Health

நடைபயிற்சி முறையாக செய்வது எப்படி?

By  | 

கடற்கரைகள், பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் நடப்பது நல்லது. அதிகாலையில் நடக்கிறவர்கள் அரை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும். உகந்த ஆடைகளை அணிந்துகொண்டு, இரு கைகளையும் வீசியபடி, நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தபடி நடக்க வேண்டும்.

வெறும் காலால் நடப்பது மிக நல்லது என்றாலும் நாம் நடக்கும் இடத்தில் கற்கள், முட்கள் கிடந்தால் கால்களில் குத்தி காயம் ஏற்பட்டு விடும். எனவே சாதாரண காலணி அல்லது இறுக்கமில்லாத ஷூ அணிந்து நடக்க வேண்டும். அப்போது தான் பாதம் அழுந்தும் போது, பாதத்தின் அடியில் உள்ள நரம்பு முடிச்சுகள் தூண்டப்படும்.

புதிதாக நடைபயிற்சி  செய்பவர்கள் நடக்கும் தூரத்தை சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டுமே தவிர ஆர்வக்கோளாறால் முதல் நாளே பல கிலோ மீட்டர் தூரம் நடக்கக்கூடாது. ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டு நடப்பதையும், நாலைந்து பேர் சேர்ந்து பேசிக்கொண்டு செல்வதையும் நடைபயிற்சி என்று சொல்ல முடியாது. ஏனெனில் பேசிக்கொண்டு நடந்தால் நுரையீரலுக்கு செல்லும் ஒட்சிசன் அளவு குறையலாம்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையுள்ள நேரமே நடப்பதற்கு மிக மிக உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மேலும் அப்போது நம் நுரையீரல் நன்றாக வேலை செய்யும். அதிகாலை 5 மணிக்குள் நடக்க முடியாதவர்கள் 5-6 மணிக்குள் நடக்கலாம். காலையில் நடக்க முடியாதவர்கள் மாலை 6-7 மணிக்குள் நடக்கலாம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் போதுமானது.

சிலர் எட்டு போட்டு நடக்கலாம் என்கிறார்கள். எட்டு போட்டு நடப்பதை விட குறுக்கும், நெடுக்குமாக நடப்பது நல்லது. ரிஷிகளும், முனிவர்களும் குறுக்கும், நெடுக்குமாகத்தான் நடந்தார்கள். இதனை பாம்பு நடை என்று சொல்வார்கள். இப்படி நடக்கும் போது கூடுதலாக கணையத்துக்கும் பயிற்சி கிடைப்பதால் இன்சுலீன் நன்றாக சுரக்கும். ஒரு சிலர் வீடுகளில் ‘டிரெட்மில்’ பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மூட்டு வலி வரும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையோடு இணைந்த வகையில் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்வதே உடலுக்கு ஆரோக்கியமானது.

You must be logged in to post a comment Login