Interview

மக்களில் ஒருத்தியாக விரும்புகிறேன்!

By  | 

– பவதாரணி ராஜசிங்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில், இலக்கம் 6இல், வட மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் களமிறங்கும் சமூக செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர், கலைஞர்களின் நேசக்கரம், பிஸ்னஸ் உமன் என பல்வேறு துறைகளில் அடையாளம் காணப்படும் ஒரு பெண் ஆளுமையின் நேர்காணல்

1. வணக்கம்… முதற்கண் உங்களது இந்த பரபரப்பான சூழலில் மித்திரனுக்காக நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டமைக்கு நன்றி…
பல்வேறு ஆளுமைகளை கொண்டுள்ள நீங்கள் உங்களை எப்படியானவராக இந்த சமூகத்துக்கு அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள்?
சமுதாயத்தில் சாதாரண மக்களில் ஒருத்தியாக, உங்களின் உணர்வுகளை, தேவைகளை அறிந்து உணர்ந்த ஒருத்தியாக இருக்க விரும்புகிறேன்.

2. எல்லோரும் எதிர்பார்த்த நேரம் அமைதியாக இருந்தீர்கள். இன்று யாரும் எதிர்பாராத நேரம் முக்கியமான முடிவொன்றை எடுத்திருக்கிறீர்கள். அரசியலில் இறங்குவது குறித்து, உங்களது முடிவு பற்றி விளக்கமாக…
எதிர்பாராத முடிவாக இருந்தாலும், முடிவென்று வந்தபின் காலத்தின் தேவை கருதி, பெண்க ளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான கடமை எனக்கு உள்ளது என்றும் நன்றாக புரிந்துகொண்டேன். அதனால்…

3. நீங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பல்வேறு துறைகள் சார்ந்து நன்கு அறியப்பட்ட ஒருவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை சார்ந்து அறிமுகம் இருந்திருக்கும். ஆனால், அரசியல்வாதியாக உங்களை முதன்முதலில் அடையாளம் கண்டவர் யார்?
26 வருடங்களுக்கு முன் எனது மாமா (சந்திரன் மாமா) என்னை திருமணத்துக்காக பெண் கேட்கும் இடத்தில், எனது மாமனாரிடம் என்னை பற்றி கூறுகையில், ‘உனது சாம்ராஜ்யத்தை கட்டிக்காக்கும் ஒருத்தி பவதாரணி” என்று சொன்னார்.

4. இலங்கையை பொறுத்தமட்டில், சனத்தொகை விகிதப்படி தமிழ்மொழி இரண்டாம் இனமாக அழைக்கப்படுகிறது. அதனால் சிறுபான்மை இனம் என்ற அந்தஸ்தில்தான் இன்று இலங்கையில் தமிழினம் இருந்துகொண்டிருக்கும் நிலையில் ஒரு பெரும்பான்மை இனக் கட்சியோடு இணைந்து அரசியல் செய்வதன் நோக்கம் என்ன?
சிறுபான்மை, பெரும்பான்மை என்பது சனத் தொகையின் விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியையோ, மக்களையோ இன ரீதியாக அடையாளம் காண நினைப்பது தவறான ஒரு குறியீடாகும்.

5. உலக அரசியலில் முதலாவது பெண் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த நாடு இலங்கை. அத்தொடு இலங்கையில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மட்டும்தான் பெண் ஆளுமைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமராக உருவாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளதே, இது குறித்து…?
கவலைக்குரிய ஒரு விடயம்தான். ஆனால், பெண் ஆளுமைகளை இனங்கண்டு பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இணைந்து அரசியலில் செயற்படுவதையே நான் பெருமையாக கருதுகிறேன்.

6. பழைமை வாய்ந்த ஒரு கட்சிதான் ஸ்ரீரீலங்கா சுதந்திர கட்சி. ஆனால், இன்று பலமிழந்து காணப்படுகிற நிலையில் அந்தக் கட்சியின் ஊடாக அரசியலில் கால்பதிப்பது ஏன்?
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், பலம்,பலவீனம் என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. இன்று பலவீனம் என்பது நாளை எங்களாலேயே பலம் வாய்ந்ததாக மாறலாம் என்பது எனது நம்பிக்கை.

7. இலங்கை அரசியலில் பெண் ஆளுமைகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் உங்களுக்கு அந்த இடத்தை நிரப்பும் ஆணையை மக்கள் கொடுத்தால், உங்களது அரசியல் வாழ்நாளில் நீங்கள் பிரதானமாக செய்து முடிக்க திட்டமிட்டிருக்கும் விடயம் எது?
அடிப்படைத் தேவைகளுக்காக காத்திருக்கும் சமுதாயம் இருத்தலாகாது.
அபிவிருத்தி என்பது அனைத்து மக்களுக்கும் கட்டாயம் சென்றடையவேண்டிய ஒரு விடயமாகும்.
எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்க்கும், அரசை குறை கூறும் பிரஜைகளாக அல்லாமல், சிறந்த எதிர்காலத்தை தாமே உருவாக்கும் பிரஜைகளாக எம் மக்களை கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.

8. உங்களை அறிந்தவர்களுக்குத் தெரியும், நீங்கள் கால் வைத்த துறைகளில் எல்லாம் பெயரும் புகழும் வெற்றியுமே அடைந்திருக்கிறீர்கள். இந்த நிலையில் அரசியலிலும் அதே நிலை தொடரும் என நினைக்கிறீர்களா?
அரசியல் ஒரு சாக்கடை என்பதை நான் மறுக்கிறேன். இங்கு வெற்றி – தோல்வி என்பது கிடையாது. இங்கு நிகழப்போகும் எந்த முடிவும் அடுத்த படிக்கான ஆரம்பமாக கருதுகிறேன்.

