Antharangam

தம்பியின் காதலி!

By  | 

கேள்வி:

எனக்கு வயது 33. நான், என் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். எனது தம்பி, கடந்த ஆறு வருடங்களாக எங்களுடன்தான் தங்கியிருந்தார். சரியான வேலை எதுவும் கிடைக்காததால் அவரை என் கணவர்தான் பராமரித்து வந்தார். தம்பிக்குத் தேவையான அனைத்தையும் அவர்தான் செய்து வந்தார். கடந்த வருடம் தம்பிக்கு நல்ல வேலை கிடைத்தது. சந்தோஷப்பட்டோம். இப்போது ஒரு பெண்ணை விரும்புவதாகத் தெரியவந்தது. அந்தப் பெண் பற்றி விசாரித்ததில், அவருடைய தாய் விவாகரத்துச் செய்தவர் என்றும் அந்தப் பெண்ணின் நடத்தை பற்றி எதிர்மறையான கருத்துக்களுமே கிடைத்தன. தம்பியிடம் இதுபற்றிக் கதைத்ததற்கு எங்களுடன் – குறிப்பாக, என் கணவருடன் – கோபித்துக்கொண்டுவிட்டார். இப்போது வீட்டில் அவர்கள் இருவரும் பேசுவதில்லை. இதனால் வீட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுவிட்டது. எப்படி இந்த நிலைமையைக் கையாள்வது?

 

பதில்:

தெளிவான கேள்வி. வாழ்த்துக்கள். இதை ஒரு பிரச்சினையாக நினைக்காமல், ஒரு சூழ்நிலை மாற்றம் என்ற ரீதியில் இந்த விடயத்தை நீங்கள் அணுகும் முறை பாராட்டப்படவேண்டியது. இருக்கட்டும்!

நீண்ட காலமாக, ‘என்னால் ஒரு நிலைக்கு வர முடியவில்லையே’என்ற எண்ணத்திலேயே உழன்றுகொண்டிருந்த உங்கள் தம்பிக்கு ஒரு பிடிமானம் கிடைத்துவிட்டது. அது தந்திருக்கும் அதீத நம்பிக்கையில் அவர் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போக நினைக்கிறார். அதில் தவறேதும் இல்லை.

உங்கள் தம்பியின் காதலி பற்றி நீங்கள் விசாரித்த தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை இன்னும் சற்று ஆராயுங்கள். ஒரு பெண் விவாகரத்தானவர் என்பதால், அவரது மகளின் நடத்தையைச் சந்தேகிப்பது அறிவார்ந்த செயல் அல்ல. உறுதியாகாதவரை எதுவுமே சந்தேகம்தான்!

நம் சமூகத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தனக்கு பயன்தராத அல்லது தனது தேவைக்கு உதவாத அல்லது தனது ஆசைக்கு அடிபணியாத ஒருவரை, எந்தவிதக் கூச்சமோ, தயக்கமோ இன்றி சகட்டுமேனிக்கு இழிவாகப் பேசுவது நம் மக்களின் பொதுப் பண்பு. அந்த ஒரு வெளிப்பாடாகக் கூட இருக்கலாமல்லவா, அந்தப் பெண் மீதான விமர்சனங்கள்?

ஒருவேளை, விவாகரத்தான பெண்ணின் மகள் குடும்பத்துடன் ஒத்துப் போகமாட்டார் என்ற உங்கள் நினைப்புக் கூட, அந்தப் பெண் குறித்த எதிர்மறையான எண்ணத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும். அதுவும் கூடத் தவறுதான்!

கற்றுக்கொள்ள நினைப்பவர்கள், தவறானவர்களிடம் இருந்து கூட, எப்படி தவறு செய்யாமல் இருப்பது என்பதைக் கற்றுக்கொள்வார்கள். அதற்கிணங்க, தன் தாய் எப்படித் தனிமரமாக வாழ்கிறாரோ, அப்படியல்லாமல், நானாவது கணவருடன் அனுசரித்து குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டும் என்று உங்கள் தம்பியின் காதலி விரும்பலாம்.

எனவே, அந்தப் பெண் குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தேடிப் பாருங்கள். நீங்கள் அறிந்துகொண்ட விடயங்கள் ஆதாரமற்றவை என்றால் அவற்றைச் சட்டை செய்யாமல், தம்பியின் திருமணத்துக்கு சம்மதம் சொல்லுங்கள்.

அதேநேரம், உங்கள் கணவருடன் உங்கள் தம்பி கோபித்துக்கொண்டதற்கு என்ன காரணம் என்பதையும் பாருங்கள். ஒருவேளை, பரஸ்பரம் வார்த்தைகள் தடித்திருக்கலாம். இதனால் உங்கள் தம்பி காயப்பட்டிருக்கலாம். எங்கே தவறு நடந்தது என்று, நீங்கள் எண்ணிப் பாருங்கள். உங்கள் மனதுக்கு நியாயம் எது என்று தெரிகிறதோ, அதன் சார்பில் நின்று இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

இந்தப் பிரச்சினையின்போது, உங்கள் தம்பி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால், நிச்சயமாக அவரை உங்கள் கணவரிடம் வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள். மாறாக, உங்கள் கணவர் பக்கம் தவறிருந்தால், தனிப்பட்ட முறையில் உங்கள் தம்பியிடம் தனது வருத்தத்தைச் சொல்லும்படி கேளுங்கள்.

ஒரே வீட்டுக்குள் இருந்துகொண்டு ஒருவரையொருவர் முகம் பார்க்காமல் வாழ்வது மிகக் கொடுமையானது. அந்த நிலையை உடனடியாக மாற்ற முயற்சியுங்கள். உங்களால் மாற்ற முடியும்!

 

You must be logged in to post a comment Login