Articles

டீன் ஏஜ் பருவம்… பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?

By  | 

மனித வாழ்க்கையில் டீன் ஏஜ் பருவம் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான பருவம். ஆனால், அப்போதுதான் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நமக்கு ஏற்படுகின்றன.

அந்தப் பருவத்தில்தான் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான மனதிடமும்  அதிகரிக்கிறது. ஆனால், ஒரு சிலர் டீன் ஏஜ் காலத்தை முறையாகக் கையாள முடியாமல் திணறுகின்றனர். டீன் ஏஜ் பருவத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றமடைகின்றனர்.

இது அவர்களது தன்னம்பிக்கையைப் பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது. சில சமயங்களில் தற்கொலை எண்ணமும்  மேலோங்குகிறது.

இந்தப் பிரச்சினையை உளவியல்பூர்வமாக அணுக வேண்டியது மிகவும் அவசியமானது. 13 வயது முதல் 19 வயது வரையில் உடலும் மனமும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. குழந்தைப் பருவம் என்பதிலிருந்து இளமைப்பருவம் என்ற அடுத்தகட்டத்துக்கு அவை அடியெடுத்து வைக்கின்றன.

அத்தகைய பெரும் மாற்றத்தின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நமக்குக் கட்டுப்படாமலேயே நம் மனம் செயல்படத் தொடங்கும். மனம்  சொல்லும் வழியில் உடல்   செல்லும். மனது சரியான பாதையில் வழிநடத்துகிறதா என்பது பற்றி உடல் சிந்திப்பதில்லை. மனம்போன போக்கில் செல்லும் டீன் ஏஜ் பருவத்தினர், கட்டுப்படுத்தும் ஓட்டுநர் இல்லாத வாகனம் விபத்தில் சிக்குவதைப் போல வாழ்க்கைப் பயணத்திலும் பெரும் விபத்துகளைச் சந்திக்கின்றனர்.  அவற்றால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு நேரும் பக்கவிளைவுகள் பல.

எனவே, டீன் ஏஜ் பருவத்தினர் தங்கள் மனதைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக 18  வயது முதல் 24 வயது வரை எந்தவித கவனச்சிதறலுமின்றி மனதை   வழிநடத்துவது இளைஞர்களுக்கு சற்று கடினமாகவே உள்ளது. ஆனால், அந்த வயதில் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டால் பிறகு எப்போதும் மனம் உங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும்.

டீன் ஏஜ் பருவத்தினர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது நட்பு வட்டம். நம் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

நமது பழக்க வழக்கங்கள், அன்றாடச் செயல்பாடுகள், உணர்வுகள், தொடர்புகள் எனப் பல்வேறு விவகாரங்களை நிர்ணயிப்பதில் நண்பர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே, நம்மை வாழ்வின் அடுத்த உயர்ந்த கட்டத்துக்கு உந்தித் தள்ளுகின்ற நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களிடம் நட்பு பாராட்ட வேண்டும். இதை மனதில் மிகவும் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ்  பருவம்  என்பது பெற்றோரை எதிரிகளாகப் பார்க்க வைக்கும் பருவம். அப்பருவத்தில் நண்பர்கள் கூறுவதே நமக்கு வேதவாக்காக இருக்கும். நண்பர்கள் பின்பற்றும் பழக்கங்கள் அத்தனையையும் நாமும் பின்பற்றத் துணிவோம். அதை சமூகம் தீய செயல்கள் என ஒதுக்கியிருந்தாலும், அது குறித்து பெரிதும் கவலைப்படாத பருவமே டீன் ஏஜ் பருவம். ஆகவே, பெற்றோரும் டீன் ஏஜ்  பருவத்தினரைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். அவர்கள் வழிதவறுவது தெரிந்தால், உரிய வழியில் முறையாக அவர்களை வழிநடத்துவது பெற்றோரின் கடமையாகும்.

மேலும், இப்பருவத்தில்  டீன் ஏஜ் பருவத்தினர் தன்னம்பிக்கை இழந்து தவிப்பார்கள். டீன் ஏஜ்  பருவத்தினரில் பிரச்சினையை எதிர்கொள்வோர் எப்போதும் மற்றவர்களுடன் இணைந்து காணப்படாமல் தனிமையில் இருக்க விரும்புவர். அந்நேரங்களில் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் துணை மிகவும் அவசியம். அவர்களின் ஆறுதலும் வழிகாட்டுதலும் மட்டுமே டீன் ஏஜ் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளம்பருவத்தினரை அவற்றிலிருந்து விடுவிக்கும். டீன் ஏஜ்  பருவத்தில் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவார்கள்.

டீன் ஏஜ் பருவத்தினரைக் கையாள்வதில் பொறுமை மிக அவசியம். மாணவர்களைச் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக மாற்றுவதற்கான பருவமே அது. அப்பருவத்தில் ஏற்படும் இடையூறுகள் வாழ்க்கையின் பெரும்பகுதியையே திசைமாற்றிவிடும். எனவே, டீன் ஏஜ் பருவத்தினரை நிதானமாகக் கையாள வேண்டும். அவர்கள் வழிதவறி சில தேவையற்ற விவகாரங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை சிறந்த முறையில் மீண்டும் நல்வழிப்படுத்துவதற்கான வழிகளையே பெற்றோர்கள் கைக் கொள்ள வேண்டும்.

தவறு செய்ததற்காக டீன் ஏஜ் பருவத்தினரைத் தண்டிப்பதால், அவர்களை நல்வழிப்படுத்த முடியாது என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொள்வது அவசியம்.

You must be logged in to post a comment Login