Health

பற்களைச் சுத்தப்படுத்த அறிமுகமாகியிருக்கும் நவீன முறை

By  | 

டொக்டர் S. சீனிவாஸ் M.D.S.,
பல் மருத்துவ சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணர்

பொதுவாகவே பெண்கள் தங்களின் உடல் நலம் குறித்து கவலை கொள்ளாமல், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் நலன்களைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பெண்களும் தங்களின் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் என்றும் பல் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இன்றைய திகதியில் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும், ஆரோக்கிய சீர்கேடுகளையும் முறையாக வெளிப்படுத்துவதில் கை,கால் விரல்கள், நகங்கள், நாக்கு, கண்கள் ஆகியவற்றை போல பற்களும் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்றன. இதனால் ஏனைய உறுப்புகளைப் போல பற்களையும், அதன் ஆரோக்கியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். மனிதர்களின் உடலில் இறக்கும்வரை ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடைவது பற்களும், நகங்களும் தான். அதனால்தான் பற்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சிறார்களின் பற்களின் ஆரோக்கியத்தை சொக்லேட்கள் மட்டும்தான் பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் ஸ்டிக்கி ஃபுட்ஸ் எனப்படும் அனைத்து நொறுக்குத் தீனிகளும் பற்களை சேதப்படுத்தும். அதே தருணத்தில் பகல் பொழுதில் பற்களுக்கு எந்த பாதிப்பும் பெரிதாக ஏற்படுவதில்லை. ஏனெனில் பகல் பொழுதில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரை அருந்துகிறார்கள். இதன்காரணமாக பற்களை பாதிக்கும் ரசாயனங்கள் உற்பத்தியானாலும் அவை வீரியமிழக்கின்றன. ஆனால் இரவில் பற்களை பல் துலக்கி கொண்டு சுத்தப்படுத்தாமல் உறங்கினால், எம்முடைய நாவின் அடிப்பகுதியில் உற்பத்தியாகும் எச்சில், இவ்வகை உணவுகளுடன் கலந்து, வினைபுரிந்து பற்களை சேதமடைய செய்கின்றன.

இதனை தடுக்க வேண்டும் என்றால் இரவில் உறங்கும் முன் பல்லை சுத்தப்படுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இன்னும் சற்று தெளிவாக விளக்கிட வேண்டும் என்றால், காலையில் எழுந்தவுடன் பற்களை சுத்தப்படுத்துவதை விட, இரவில் உறங்கும் முன் பல் தேய்ப்பது தான் சரியான நிவாரணம் என சொல்லலாம். அதே தருணத்தில் பகல், வீடு, வகுப்பறை, பாடசாலை வளாகம், விருந்தினர் வீடு, ஹொட்டேல் என எப்போது, எந்த சூழலில், எதனை சாப்பிட்டாலும்… உடனடியாக வாயை கொப்புளிக்க வேண்டும் அல்லது தண்ணீரை அருந்திட வேண்டும். அதேபோல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் பல் மருத்துவர்களாகிய நாங்கள் கூறும் இந்த அறிவுரையை, எங்களின் வணிக நோக்கத்திற்காக சொல்கிறோம் என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தொடர்ச்சியான பரிசோதனைகளின் போது பற்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து எளிதாக குணப்படுத்தலாம்.

தற்போது பற்களை சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு நவீன முறைகள் அறிமுகமாகி இருக்கிறது. இதில் ‘ஸ்கேலிங்’ என்ற முறையும் ஒன்று. இந்த முறையில் பற்களை சுத்தப்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது. இதன்போது ஒவ்வொரு பற்களிலும் எந்த அளவிற்கு கறை படிந்திருக்கிறது என்பதனையும், அதனை எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்பதையும், எப்படி சுத்தப்படுத்தலாம்? ஆகிய மூன்று கோணங்களில் திட்டமிட்டு, ஒன்று முதல் மூன்று அமர்வுகளில் பற்களை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

90களுக்குப் பிறகு மக்களின் பற்களில் புதியபுதிய நோய்க்கூறுகள் ஏற்பட்டதாக மருத்துவ வரலாற்றுப் பதிவு தெரிவிக்கிறது. இதற்கு முழுமையான காரணம், செயற்கையான முறையில் சுவையூட்டப்பட்ட நொறுக்குத்தீனிகள் தான். இதற்குப் பின்னர்தான் சந்தையில் ஸ்டிக்கி ஃபுட்ஸ், பலவகையினதான சொக்லேட்டுகள், சிப்ஸ் போன்றவை அறிமுகமாகிறது. பெண்களும் பணியாற்றும் போது ஆரோக்கியமமான உணவைச் சாப்பிடாமல் பீட்ஸா, பர்க்கர், சிப்ஸ், கோக் போன்ற பற்களுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளையும், பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். உதட்டுச்சாயம், பற்களுக்கு வைட்னிங் செய்து கொள்வதாலும் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றன.

