Astrology

நான்காம் எண்ணுக்குரிய எண்கணித ரகசியங்கள்!

By  | 

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்த நான்காம் எண்ணுக்குரிய பெண்கள், எப்போதும் மாற்றுச் சிந்தனையை கொண்டவர்களாக இருப்பார்கள்.தோழிகள் கூட்டத்தில் நான்காம் எண்ணுக்குரிய பெண்ணின் பேச்சு, அந்தக் கூட்டத்தில் அனைவரும் ஒரு கருத்தை ஆமோதித்தால்.., இவர் மட்டும் அதற்கு மாற்றுக் கருத்தை முன் வைப்பார். அது ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ.. அல்லது ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறதோ.. அதைப்பற்றி கவலைப்படாமல், மாறுபட்ட எண்ணத்தை முன்வைப்பார்கள். இதன் காரணமாக இவர்களை பல தருணங்களில் நெருக்கமான தோழிகள் கூட ‘எதிர்மறையான சிந்தனையை கொண்டவள்’ என்ற அடைமொழியும் கொடுப்பார்கள். ஆனால் அதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. இந்த காரணத்தினாலேயே இவர்கள் ஊடகத்துறை, கலைத்துறை, குறிப்பாக திரைத்துறை, ஆராய்ச்சி, பத்திரிகை… போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும், பணியாற்றுபவர்களாகவும், விருப்பம் கொண்டவர்களாகவும், இந்த துறைகளைத் தொடர்ந்து கண்காணிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் ஒன்றாம் எண் அதாவது 1,10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்த எதிர்பாலினத்தவர்களுடனான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் இந்த எண்ணுடைய இளைஞர்களையோ அல்லது ஆண்களையோ காதலித்தால்.. அவர்கள் சொல்வதை மறுக்காமல் கேட்பார்கள். அதாவது ‘மகுடிக்கு மயங்கும் பாம்பை போல’ அவர்கள் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்பார்கள். அதேபோல் இந்த எண்ணுடையவர்கள் இவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்து விட்டால்.. வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், நான்காம் எண் கொண்ட பெண்கள், ஒன்றாம் எண் கொண்ட ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், திருமணத்திற்குப் பிறகுதான் உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும். கணவரின் ஆற்றலும் முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். திருமணத்திற்கு பின்னரான இவர்களது முன்னேற்றத்தை பார்த்து, ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்ற ஒரு பழமொழியே உருவாக்கப்பட்டிருக்கிறதுஎன்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் இணைபிரியாத எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ஆண்டு, அதாவது 2020ஆம் ஆண்டு முழுவதும் ஒன்றாம் எண்காரர்களை போலவே 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவி செய்வார்கள். இவர்களுடன் நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் இணைந்து பணிபுரியலாம். இவர்கள் உங்களுக்கு லாபகரமான கூட்டாளிகள். அதே தருணத்தில் நீங்கள் பத்ரகாளி மற்றும் துர்க்கை அம்மனை சனிக்கிழமைகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமை வணங்கினால் கூடுதலான பலன் கிடைக்கும். அதிலும் குறிப்பாக ராகு காலத்தில் வழிபட்டால் சிறப்பான பலன் உண்டு. அதே போல் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால்…நினைத்த காரியம் கைகூடும்.

இந்த திகதியில் பிறந்த சில பெண்களுக்கு எங்கு சென்றாலும் எதையாவது ‘கபளீகரம்’ செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். ஆங்கிலத்தில் ‘கிளப்டோமேனியா’ என்று இதனை குறிப்பிடுவார்கள். அதே தருணத்தில் எதையாவது இவர்கள் விரும்பி விட்டால்.. அதை அடைவதற்கும் விரும்புவார்கள். எப்போதும் சுயநலம் சார்ந்தே ‘மணி மைண்ட்டாகவே’ பேசுவார்கள். இவர்களில் சிலர்,‘பணம் கிடைக்கும் அல்லது பலனுண்டு’ என்றால் மட்டுமே பேசுபவர்களாகவேயிருப்பார்கள்.

