Stories

நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்!

By  | 

மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது.
“திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்” என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் “இல்லை, நல்லதும் நடக்கும்” என்றும் வாதாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜென் மாஸ்டர், அவர்களது வாக்குவாதத்தை அறிந்து அதற்கு தீர்வாக ஒரு கதையை கூறினார்.
ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் ~எடோ| எனுமிடத்துக்கு பயணித்தான். அங்கு ஓர் உயரதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்புக்காக, அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால், அந்த பெண் ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்றுவிட்டாள்.
மனமுடைந்த ஜென்கை ‘பூசன்’ மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான். தான் கடந்த காலத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரமாக, வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயமடைகின்றனர் என்பதை தெரிந்துகொண்டு, அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதையும் செய்து வந்தான்.
முப்பது ஆண்டுகள் கழிந்து, சுரங்கப்பாதை 2.280 அடி நீளம், 20 அடி உயரம், 30 அடி அகலம் ஆனது.
முன்பு, அவன் பணியாளாக வேலை செய்த அதிகாரியின் மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டான்.
ஆத்திரமடைந்த வீரன் “நான் உன்னை என் கைகளால் கொல்லவேண்டும்” என்று கூறினான். அதற்கு ஜென்கை “நீ என்னை தாராளமாக கொள்ளலாம். ஆனால், இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்” என கேட்டுக்கொண்டான்.
வீரனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தன.
ஜென்கை மட்டும் தோண்டிக்கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓராண்டு முடிய, வீரன் ஜென்கையின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான்.
கடைசியாக சுரங்கப்பாதை வேலை முடிந்தது. மக்களும் பாதுகாப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர்.
“இப்போது என் தலையை துண்டி… என் வேலை முடிந்துவிட்டதல்லவா” என ஜென்கை கூற, “எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்கமுடியும்?” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழிய கேட்டான்.
இப்படியாக கதையை சொல்லி முடித்தார் மாஸ்டர்.
பிறகு தன் சீடர்களிடம் “திருடனாக இருந்து, திருந்திய பின் நல்லதை நினைத்ததால் அவனுக்கு நல்லதே நடந்தது…” என்று சொல்லிச் சென்றார்.

You must be logged in to post a comment Login