Poetries

புதுமைப்பெண்

By  | 

நெற்றியிலே பொட்டிட்டு

நிமிர்ந்த தலையில் கொங்காணி போட்டு

மட்டக்கம்பை கையில் பிடித்து

மலையேறப் புறப்பட்டுப்போகும் – இவள்

எங்கள் மலையகத்தின் புதுமைப்பெண்

 

காலை எழுந்தவுடன் மலையேறி

மாலை புலர்ந்தவுடன் மனை தேடி

கூடையோடு விறகுக்கட்டும் சுமந்து

குதூகலமாய்க் குதித்துவரும் – இவள்

எங்கள் மலையகத்தின் புதுமைப்பெண்

 

கல்வியறிவு இல்லாவிடினும்

கருத்தாழம் மிக்க பெண்மணி

மலை போல் உயர்ந்த குணம்

மடுவினையே மலையாக்கும் மனம்

எங்கள் மலையகத்தின் புதுமைப்பெண்

 

பட்டங்கள் கொடுக்காவிட்டாலும்

பாராட்டுக்கள் கிடைக்காவிட்டாலும்

சுற்றங்கள் போற்ற வாழ்ந்து

பெற்றவற்றைப் பேணிக்காக்கும் – இவள்

எங்கள் மலையகத்தின் புதுமைப்பெண்

 

உழைப்பதையெல்லாம் உதாசீனப்படுத்தாமல்

உள்ளதையெல்லாம் வாரி வாரி இறைக்காமல்

சிக்கனமாய் செலவு செய்யும் பத்தினியாய்

பெண்குலத்தின் பெருமைக்கு புகழ்சேர்க்கும் – இவள்

எங்கள் மலையகத்தின் புதுமைப்பெண்.

– ஏ.எஸ். பாலச்சந்திரன்,

பசறையூர்.

 

You must be logged in to post a comment Login