இவர்களுக்கு பெரும்பாலும் தோல் சம்பந்தமான ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். சொரியாசிஸ், படை, சொரி, தேமல்,முகப்பரு, தோல் புண்…. இதுபோன்ற பாதிப்புகள், ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் வரும். சில பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று புதுவகையான அழகியல் சிகிச்சையை மேற்கொண்டால்.. அவர்களின் தோலில் பாதிப்பு ஏற்பட்டு, விகாரமான தோற்றத்தை கூட ஏற்படுத்திவிடும். அதனால் இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அழகியல் சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது, அந்த ரசாயனங்கள் கலக்கப்பட்ட அழகுசாதன பொருட்களால் தங்களது தோலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா…? என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதித்த பின்னரே, அழகியல் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் அல்லது அந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நெருக்கமான தோழிகளாக இருந்தாலும் பண விடயங்களில் பிணையிட வேண்டாம். ஏனெனில் இதன் காரணமாகவே உங்களுக்கு அவப்பெயர் ஏற்படலாம்.

உங்களில் சிலருக்கு ஏப்ரல் மாதத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பெண் பார்த்துவிட்டு சென்றிருப்பார்கள். அவர்கள் மே மாதம் முழுவதும் பதிலளிக்காமல் இருந்திருப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய நேர்மையான காத்திருப்பு, நல்லதொரு பலனை.. இந்த ஜூன் மாதத்தில் வழங்கும். அதே தருணத்தில் வெளிநாடு, வெளியூர் போன்றவற்றிலிருந்து திருமண வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும், வாழ்வாதாரங்களும் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதேபோல் உங்களது திருமணத்தை முருகன் சன்னதியில் அல்லது முருகன் ஆலயத்தில் நடத்தினால் வாழ்க்கை முழுவதும் நன்றாக இருக்கும்.

இந்த திகதியில் பிறந்த, கணவன்- மனைவிகளாக இருப்பவர்களிடையே கருத்துவேறுபாடு அதிகளவில் ஏற்படும். ஏனெனில் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் உங்களுடைய நேர்மறையான சிந்தனையை, உங்களுடைய நெருக்கமான துணைகளால் எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்கள் ஒரே விடயத்தை, ஒரே கோணத்தில், ஆயுள் முழுவதும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இது உங்களுக்கு தவறாக தோன்றும். அதற்காக இதற்கு ஒரு மாற்று விடயத்தை ஆலோசனையாக முன்வைப்பீர்கள். ஆனால் அதனை ஏற்க இயலாத காரணத்தினால் விவாரகத்து பெற விரும்புவார்கள். உங்களில் பலருக்கு உறவுகளில் பாகுபாடு காட்டும் மனோபாவம் சில தருணங்களில் ஏற்படும். அதை கவனமாக தவிர்த்து விட்டால் வாழ்க்கை இனிக்கும்.

சில பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வம் ஏற்படும். குறிப்பாக மெய்நிகர் விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் உண்டு. முறையாக பயிற்சி பெற்றால்… தேசிய அளவிலான வீராங்கனையாகவும் பிரகாசிக்க முடியும்.

உங்கள் சிலர், வேறு திகதிகளில் பிறந்த பெண்களுக்கு தோழியாக இருப்பீர்கள். அவர்களில் சிலருக்கு பெண்பார்க்கும் வைபவத்தின்போது உங்களின் உதவியை நாடுவார்கள். ஆனால் அதனை ஏற்காமல் கவனமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்களே உங்களின் தோழிகளின் வாழ்க்கைக்கு எதிராக திரும்பி விடக்கூடிய சூழல் ஏற்படும்.

உங்களுக்கு அதிர்ஷடம் என்பது சற்று குறைவு தான் என்றாலும், அதிர்ஷ்டத்தை அதிகரிக்க, சூரிய, சந்திர வழிபாடு, புதன் மற்றும் சனியை வழிபாடு செய்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் சிலர் தலைமைப் பதவிக்கு வரும்போது, இறைவனைத் தரிசித்த பின்னர்பொறுப்பு ஏற்றுக்கொண்டால் சிறப்பாக பணியாற்ற இயலும்.

உங்களுடைய மனதில் எப்போதும் பிரம்மாண்டமான கற்பனையுடன் கூடிய எண்ணங்கள் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் அவை நடைமுறையில் சாத்தியமற்றவை என்ற யதார்த்தத்தை பூரணமாக உணர்ந்து, எளிமையாக வாழ தொடங்கி விட்டால்.. உங்களை விட மகிழ்ச்சியானவர்கள் இந்த உலகில் இல்லை என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

-அஸ்வினி பிரியன்.

 

You must be logged in to post a comment Login