Interview

பெண்களின் குரல் வலிமையாக ஒலிக்கும்!

By  | 

19.07.2020 மித்திரன் வாரமலரில் பிரசுரமாகியுள்ள… மலையகத்தின் வீரியம் மிக்க இளம் பெண் அரசியல் ஆளுமையாக பரிணமித்துவரும் சகோதரி அனுஷா சந்திரசேகரனின் நேர்காணலின் தொடர்ச்சி…

23. நீங்கள் அமரர் சந்திரசேகரனின் பிள்ளை. திருமணமான பெண். நீங்கள் உங்கள் பெயரோடு உங்கள் கணவரின் பெயரை சேர்த்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் உங்கள் தகப்பனாரின் பெயரையே பாவித்து வருவது உங்கள் சுய விடயம் என்றாலும் அரசியல் தேவைக்காகவா அது பாவிக்கப்படுகிறது?

நான் கட்சியின் பிரதி செயலாளராக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் எனது பெயர் அனுஷா சந்திரசேகரன்தான். நான் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததும் இதே பெயரில்தான். எனது தேசிய அடையாள அட்டை சட்டத்தரணி, சத்தியபிரமாணம் எல்லாம் இருப்பது இதே பெயரில்தான்.
‘எனது பெயருக்கு பின்னால் சந்திரசேகரன் என்ற பெயருள்ளதால் எனக்கு ஓட்டு போடுங்கள்” என கூறவில்லையே. கொள்கையை கூறியே மக்களை சந்திக்கிறேன். பெயரை கூறி வாக்கு பெறமுடியுமானால், அது மிக மிக இலகுவானது. மக்களை சந்திப்பதற்கு இரவு 12 மணிவரை நான் களத்தில் இறங்க தேவையில்லையே. சந்திரசேகரன் என்ற பெயர் இன்றுமே பலரை தூங்கவிடாமல் செய்கிறதா என தெரியவில்லை.

24. அனுஷா சுயேட்சையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுகிறீர்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் உங்களது மலையக மக்கள் முன்னணியில் இணைந்து அந்த கட்சி ரீதியிலான அரசியலை முன்னெடுப்பீர்களா? இல்லை, உங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை வேறு ஏதேனும் வழியில் பயன்படுத்துவீர்களா?

நான் நிச்சயம் செல்வேன்… நான் மலையக மக்கள் முன்னணியில் இணையமாட்டேன். ஆனால், மலையக மக்கள் முன்னணி முழுமையாக என்னுடன் இணையும். என் சமூகத்தை சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு என் செயற்பாடுகள் அமையும்.

25. அனுஷா ஏன் பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு, பின்னர் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி இருக்கக்கூடாது?

தேர்தல்களில் இப்படித்தான் படிப்படியாக வளரவேண்டுமென்று தேர்தல் சட்டம் இல்லையே. இதே கேள்வியை என்னைப் போல் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளரிடம் ஏன் எவருமே கேட்கவில்லை. அப்படியே நீங்கள் சொல்லும் படிமுறையில் நான் பாராளுமன்றத்துக்கு போட்டியிட வேண்டுமாயின், இன்னும் 10 அல்லது 15 வருடங்களின் பின்தான் இது சாத்தியமாகும். நகரசபையில் 5 வருடங்கள், பிரதேச சபையில் 5 வருடங்கள், மாகாண சபையில் 5 வருடங்கள் என கழிந்து, நான் வரும்போது இந்த கட்சி இருக்குமா என்பது சந்தேகமே. எனவே, என்னைப் பற்றி பயப்படுவது ஏனென்று புரியவில்லை.

26. தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளோடு உங்களுக்கு இருக்கும் தொடர்புகள் எப்படி இருக்கின்றன? தொடர்ந்தும் அவர்களோடு உடன்பட்டு செல்வது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்ல, மலையகத்தின் ஏனைய அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள எல்லா நேச சக்திகளையும், நேர்மையான மக்கள் நலன் சார்ந்த உறவுகளையும் மதிப்பேன். அங்கு உண்மை இருந்தால்…

27. மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்தைக் கொண்டுவர முதன்முதலில் முன்மொழிந்தவர் அமரர் சந்திரசேகரன் என சொல்லப்படும் நிலையில், அதனை கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற வாய்ப்பு அமைந்ததை அடுத்து அந்த திட்டத்துக்கு முழுமையான உரிமை கொண்டாடும் தொழிலாளர் தேசிய சங்கம் அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகள் குறித்து உங்கள் நிலைப்பாடு?

1994இல் தனது ஒரு வாக்கினால் என் தந்தை அரசாங்கத்தை அமைத்தபோது வழங்கப்பட்ட வர்த்தக வாணிப துறை அமைச்சை மறுத்து, தோட்ட வீடமைப்பு என்ற அமைச்சை உருவாக்கி, சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தனிவீட்டினை நிர்மானித்து, சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கான நிலங்களை அடையாளப்படுத்தியதாக பதிவுகள் உள்ளன. அவரது மறைவின் பின் இதனை அவ்வமைச்சுப் பொறுப்பை ஏற்பவர் முன்னெடுப்பது வழமையே. ஆனால், தனிவீட்டுத்திட்டத்தின் தந்தை சந்திரசேகரன் என்பது மாற்றமுடியாத, மறுக்க முடியாத உண்மை.

