச்சி செய்யும் போது என்பது குறைவு சில வேளைகளில் ஒரு விடயம் பற்றி பேசும்போது சிலவற்றை சொல்ல மறந்திருப்பேன். அப்புறம் தான் யோசிப்பேன் அட ” இதோட சேர்த்து அதையும் சொல்லியிருக்கலாம் என்று”  அதைவிட செய்தி என்று வரும் போது ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பதற்றத்தோட தான் வாசிக்க போவேன். கட்டாயம் மைக் முன்னாடி அந்த பயம் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். சில வேளைகளில் சில தடுமாற்றங்கள் வரும் ஆனால் அப்போது நின்று நிதானித்து வாசித்துவிடுவேன்.

உங்களது வானொலி வாழ்க்கையில் நெகிழ்ச்சியான தருணம் எது?
எப்போதும் என்னைப் பற்றியதான விசாரிப்புக்கள் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும். அதாவது நான் எப்போது வீட்டிற்கு வருவேன், என்னை பார்க்கணும் பேசணும் என்று இப்படியான விசாரிப்புக்கள் என் குடும்பத்தாருடன் இடம்பெறுவது வழக்கம். அது என் அப்பாவின் நண்பர்கள், குடும்ப நண்பர்கள், தொலைதூர சொந்தங்கள் இப்படி நீண்டுகொண்டே போகும். நான் எப்போதும் 2 அல்லது 3 மாத இடைவெளியில் தான் வீடு செல்வேன் . நான் வீடு சென்றுவிட்டேன் என்று அறிந்தவுடனேயே என்னை பார்க்க வந்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் வீடு செல்லும் போது யாரேனும் ஒருவரை சந்தித்து அவர்களின் அன்பில் அகமகிழ்ந்து வருவேன். அவர்கள் என்னுடன் என் தொழில்பற்றிய விசாரிப்புக்கள், என் நிகழ்ச்சி பற்றிய தங்களின் அபிப்பிராயங்கள், எல்லாமுமாக அந்த சம்பாசனைகள் இருந்துவிட்டு போகும். இதிலே என் வருகைக்கா எதிர்பார்த்து என்னோடு பேசவேண்டும் என்று தங்கள் நேரத்தை தந்தவர்கள் பற்றி எப்போதும் என் மனம் நெகிழ்ந்து போகும்.

நேர்காணல்: நட்சத்திரன்

You must be logged in to post a comment Login