Stories

சிகோவுடன் சோலா

By  | 

வீதியோரத்தில் இரண்டு தெருநாய்கள் குரைத்துக்கொண்டிருக்கையில் அவ்வழியே  சென்ற வழிப்போக்கன், நின்று அவையிரண்டையும் பார்த்து சிரித்தபடி, ‘அட! இந்த தெருநாய்களும் நம்மை போல் கதைக்கத் தொடங்கினால் எப்படியிருக்கும்” என நினைத்தார். அட இதுகூட நகைச்சுவையான கற்பனையாகத்தானே இருக்கும்.

அவர் மனதில் எண்ணியவாறே அந்த தெருநாய்களுக்கு இரு கதாபாத்திரங்களை உருவாக்கி,  அதில் ஒரு நாய்க்கு ‘சிகோ’ என்றும் இன்னொரு நாய்க்கு ‘சோலா’ என்றும் பெயரிட்டார். இரண்டையும் நல்ல நண்பர்களாக கற்பனையில் வடிவமைக்க, இரண்டும் பேசத்தொடங்கின.

‘அடேய் நண்பா சிகோ! என்னடா செய்கிறாய்?”

‘அட நம்ம சோலாவா! வாடா நண்பா வா.. நான் நல்ல உணவேதும் இருக்குதானு தேடுறேன் சோலா”

‘அட யாருடா நீ, நமக்கு எங்கடா நல்ல சாப்பாடு கிடைக்கப்போகுது”

‘அப்படியெல்லாம் சொல்லாதடா சோலா. எனக்கும் நல்ல சாப்பாடு போட ஒரு அம்மணி இருக்காங்க, தெரியுமா?”

‘அம்மணியா? அவங்க யாருடா சிகோ?”

‘தெரியலடா சோலா… ஆனால், ஒவ்வொரு நாளும் நான் இருக்குமிடம் தேடி வந்து சாப்பாடு போடுவாங்க. இப்போ கொஞ்ச நாளா அந்த அம்மாவ காணல. அவங்களத்தான் இவ்வளவு நேரமும் எதிர்பார்த்துட்டு இருந்தேன். அவங்களும் வரல. அதான் இந்த குப்பைத்தொட்டியில ஏதும் இருக்குமான்னு தேடுனேன்டா”

‘குப்பைலயா! இதுல மனிதர்கள் சாப்பிட்டு மீதிப்படுகிற அல்லது பழுதடைந்த உணவுகளைத்தான் போடுவாங்க. நாமலும் ஓர் உயிரினம்னு யோசிச்சாங்கனா நமக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும் சிகோ”

‘ஆமாடா சோலா, அது என்னவோ உண்மைதான். இந்த மனிதர்கள் ஏந்தான் உணவுகளை வீணாக்குகிறார்களோ, தெரியல. இப்படி வீணாக்குறதுக்கு பதிலா நாட்டில் எவ்வளவோ உயிரினங்கள் நம்மல போல சாப்பாடு இல்லாமல் தவிக்குது. அதுகளுக்கெல்லாம் கொடுத்தா எவ்வளவு நல்லாயிருக்கும்”

இப்படியாக பேசி சோகத்துடன் உணவு தேடிச் சென்றன.

வழிப்போக்கனும், இல்லை இல்லை… நம் கற்பனையாளனும் தன் கதாபாத்திரங்கள் பின்னாலேயே நடந்து சென்று கற்பனையை தொடர்ந்தார்.

இரண்டும் பாதையை கடந்துகொண்டிருந்தன.

“டேய் சோலா, உனக்கு சாப்பாட்டு வாசனை வீசலயா?”

‘சாப்பாடா! அட ஆமாடா… நல்ல வாசனை. டேய் சிகோ அதோ பாருடா… ஒரு ஐயா பெரிய சாப்பாட்டுப் பொதியை கொண்டு போறாரு…” என்று சொன்னபடி, இரண்டும் மோப்பம் பிடித்தவாறே அந்த ஐயாவின் பின்னால் சென்றன.

திடீரென ஐயா பின்னால் திரும்பிப் பார்க்க, இரு உணவுப் பிரியர்களும் அவரின் காலருகே போய் நின்றன. அவர் இவற்றை கண்;;டவுடனே கோபத்துடன் ‘சீசீ ஓடு… போ…’ என்று விரட்டினார்.

‘சோலா, ஐயா நம்மள தாக்குறதுக்கு கல்லை வேற         தூக்கிட்டாரு. இன்னைக்கு அடி வாங்குறது உறுதிடா. எடுடா ஓட்டத்த. திரும்பிப் பாக்காம ஓடுடா சோலா பயலே!”

இரண்டும் வேகமாக ஓடி  ஓரிடத்தை அடைந்தன. இரண்டுக்குமே பசியும் களைப்பும் அதிகமானது.

சிகோவை பார்த்து சோலா, ‘இந்த மனிதர்கள் ஏன்டா இப்படி இருக்காங்க?” என கேட்டது.

‘நாம குரைச்சிட்டுத்தானே இருந்தோம். நாம கதைக்கிறது அவருக்கு கேட்காதே. நம்ம பாஷை அவங்களுக்குப் புரிஞ்சா நாமலே சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிடலாம். நம்ம சத்தம் பிடிக்காம தான் மனிதர்கள் ‘சீ போ’னு விரட்டுறாங்க…”

‘ஆனா ஒன்னுடா சிகோ, நம்மள தொரத்தி வந்த ஐயா இந்த வயசுலயும் நம்ம பின்னால ஓடி வந்திருக்கக்கூடாது சிகோ.

