General

நிரந்தரமில்லா வாழ்க்கை!

By  | 

 

வாழ்க்கை ஒரு விசித்திர புத்தகம். விடை காணமுடியாத கேள்வித்தாள். ஒவ்வொரு பக்கமும் வெ;வேறு விதமான ஆச்சரியங்களையும் அவஸ்தையையும் கொண்டது. கடந்தவற்றை திரும்பிப் பெறமுடியாது. நிகழப்போவதை முன்பே கூறிவிட முடியாது. திருப்பங்கள் நிறைந்தது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளிதான் வாழ்க்கை. அதை நாம் எதைக் கொண்டு நிரப்புகிறோமோ, அவ்வாறுதான் எமது வாழ்வின் பாதையும் அமையும். நன்மையால் அதை நிரப்பினால், எமக்கும் எந்தவிதத்திலாவது அந்த நன்மை வந்துசேரும். அதைவிடுத்து கோபங்களாலும், பொறாமையினாலும், வஞ்சகத்தினாலும் அதை நிரப்பினால் அதுவே எமக்கும் கிடைக்கும் என்பதை மறத்தலாகாது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்.

செல்வச் செழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் நாம் முடிவில் எதையாவது எடுத்துச் செல்லமுடியுமா? நாம் சேமித்த பணம், பொருள், வீடு ஏன் மனைவி, மக்களைக் கூட அழைத்துச் செல்லமுடியாது, நம் இறுதிப் பயணத்தின்போது. இதை மனிதனும் நன்கறிவான்.

இருப்பினும் ஆடம்பரத்தின் மேல் கொண்ட மோகத்தினால் பல வழிகளில் பணத்தை சம்பாதித்து, அதில் கோட்டை கட்டி வாழ்கிறான், இறுதியில் அனைவருக்கும் ஆறடி நிலம்தான் வாய்க்கிறது என்பதை மறந்து.

தன்னை மற்றவர் முன்னிலையில் அழகாகவும் ஆடம்பரமாகவும் காட்டிக்கொள்ள நினைக்கிறார்களே தவிர, யாரும் அன்பால் மற்றவர்களை கவர நினைப்பதில்லை.

நிலையில்லா இவ்வுலகில் ஒருவனது அழகு மற்றும் ஆடம்பரம் சாம்பலாகிவிடும். ஆனால், வெளிப்படுத்திய அன்பு ஒன்றே, ஒரு மனிதன் இருந்தாலும், மறைந்தாலும் அவனை மற்றவர்கள் நினைவிலாவது வாழவைக்கும் சக்தி பெற்றது.

‘அனைத்தும் எனது’, ‘எல்லாம் எனக்கே சொந்தம்’ என்கிற மனநிலையில், எப்போதும் ‘எனது… எனது…’ என கூறுகின்றோமே, பிறக்கும்போது நமக்கு சொந்தமாய் நாம் எதை கொண்டுவந்தோம்? ஒன்றுமில்லையே. நமது இந்த உடல்கூட நமக்கு சொந்தமில்லையே.

தங்கிச் செல்லும் வழிப்போக்கனாய் நமது உடல் சில காலத்துக்கு நம்மை தங்க வைக்கிறது. அதை மறந்த சிலர் ‘அழகில் சிறந்தவன் நான், அழகில் குறைந்தவன் நீ’ என வீண்விவாதம் செய்கின்றனர். அழகை முன்னிறுத்தி பல ஏற்ற இறக்கங்கள் பார்க்கப்படுகின்றது.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரின் பிறப்புக்கும் ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். அதை கண்டுபிடித்து ஆற்றவேண்டிய கருமத்தை செவ்வனே செய்வதே எமது ஜனனத்தின் பலனாகும். அதை விடுத்து தேவையற்ற பேராசைகளில் மூழ்கினால் பிறப்பின் பயனே வீணற்றதாகிவிடும்.

பிறந்தோம்;;, வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல் ஒருமுறை கிடைக்கும் மனிதப் பிறவியில் நல்ல விடயங்களை செய்துவிட்டுப் போவோமே!

வாழ்வே ஒரு தேடல்தான். நல்ல விடயங்களை தேடிச் செய்வோம். அவ்வாறு செய்தால் எம்மை நெருங்கும் தீயவையும் தாமாக விலகிவிடும். வாழ்வில் நாம் விரும்பும் அனைத்தும் எமக்கு கிடைத்துவிட்டால், வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. சில விடயங்கள் எமக்கு கிடைக்காமல் இருப்பதே நல்லது.

வாழ்வில் இன்பம் – துன்பம், ஏற்றம் – இறக்கம், அவமானம், அங்கீகாரம், வெறுப்பு, தோல்வி – வெற்றி அனைத்தும் மாறி மாறி எம்மை நெருங்கும். அவற்றையெல்லாம் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம். கடந்த காலத்;தைப் பற்றிய கவலை வேண்டாம். நிகழ்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம். வாழும் இந்த நொடியே நிலையானது. அதை நல்ல முறையில் கடக்க முயற்சி செய்வோம்.

-து.சிந்துஜா

You must be logged in to post a comment Login