Interview

நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பது கஷ்டம்!

By  | 

-நடிகை ரித்திகா சிங்

‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு ‘ஓ மை கடவுளே’ ரித்திகா சிங்குக்கு செம ஹிட்.

“நூடுல்ஸ் மண்ட”ங்கிற பெயர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ‘ஓ மை கடவுளே’ பார்த்துட்டு அனு கேரக்டர் பிடித்துப்போய் சமூக ஊடகங்கள் மூலமா எனக்கு மெசேஜ் பண்றாங்க. அப்படி பண்றவங்க எல்லோரும் என்னை ‘நூடுல்ஸ் மண்ட’னுதான் கூப்பிடுறாங்க. அந்தப் பெயரை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என உற்சாகமாகப் பேசத் ஆரம்பித்தார் ரித்திகா சிங்.

தனிமைப்படுத்தல் நாட்கள் எப்படி போகுது?

என்னை நான் ரொம்ப பிஸியா வச்சிக்க முயற்சி பண்றேன். எங்கேயும் போகாமல் தனியாவே இருந்தா டிப்ரெஷன் வந்திடும். அதனால யூடியூப் பார்த்து டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். என் அப்பா ஜிம் வச்சு நிறைய பேருக்கு கிக் பொக்ஸிங், கராத்தே சொல்லிக் கொடுக்கிறார் அவரோட சேர்ந்து ஒன்லைன்ல கிக் பொக்ஸிங், கராத்தே கிளாஸ் எடுக்கிறேன். சைக்கோலாஜிக்கல் திரில்லர் புத்தகங்கள் படிக்கிறேன். வீட்டு வேலைகள் செய்கிறேன் அதனால நான் ரொம்ப பிஸி.

வீட்டிலேயே இருக்கிறது போரடிக்குதுன்னு நிறைய பேர் புலம்புகிறாங்களே?

எத்தனை நாட்கள் மற்ற வேலைகளில் பிஸியா இருந்திருப்பீங்க. நேரம் இல்லைன்னு சொல்லி இருக்கீங்க. இப்போ உங்க எல்லோருக்கும் ரொம்ப டைம் கிடைச்சிருக்கு. நீங்க பண்ணனும்னு நினைத்து பண்ண முடியாத விஷயங்களை இப்போ பண்ணுங்க. வேர்க் அவுட் பண்ணி உடம்பை ஃபிட்டாக வச்சுக்கோங்க. வீட்ல இருக்கிறவங்களோடு சந்தோஷமா இருங்க. அப்போ போரடிக்காது.

டான்ஸ் ஆடுற மாதிரி வீடியோஸ் அப்லோட் பண்ணி இன்ஸ்டாகிராம்ல ஆட்டம் காட்டுறீங்களே?

ஓ அதுவா! அது சும்மா இஷ்டத்துக்கு ஆடிட்டு இருந்தேன். அது என்னுடைய கிரேஸி பக்கம். இப்போதான் யூ டியூப்ல பார்த்து டான்ஸ் கத்துக்கிறேன். வெஸ்டர்ன், ஃபோக்னு நல்லா டான்ஸ் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கிற மாதிரி ஒரு படம் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.

தனிமைப்படுத்தல் நாட்கள் மாதிரி வீட்டிலேயே ரொம்ப நாள் இருந்திருக்கீங்களா?

‘ஓ மை கடவுளே’ படம் பண்றதுக்கு முன்னாடி நான் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் ரொம்ப நாள் வீட்டிலேயே இருந்தேன். ஒரு ஆர்ட்டிஸ்டுக்கு இந்த மாதிரி நாட்கள் மனரீதியா ரொம்ப கஷ்டத்தைக் கொடுக்கும். நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனால், அந்தப் பொறுமை ரொம்ப அவசியம்.

இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் நீங்க பார்க்கணும்னு நிறைக்கிற படங்கள் என்ன?

‘வைரஸ்’, ‘அசுரன்’, ‘பேராசைட்’ இந்த மாதிரி நிறைய படங்கள் பார்க்கணும். நான் படம் பார்க்கும் போது எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. ஆனால், எங்க வீட்ல எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கிறதால படம் பார்க்க முடியல. ஆனால், இந்த படங்களையெல்லாம் மிஸ் பண்ணிடக்கூடாது

‘ஓ மை கடவுளே’ டீம் கூட பேசிகிட்டு இருக்கீங்களா?

அசோக், வாணி, அபிநயான்னு  தினமும் அந்த டீம்ல யார் கூடவாவது பேசிடுவேன். அதுல இருந்த எல்லோரும் ஒரு ஃபேமிலி மாதிரி ஆகிட்டோம். டிவியில ‘கதைப்போமா’, ‘மறப்பதில்லை நெஞ்சே’ பாட்டெல்லாம் பார்க்கும்போது என்னையறியாமல் ஃபீல் ஆகிடும். என் கெரியர்ல ரொம்ப ரொம்ப முக்கியமான படம்.

அடுத்து என்னென்ன படங்கள் இருக்கிறது?

இரண்டு படங்கள் கைவசம் இருக்கு. நிறைய கதைகள் கேட்க ஆர்வமா இருக்கேன். ‘ஓ மை கடவுளே’ க்கு நிகரா அல்லது அதை விட சூப்பரான கதைகளில் நடிக்கக் காத்திருக்கிறேன்.

‘ஓ மை கடவுளே’ படத்தில் வர்ற மாதிரி உங்களுக்கு கோல்டன் டிக்கெட் கிடைச்சா எங்க போகணும்னு நினைப்பீங்க?

நான் ஃபைட்டரா இருந்த காலத்துக்குப் போய், அப்போ பண்ணது தப்பையெல்லாம் சரி பண்ணலாம்னு நினைக்கிறேன். அப்புறம் ‘இறுதிச்சுற்று’ ஷுட்டிங்கின் முதல் நாளுக்கு மறுபடியும் போகணும்.

 

 

You must be logged in to post a comment Login