பாவம்! ஓடிவந்த மனுசனுக்கு என்ன ஆச்சோ” சொல்லி சிரித்தது சோலா.

பின்பு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

‘டேய்; சிகோ, நாம இந்த இடத்த இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்குடா” என்றது.

‘ஆமாடா சோலா, அட நாம ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்கிறோமே டா”

சோலாவுக்கு ஒரு யோசனை தட்டியது.

“டேய் சிகோ, நாம ஏன் உனக்கு ஒவ்வொரு நாளும் உணவளிக்கும் அம்மணி வீட்ட தேடிப் போகக்கூடாது”

‘ஏன்டா யாரிடமாவது கல்லடி வாங்குறதுக்கா?”

‘இல்லடா சிகோ… எவ்வளவோ அலைந்து திரிந்துட்டோம். அம்மணிய தேடிப்போய்தான் பார்ப்போமே”

‘சரிடா சோலா. இதுவும் நல்ல  யோசனைதான்”

இரண்டும் பேசி பேசி நடந்தன. சிறு பாதைக்குள் நுழைந்தன. பாதையின் இருபுறமும் தேடித் தேடி பார்த்து வந்தன.

அந்நேரம் நம் சோலா கண்ணில் ஓர் அம்மணி தென்பட்டார்.

‘டேய் சிகோ, அங்க பாருடா. அம்மணி ஒருவர் சால்வை போர்த்திட்டு போறாங்க.

வா, அருகில் சென்று பார்ப்போம். அங்கு தண்ணீர் கோப்பைகள் நிறைய இருக்கு. கொஞ்சம் தாகம் தீர குடி. அப்புறம் அம்மணிய பாப்போம்” என்றது சோலா.

தண்ணீரை பருகியபடி சிகோ, ‘சோலா, நா சொன்ன அம்மணி இவங்கதான்டா” என்றது.

‘இந்த அம்மா புறாக்களுக்கு உணவளிக்கும் அழகிலயே நினைச்சேன்டா சிகோ”

‘இவங்க ஏன் சால்வை எல்லாம் போர்த்தி இவ்வளவு சோர்வாக இருக்காங்க சோலா”

‘இவங்களுக்கும் மனிதர்களுக்கு வரும் வியாதி எதுவும் வந்திருக்கும்டா. அதான் இவங்க என்னை தேடி வரல போல”

‘எனக்கு பசி தாங்கமுடியல. நான் குரைக்கப் போறேன்”

சோலா அவ்வளவு குரைத்தும் கேட்காததுபோல் இருந்த அம்மணி, சிகோ குறைத்ததும் உடனே திரும்பிப் பார்த்தாங்க.

அம்மணி தன் மனதில் ‘அட கணவரை அனுப்புனமே… ‘என்னோட நாய்  நண்பனுக்கு உணவு கொடுத்துட்டு வாங்க’னு. நாய் மட்டும் வந்திருக்கு… அவர காணலயே.’ என நினைத்துக்கொண்டார்.

உடனே சிகோ அருகில் அவர் சென்று அதை தடவியபடி, ‘என்ன காணோம்னு வீடு தேடி வந்துட்டியா என் குட்டிப்பயலே! இது யாரு? உன் கூட்டாளியா?” என்று சொல்லி சோலாவையும் வருடினார்.

சிகோவும் அதன் பாஷையில் ஏதோ சொல்ல, “சரி இருங்க சாப்பாடு எடுத்துட்டு வாரேன்” என்று உள்ளே போனார் அம்மணி.

‘பாருடா சோலா, நாம மனிதர்களை எவ்வளவு திட்டுனோம். ஆனால், அம்மணிக்கு நம்ம மேல  எவ்வளவு அன்பு பார்த்தியா?”

‘உண்மைதான் சிகோ. நான் கூட எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி தவறா நினைச்சிட்டேன்”

இவ்வாறு சிகோவும் சோலாவும் கதைத்துக்கொண்டு இருக்கும்போதே அம்மணி உணவை எடுத்து வந்து இரு தட்டுகளில் வைத்து அன்பாக வழங்கினார்.

அப்போது நம் கற்பனையாளர் வெளியே நின்று அந்த காட்சியை பார்த்தார்.

“என் மனைவி தெருநாய்களுக்கு உணவளித்துவிட்டு வரச்சொன்னாள். ஆனால், நான் இவற்றின் பசியை உணர்ந்து உணவளிக்காமல், கற்பனைக்கதையில் இருந்திருக்கிறேனே. சரி, அதுவும் நன்மைக்குத்தான்.

கற்பனையிலாவது பிற உயிர்களின் மனதை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததே.

இயற்கையில் மனிதர்களை போல் எல்லா உயிரினங்களும் பேசத் தொடங்கினால் பல உண்மைகளும் உணர்ச்சிகளும் வெளிக்கிளம்பும்.

உயிர்கள் என்றாலே அனைத்தும் ஒன்றுதானே! மற்ற உயிரினங்களையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என நினைத்ததோடு கற்பனையிலிருந்து விடுபட்டார் நம் கற்பனையாளர்!

–  லுஷாந்தனி திலகரட்ணம்,
நீர்கொழும்பு.

You must be logged in to post a comment Login