28. அனுஷாவுக்கு முன்னால் இருக்கின்ற பல்வேறு சவால்களில் மலையக மக்கள் முன்னணி என்ற உங்கள் தகப்பனார் உருவாக்கிய கட்சியை மீண்டும் கைப்பற்றுவது அல்லது அப்பாவின் கொள்கைப்படி முன்னெடுத்துச் செல்லவேண்டியது மிகப் பெரியது. அது சாத்தியப்படும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக… இது சவாலே அல்ல. ஏனென்றால், இப்போது அங்கு கொள்கையும் இல்லை, சேவையும் இல்லை, வியாபாரம் மட்டுமே நடக்கிறது. என் தந்தையின் கொள்கையின்படி, கட்சி செயற்பட்டிருந்தால், நிச்சயமாக மண்வெட்டி சின்னத்தில் துணிந்து களமிறங்கும் அளவுக்கு கட்சி பலமாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள் பிறரை நம்பியே சகல தேர்தல்களையும் சந்தித்து தோல்வியடைகிறார்கள். எனவே, கட்சியை என் தலைமையில் வழிநடத்துவது, எனக்கு சவாலே அல்ல.

29. மலையக மக்கள் முன்னணி என்பது உங்கள் தகப்பனார் அமரர் சந்திரசேகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில் நீங்கள் அதன் தலைமையாக வர நேர்ந்தால், அதன் பின்னர் அது உங்கள் குடும்ப சொத்தாக மாறும் நிலை வருமா?

மலையக மக்கள் முன்னணியை என் தந்தை ஒரு போதும் குடும்ப சொத்தாக்கவில்லையே. இது கொள்கை சொத்து. தனது அரசியலில் என் தந்தை எங்கள் குடும்பத்தவர்கள் எவரையுமே தலையீடு செய்யவிடவில்லை. அவரது கொள்கை மட்டுமே அவரது செயற்பாடாக இருந்தது.
அவரது கொள்கைகளை நேர்மையாக புரிந்து கொள்பவர்களாலேயே கட்சியை அவரது வழியில் வழிநடத்த முடியும். இதற்கு இளைய தலைமுறையினர் தயாராக உள்ளார்கள்.

30. மலையக மக்கள் முன்னணி எதிர்பாராத நேரத்தில் அதன் ஸ்தாபக தலைவரை இழந்திருந்த நேரம், அதற்கு தலைமையேற்ற அவரின் துணைவியார் ஏன் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்கவில்லை? அவர் விட்ட பிழை என்ன?
அந்த தலைமைப் பதவியை ஏன் பிரிதொருவருக்கு கொடுக்கவேண்டி ஏற்பட்டது? உங்கள் தாயாரால் முன்னெடுத்துச் செல்ல முடியாத தலைமையை உங்களால் வழிநடத்த முடியும் என நினைக்கிறீர்களா?

என் தாய் விதவைக் கோலத்தில் தன் கண்ணீர் காயும் முன்னரே கட்சி தலைமையை ஏற்றார், ஏற்கச் செய்யப்பட்டார். அப்போது சிறுமிகளாக இருந்த என்னையும், என் தங்கையையும் வளர்த்து ஆளாக்கவேண்டிய பாரிய பொறுப்பு என் தாயிடமிருந்தது. ஆனால், தனக்கு வழங்கப்பட்ட கட்சி தலைமைப்பதவி தன் கணவர் வளர்த்துவிட்டவர்களாலேயே இலாவகமாக, வஞ்சகமாக பறிக்கப்படுவதை அவர் உணரவில்லை.
கட்சி தலைமையை விட்டு விலகுவதற்கான பல்முனை தாக்குதல்களை சமாளிக்கும் நிலையில், அவரது மனநிலை, குடும்பச்சுமை என்பன இடங்கொடுக்கவில்லை. யார் சொல்வது சரி, யார் பிழை என்று புரிந்துகொள்ள முடியாத பொய் முகங்களுக்கு எதிராக அவரால் ஒரு பெண்ணாக போராட முடியவில்லை. இறுதியில் வஞ்சகம் வென்றது. அவர் ஒதுக்கப்பட்டுவிட்டார்.
இதில் உண்மையான நகைச்சுவை என்னவென்றால், என் தந்தையின் கொள்கைக்கு எதிரானவரையே இக்கட்சிக்கு தலைவராக சிலர் ஏற்றுக்கொண்டுள்ளமை. இப்போதைய தலைவர் என் தந்தையின் ஆதரவாளர்களால் நிராகரிக்கப்பட்டவராவார்.

31. சுயேட்சையாக நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர், திரு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. உங்களை அவர்களோடு இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் அதனை நீங்கள் மறுத்துவிட்டதாகவும் தகவல் வந்தது. அதுபற்றி விளக்கமாக…

உண்மை. பல தரப்பினரிடமிருந்தும் அழைப்பு வந்தது. காரணம், அனுஷா என்ற பெயருக்கு பின்னாலுள்ள சந்திரசேகரன் என்ற அடையாளம். ஆனால், மண்வெட்டி சின்னம் அல்லது சுயேட்சை என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
நாம் ஒரு தேசியம், தனித்துவம் என்ற வார்த்தைகளை போட்டுவிட்டு ஏனைய கட்சிகளிடம் வாக்கு கேட்டு சரணடைவது, தன்னம்பிக்கை இழந்த செயல். நாம் நம்மை நம்பவேண்டும். அதன் பின்தான் மக்கள் எம்மை நம்புவார்கள். அவரையும் இவரையும் குறை கூறி அல்லது புகழ்ந்து வாழ்வதை விட தன்மானத்துடன் தனித்துவமாக களமிறங்குவதுதான் என் தந்தைக்கு நான் செய்யும் கைமாறு.

நேர்காணல்: ப. கணகேஸ்வரன்(கேஜி)

 

You must be logged in to post a comment Login