Astrology

பிறந்த திகதி தெரியாதவர்களுக்கு எண்கணிதம் சொல்லும் தீர்வு!

By  | 

இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் பிறக்கும்போது பிறந்த திகதியும், பிறந்த நேரமும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பிரசவ அறைகளில் கண்காணிப்பு கெமராவும் சுவர் கடிகாரமும் இருப்பதால் எப்போது குழந்தை பிறக்கிறது என்பதை துல்லியமாக கணக்கிட்டு குறிப்பிடுகிறார்கள். ஆனால், இன்றும் சிலர் பிறந்த திகதியையோ அல்லது பிறந்த நேரத்தையோ தெரிந்து வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சோதிடத்தை நம்புவதில்லை. உழைப்பையும் இறை நம்பிக்கையையும் மட்டுமே கொண்டு “விதி வலியது” என்ற தத்துவத்தை பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ‘விதியை மதியால் வெல்லலாம்” என்ற கொள்கை மீது குறைந்தபட்ச அளவுக்கு கூட நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்துவருவார்கள். இவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம். தோல்வியும் அடையலாம் அல்லது வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரலாம்.

பொதுவாக பெண்கள் திருமணத்துக்காக மட்டுமே தங்களுடைய ஜாதகத்தை பெற்றோர்களின் அக்கறை காரணமாக அதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும்போது ஏனைய ஜோதிடங்களை பார்ப்பதை விட எண்கணித ஜோதிடத்தை பார்ப்பது சிறந்தது. ஏனெனில், வாழ்க்கையில் எண்கள் இல்லாமல் எதுவும் இல்லை. இருப்பினும் உங்களுடைய திருமண வாழ்க்கையில் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்த்த பலன் கிடைக்குமா? தாம்பத்திய வாழ்க்கையில் மனநிறைவு கிடைக்குமா? என்பதை தெளிவாக அவதானிக்க இயலும். ஆனால், இதற்கு ஒவ்வொரு பெண்ணின் பிறந்த திகதியும் பிறந்த நேரமும் முக்கியம்.

இந்நிலையில் பாடசாலை சான்றிதழில் ஒரு திகதியும், சாதகக் குறிப்பில் வேறொரு திகதியும், ருதுவான தருண குறிப்பில் இன்னொரு திகதியும் இருந்தால்… எதை தெரிவுசெய்து பலன்கள் சொல்வது என்பதில் குழப்பமே மிஞ்சும்.

வேறு சிலருக்கு தவிர்க்க முடியாத  காரணங்களால் மூல ஜாதக குறிப்பு தொலைந்திருக்கும் அல்லது இயற்கை பேரிடரில் காணாமல் போயிருக்கும். இவர்கள் என்ன செய்வார்கள் என்றால், பெரும்பாலும் அருகில் உள்ள ஜோதிட நிலையத்துக்கு சென்று கணினி வழியிலான ஜாதகக் குறிப்பை தோராயமாக பெற்று, அதனை தங்களுடைய வாழ்க்கையின் அச்சாணியாக கருதுவார்கள். இது முற்றிலும் தவறு.

இந்தத் தருணத்தில் உங்களுக்கு கைகொடுப்பது எண்கணித ஜோதிடம்தான்.

உங்களுக்கு பிறந்த திகதி தெரியவில்லை. பிறந்த நேரமும் தெரியவில்லை என்ற நிலை ஏற்படும் பொழுது, நீங்கள் முதலில் ஒரு கைரேகை நிபுணரை அணுகி, உங்களின் இடது கைகளில் உள்ள ரேகைகளை ஆய்வு செய்ய சொல்லுங்கள். பிறகு அதில் ஒவ்வொரு விரல்களின் அடிப்பகுதியில் குரு மேடு, சுக்கிரன் மேடு, சூரிய மேடு, புதன் மேடு… என ஒவ்வொரு கிரகத்துக்கான மேடான பகுதி அமைந்திருக்கும். இந்த மேடான பகுதியை ஆராய்ந்து, எந்த மேடு ஏனைய மேடுகளை விட சற்று உச்சமாக இருக்கிறதோ… அந்த மேட்டுக்குரிய எண்ணை உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாகவும் பிறந்த எண்ணாகவும் கொண்டு பலன்களை அறியலாம்.