அதே தருணத்தில் பற்பசைகளிலும் புதிய வகைகள் அறிமுகமாகின்றன. ஹெர்பல் பேஸ்ட் எனப்படும் மூலிகை பற்பசைகளை பயன்படுத்துவதன் மூலம் பற்களின் தேய்மானத்தை அவை தடுப்பதில்லை என்று கண்டறியப்பட்டது. அதே தருணத்தில் ரசாயனம் கலக்கப்பட்ட வண்ண பற்பசைகளில் நல்லனவும் உண்டு. தீயனவும் உண்டு என்பதும் கண்டறியப்பட்டது. தற்போது உப்பு, சாக்கோல், வைட்னிங் என தனித்தனியாக பற்பசை விளம்பரங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் இவையெல்லாம் பற்களின் ஆரோக்கியத்திற்கு நலம் பயப்பவை அல்ல. அதே தருணத்தில் தற்போது 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கான பிரத்யேக பற்பசை வெளியாகியிருக்கிறது. இதில் அவர்களுக்கான பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஃபுளோரைட் அதிகமாக இருப்பதால், அவற்றை பல் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு பயன்படுத்தலாம். இது பற்களில் சொத்தை ஏற்படுவதை தடுக்கிறது. பெரியவர்கள் இதனை பயன்படுத்த தேவையில்லை. அதே தருணத்தில் பெரியவர்கள் பயன்படுத்தும் பற்பசையை சிறார்களுக்கு வழங்க வேண்டாம்.

கடந்த பல தசாப்தங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வாய் துர்நாற்றம் என்பது அதிக அளவில் ஏற்படும். ஆனால் தற்பொழுது சிறார்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதற்கு பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே சிக்கி இருக்கும் உணவு துகள்களும் காரணம். பல் துலக்கி பயன்படுத்தி பற்களை சுத்தப்படுத்தும் போது இவற்றை எம்மால் முழுமையாக சுத்தப்படுத்த முடிவதில்லை. இதற்காக மருத்துவ நிபுணர்களிடம் சென்றால்.. அவர்கள்  ‘ஃபிளாஸ்ஸிங் ‘முறையில் பற்களை சுத்தப்படுத்துவார்கள். இதன்போது ‘ டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூல்’ மூலம், நுட்பமான முறையில் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள துணுக்குகளையும், துகள்களையும் அகற்றுவார்கள். இதன் பிறகு வாய் துர்நாற்றம் முழுமையாக நீங்கும்.

தற்போது முதுமையில் உள்ளவர்களுக்கு செயற்கை முறையில் பற்களை பொருத்துவது அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்போது அவ்வப்பொழுது கழட்டி, மீண்டும் மாற்றிக் கொள்ளும் ஒரு வகையும்,  நிரந்தரமாக ஈறுகளில் செயற்கையாக பற்களை பொருத்திக் கொள்ளும் தொழில்நுட்பமும் நடைமுறையில் இருக்கிறது. அதிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் ‘பிரிட்ஜ் டெக்னிக்’ என்ற தொழில்நுட்பம் மூலம் மேல் தாடை மற்றும் கீழ் தாடை என இரண்டு புறங்களிலும் பற்களை செயற்கையாக- வலிமையானதாக மாற்ற முடியும். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

பல் மருத்துவத்தைப் பொறுத்தவரை தற்போது பற்களை சுத்தப்படுத்த ‘வை’ வடிவ பல் துலக்கி அறிமுகமாகிருக்கிறது. இத்தகைய நவீன மின் பல்துலக்கிகளால் பத்து விநாடிகளில் பற்களை சுத்தப்படுத்தலாம். அத்துடன் பற்களை சுத்தப்படுத்த குறைந்த மின் திறன் கொண்ட தானியங்கி பல்துலக்கிகளும் அறிமுகமாகவிருக்கிறது. அதேபோல் பற்களின் எனாமல் பகுதி பல்வேறு பரிசோதனைகளின் போது பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பிரத்தியேக மருத்துவத் தொழில்நுட்பமும் அறிமுகமாகியிருக்கிறது.

தொகுப்பு. ராணி தாசன்.

You must be logged in to post a comment Login