Q&A

தாயா? தாரமா?

By  | 

கேள்வி:

நான் ஒரு ஆண். எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. எனது அம்மாவுக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன்போது, இருவரும் என்னையும் சண்டையில் சேர்த்துக்கொள்கிறார்கள். அம்மாவோ, நான் என் மனைவிக்கு ஆதரவாகப் பேசுவதாகச் சொல்கிறார். மனைவியோ நான் இன்னும் அம்மா பிள்ளையாகவே இருக்கிறேன் என்று சொல்கிறார். இவர்களது பிரச்சினையால் எனக்கு என்னுடைய வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இவர்களது பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?

 

பதில்:

ஆச்சரியமாக இருக்கிறது…. உங்கள் கேள்வி அல்ல… நீங்கள்தான் ஆச்சரியமே! உங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லையா? அல்லது நீங்கள் அதில் வரும் ‘நெடுந்தொடர்’களைப் பார்ப்பதேயில்லையா?

மாமி-மருமகள் சண்டையை எப்படித் தீர்த்துவைப்பது என்பது, கடவுளுக்கே விடை தெரியாத கேள்வி. என்னதான் பரஸ்பரம் குறைகளைச் சுட்டிக்காட்டி சண்டை போட்டாலும், ஒரு ஆணை ஆட்சி செய்வதற்காக, இரண்டு பெண்கள் போடும் சண்டையே இது.

‘என் பிள்ளை, என் விருப்பப்படி வளர்ந்தவன். அவனுக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்’ என்பது அம்மாக்களின் எண்ணம். ‘என் கணவர் என்னை ஆட்சி செய்பவர். அவருக்கு மேல் யாரும் இல்லை. அவரை யாரும் (தன்னைத் தவிர!) அதிகாரம் செய்ய முடியாது, செய்யக்கூடாது’ என்ற எண்ணம் மனைவிக்கு.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில், யார் பக்கமும் நீங்கள் சாராமல் நடுநிலை வகிப்பதே நல்லது. நடுநிலை என்றதும், இருவரையும் சமாதானம் செய்கிறேன் என்ற நினைப்பில் எதையும் சொல்லிவிடக்கூடாது. அது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகத்தான் முடியும்.

அப்படியானால், இதற்கு என்னதான் செய்வது என்ற ஒரு கேள்வி எழும். ஒன்றும் செய்யாதீர்கள். அவர்களுக்குள் ஏற்படும் சண்டையை அவர்களே தீர்த்துக்கொள்ள விடுங்கள். மனைவி, இது பற்றி என்ன சொன்னாலும், ஒன்றும் பேசாமல், அவரது பேச்சை ஆமோதிப்பதாக மட்டும் தலையை ஆட்டிக்கொண்டு இருந்துவிடுங்கள்.

சண்டையைப் பற்றி அம்மா எதுவும் சொன்னால், அதற்கும் தலையை மட்டுமே ஆட்டுங்கள். கொஞ்சம் அதிகமாகக் கரிசனை எடுத்துக்கொண்டு, ஒருவர் இல்லாதபோது இன்னொருவரைப் பற்றித் தாழ்த்திக் கூறி, மற்றவரை சமாதானப்படுத்தலாம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். அடுத்த சண்டை, நீங்கள் சொன்னதை வைத்தே ஆரம்பிக்கும்.

குழந்தைகள் சண்டையை எப்படிக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களோ அப்படியே இதையும் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுங்கள். அதைவிடுத்து, உங்கள் வேலையைக் குழப்பும் அளவுக்கு இந்தச் சண்டைகளைப் பெரிதுபடுத்திக்கொள்ளாதீர்கள்.

You must be logged in to post a comment Login