Health

சுவாசக் கவசம் யார்? எப்படி? அணிய வேண்டும்

By  | 

கொரோனா வைரஸ் கிருமியான கொவிட் – 19இன் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பலரும் சுவாசக் கவசம் எனப்படும் Mask அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சினாவின் வுஹான் நகரில் கொவிட் – 19இன் தொற்றைத் தடுக்க, சளிக்காய்ச்சல் உடையவர்கள் சுவாசக் கவசங்களை அணிய வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆரம்பம் முதலே கிருமித் தொற்று மற்றும் சூழலிலுள்ள மாசுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிலர் சுவாசக் கவசங்களை அணிந்துள்ளனர். அந்த வகையில் தற்போது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் தங்களை இந்த கொரோனா வைரஸிலிருந்து தடுப்பதற்காக சுவாசக் கவசங்களை அணிய ஆரம்பித் துள்ளனர். இந்த சுவாசக் கவசங்களை சிலர் பல நாட்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும், சுவாசக் கவசங்களின் பயன்பாடு குறித்து நம்மிடையே பல கேள்விகள் உள்ளன. அவற்றுக்கான பதில்களை இதனைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

சுவாசக் கவசம் ஒன்றினை எவ்வளவு நேரம் அணியலாம்?
நாம் சாதாரணமாக கடையில் வாங்கி அணியும் சுவாசக் கவசம் ஒன்றினை சுமார் 4 மணி நேரம் மட்டுமே அணியலாம்.
குறித்த நேரம் முடிவடைந்ததுமே அதனை அகற்றி விட்டு மற்றன்றை அணிந்துகொள்ள வேண்டும்.
அப்படி செய்யாமல் நீண்டநேரம் அணிந்திருந் தால் அதில் கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளது.

பயன்படுத்திய சுவாசக் கவசத்தை மீண்டும் அணியலாமா?
இன்றைய சூழலில் பல வகை சுவாசக்கவசங் கள் சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றில் சில குறுகிய பாவனைக்கு ஏற்றவை யாகவும் சில கழுவி மீண்டும் பயன்படுத்தும் வகை யிலும் தயாரிக்கப் பட்டிருந்தாலும் கூட பாவித்த சுவாசக் கவசங்கள் மீள் பாவனைக்கு உகந்த தல்ல என்கின்றனர் வைத்திய நிபுணர் கள்.

சுவாசக் கவசத்துக்குப் பதிலாகக் கைக்குட்டையைப் பயன்படுத்த லாமா?
சுவாசக் கவசங்கள் கிருமிகளைத் தடுக்கும் வகையில் தயாரிக்கப் பட்டவை. ஆனால், சாதாரணத் துணிகள் அப்படியில்லை. அதனால் கைக்குட்டையைப் பயன்படுத்துவது பயன்தராது.

பல சுவாசக் கவசங்களை ஒன்றாக அணிந்தால் பாதுகாப்பாக இருக்குமா?
ஒருவேளை ஒரு சுவாசக் கவசத்தைப் பயன்படுத்தினால் போதும். ஒன்றன் மீது ஒன்று அணிவதால் கூடுதல் பாதுகாப்பும் ஏதும் கிடைக்காது. அதற்கான சான்றுகளும் இல்லை.

சுவாசக் கவசத்தை அணிவது எப்படி?

  • சுவாசக் கவசத்தின் மடிப்புகளை விரித்து, கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
  • மூக்கு, வாய், தாடை ஆகியவை முழுமை யாக மூடுமாறு சுவாசக் கவசத்தினை அணியவேண்டும்.
  • சுவாசக் கவசத்தினை சுற்றி இடை வெளி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
  • 4 மணிநேரத்துக்கு ஒருமுறை அல்லது சுவாசக் கவசம் ஈரமான பின், அதை மாற்றி விட வேண்டும்.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சுவாசக் கவசத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
  • பயன்படுத்திய சுவாசக் கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • சுவாசக் கவசத்தை அணிந்திருக்கும் போது கைகளால் தொடக்கூடாது.
  • சுவாசக் கவசத்தை கழற்றும்போது தொற்று ஏற்படவாய்ப்புள்ள வெளிப் புறத்தைத் தொடக்கூடாது.
  • சுவாசக் கவசத்தை கழுத்தில் தொங்க விடக்கூடாது.
  • சுவாசக் கவசத்தை கழற்றிய பின்னர் கைகளை முறையாகக் கழுவ வேண்டும்.

You must be logged in to post a comment Login