உதாரணமாக, ஒரு பெண்ணின் கையில் சூரிய மேடு சற்று உச்சமாக இருந்தால், அவர் பிறந்த திகதி மற்றும் எண் “1 – ஒன்று” என கொள்ளலாம். ஒருவரது கையில் குரு மேடு சற்று உச்சமாக இருந்தால், அவர்களின் பிறந்த திகதி மற்றும் எண் “3 – மூன்று” என கொள்ளலாம். அதேபோல் ஒருவரது கையில் சுக்கிர மேடு உச்சம் என்றால், அவரது பிறந்த திகதி மற்றும் எண் “6 – ஆறு” என அவதானிக்கலாம். புதன் மேடு உச்சம் என்றால், அவரது பிறந்த திகதி மற்றும் எண் “5 – ஐந்து” என கொள்ளலாம். இதைப் போல் ஒவ்வொரு கிரகத்துக்கும் இருக்கும் எண்ணை பிறந்த திகதி என கருதி பலன்களை வரையறுக்கலாம்.

பிறந்த திகதியையும் எண்ணையும் கண்டறிவதுடன் இது நிறைவடைதில்லை. உங்களுடைய பெயரையும் சார்ந்துதான் எண்கணித சூட்சும பலன்கள் இருக்கிறது.

உங்களது பெயர் “எஸ். சிவகாமசுந்தரி” என்று வைத்துக்கொள்வோம். உங்களை யாரும் “எஸ். சிவகாமசுந்தரி” என்று அழைக்கப் போவதில்லை. அது நடைமுறையிலும் சாத்தியமில்லை. ஏதேனும் ஒரு சுருக்கமான பெயரை சொல்லியே அழைப்பார்கள். “சுந்தரி” என்றோ, “சிவா” என்றோ “சிவகாமி” என்றோதான் அழைப்பார்கள். ஆனால், இந்தப் பெயர் அழைப்பு உங்களுக்கு சரியான பலனை தராமல் மழுங்கடிக்கும்.

“எஸ் சிவகாமசுந்தரி” என்ற பெயரில் உள்ள அசைவுகளும் அந்த பெயரின் ஆற்றலுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்காது. அதனால் உங்களை அழைக்கும் பெயரும் அதாவது மற்றவர்கள் குறிப்பிட்டு விளிக்கும் பெயர்களும் உங்களுக்கு சூட்டப்படும் பெயரும் ஒன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதன் ஆற்றல் அதிகம். இது குறிப்பாக, பெண்களுக்கு திருமண தடையை அகற்றும் வலிமை கொண்டது. அதனால் உங்களது “கோலிங் நேம்” எனப்படும் மற்றவர்கள் அழைக்கும் பெயரும் உங்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரும் ஒன்றாக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்களுடைய பெயருடன் “திருமதி” மற்றும் கணவரின் பெயரை இணைத்துக்கொள்வார்கள். இதுவும் ஒரு வகையான எண்கணித சூட்சும பலன்களை வழங்குவதற்கான உத்திதான்.

சில பெண்கள் திருமணத்துக்கு முன் பெற்றோருடன் இருக்கும்போது கிடைத்த மகிழ்ச்சியை விட, திருமணத்துக்குப் பின்னர் தன் கணவர் வீட்டாரின் அல்லது கணவரின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்ட பின்னர் சமுதாயத்தில் நல்லதொரு அடையாளத்துடன் உற்சாகமாக வலம் வருவார்கள். இதன் பின்னணியிலும் எண்கணித சூட்சம பலன்கள் அடங்கியிருக்கிறது.

இந்த எண்கணித பலன்கள் இந்து மதத்தினருக்கு மட்டும் அல்லாமல் இஸ்லாமிய, பௌத்த, கிறித்துவ மற்றும் ஏனைய மதங்களை சார்ந்த பெண்களுக்கும் பொருந்தும். திருமண தடை மற்றும் வேறு ஏதேனும் தடைகள் இருந்தால், அதற்குரிய பரிகாரங்களை மேற்கொள்வதை காட்டிலும், ஒருமுறை என் கணித நிபுணர்களை சந்தித்து, ஆலோசனை பெற்றால் உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடரும். வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற பெண்மணியாக வலம் வரலாம்.

You must be logged in to post a comment Login