Antharangam

சேர்ந்து வாழலாமா?

By  | 

கேள்வி:

நான் ஒரு பெண். வயது 39. திருமணமாகி விவாகரத்தானவள். நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றேன். 34 வயதில்தான் திருமணம் ஆனது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே பிரிந்துவிட்டோம். காரணத்தைச் சொல்ல நான் விரும்பவில்லை. இப்போது, எனது நிறுவனத்தில் பணிபுரியும் 38 வயதான ஒருவர், என்னைத் தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைக்கிறார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்று தயங்குகிறேன். ஆனால், உடலளவில் இருவரும் இணைந்துவிட்டோம். அவருடன் சேர்ந்து வாழ்வதில்தான் தயக்கமாக இருக்கிறது.

 

பதில்:

ஏற்கனவே இருவரும் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கிவிட்டீர்கள் எனும்போது, நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது பெரும்பாலும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.

மேலும் உங்கள் கேள்விக்கான மிகச் சரியான பதிலைத் தருவதில் சற்றுச் சிக்கல் இருக்கிறது. ஏனென்றால், குறிப்பிட்ட அந்த நபர் திருமணமானவரா, உங்களைச் சேர்ந்து வாழ வருமாறு அழைப்பது உங்கள் மேலுள்ள காதலினாலா அல்லது உங்கள் உடல் மீது கொண்ட கவர்ச்சியினாலா என்பது தெரியவில்லை. மனமுதிர்ச்சியுள்ள பெண்ணாக, நீங்கள்தான் அதை அடையாளம் காண வேண்டும்.

ஒருவேளை, அவர் திருமணமாகாதவர் என்றால், உண்மையில் உங்களை மனப்பூர்வமாகக் காதலிக்கிறார் என்றால், இருவரும் திருமணம் செய்துகொண்டே வாழலாமே…? சேர்ந்து வாழ்தல் என்பது, இருவரில் ஒருவருக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் போய்விட்டால் எந்தச் சிக்கலும் இல்லாமல் பிரிந்துவிடலாம் என்ற வசதியை மையப்படுத்தியது.

பாதுகாப்பான எதிர்காலம் ஒன்று வேண்டும் என்றால், அவருடன் திருமண பந்தத்தில் இணைவதே நல்லது. நீங்கள் இருவரும் நெருங்கிப் பழகுவது உங்கள் நிறுவனத்தில் அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். அதையே நீங்கள் இருவரும் தைரியமாக எதிர்கொள்கிறீர்கள் என்றால், திருமணம் செய்துகொண்டு கணவன்-மனைவியாக வாழ்வதில் என்ன சிக்கல்?

You must be logged in to post a comment Login