9. தென்னிலங்கை மக்களுக்கு, குறிப்பாக மேல்மாகாண மக்களுக்கு பரிச்சயமான நீங்கள் வடக்கில் சென்று அரசியல் செய்வதற்கு முடிவெடுக்க காரணம் என்ன?
வடக்கு எனது பிறப்பிடம். என் தாய்வீடு. பெண்களுக்கான குரல் ஒன்று அதிகம் தேவைப்படுவது இங்கேதான்.

10. இலங்கையின் கலைத்துறையினரோடு அதிகம் நெருக்கமாக உள்ளவர் நீங்கள். சொல்லப்போனால், இந்தக் கலைத்துறையில் பலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறீர்கள். இந்நிலையில் நீங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால், கலைத்துறைக்கு, கலைஞர்களுக்கு என்ன மாதிரியான செயற்றிட்டங்களை முன்மொழிவீர்கள்?கலைத்துறையை தொழிலாகக் கொண்டவர்களுக்கு அவர்களின் தொழில்துறை பாடநெறிகள் அவசியமானது. அவை அரசினால் வழங்கப்படவேண்டும். அவர்களது கலையை தொழிலாகக் கொண்டு முயற்சிப்பவர்களுக்கு அவர்களுடைய தரத்திற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு கலைஞன் ஓய்வு ஊதியம் பெறும் நிலை இலங்கையிலும் உருவாக வேண்டும். ஏனெனில், நான் கண்ட அதிகமான கலைஞர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஆரோக்கியமாக இருந்ததில்லை. இந்நிலை இனிமேலும் நீடிக்காது. கலைஞர்கள் கௌரவமான வாழ்க்கையை வாழவேண்டும்.

11. வழமையான அரசியல்வாதியாக இல்லாமல், விதிவிலக்காக உங்களிடம் இருந்து எது ஒன்றை நாங்கள் எதிர்பார்க்கலாம்?
எனக்கு முன் செல்லும் அரசியல்வாதிகளை புறம்கூறும், அவதூறு செய்யும் அரசியலை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, எனது பாதையில், எனது சிந்தனையில் மட்டுமே கவனம் செலுத்தி, மக்களுக்கு சேவை புரியும் ஓர் அரசியல்வாதியாக செயற்படுவதே எனது முடிவாகும்.

12. வடக்கில் இருக்கும் பல்வேறு தமிழ் கட்சிகளோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருக்கலாமே?
அழைப்பு வரவில்லை.

13. மனிதர்கள் மீது அதிக அன்பு, நம்பிக்கை, ஈவிரக்கம் போன்ற பண்புகளை கொண்டுள்ள உங்களால் அரசியலில் உலாவரும் மனிதர்களை சமாளிக்க முடியுமா?
அது கஷ்டமான விடயம்தான். ஏனெனில், அரசியலை இதுவரை யாரும் சரியாக புரிந்துகொண்டதில்லை. அரசியல் ஒரு கழிவு என்பதிலிருந்து, அரசியல் ஒரு கலை என்பதாக மாறவேண்டும். கலை என்பது அழகானது. தெய்வீகமானது.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்ந்து செயற்படவேண்டும்.

14. உங்களின் அரசியல் ஆசான் யார்?
எனது ஏழாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் திருமதி கணேசன்.

15. அரசியல் குறித்து, குறிப்பாக இலங்கை அரசியல் குறித்து உங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
இலங்கைக்குரிய தனித்துவம் அரசியலில் தொலைந்திருக்கிறது. இலங்கை என்பது உதவும் மனப்பான்மை, அன்பு, கருணை போன்ற குணங்களை உடையது. இந்த தனித்துவம் அரசியலில் மட்டும் தொலைந்திருக்கிறது. இதை மீள கொண்டு வரும்போது, அது மிகவும் அழகும் ஆரோக்கியமானதுமாக விளங்கும்.

16. உங்களது தேர்தல் தொகுதியில் உங்களது வெற்றி குறித்து உங்களுக்கு எத்தனை சதவிகிதம் நம்பிக்கை உள்ளது?
100வீதம்

17. நீங்கள் போட்டியிடும் தேர்தல் தொகுதியில் இருக்கும் மக்கள் உங்களை எந்தளவில் வரவேற்கிறார்கள்? ஏற்றுக்கொள்கிறார்கள்?
அரசியலில் புதுவரவுக்கான வரவேற்பு எப்பொழுதும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. அந்த மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது கேள்விகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை கடந்து, ஒரு பெண்ணாக, தாயாக, சகோதரியாக, குடும்பமாக கருதி, நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

18. உங்களது அரசியல் முடிவு குறித்து உங்களது குடும்பத்தார் எந்தளவுக்கு ஆர்வமாகவும் ஆதரவாகவும் இருக்கின்றனர்?
குடும்பம் என்ற ரீதியில் அவர்களது உணர்வுகள் எதிர்மறையாக இருந்தாலும், என்னுடைய தெரிவுக்கு ஆதரவு தருகிறார்கள்.

19. ஏனைய துறைகளைக் காட்டிலும், அரசியல் துறையில் ஆண்கள் அளவுக்கு பெண்களால் சாதிக்கமுடியுமா?
அரசியலுக்கு ஆண் – பெண் என்ற அடையாளம் இல்லை. சாதிக்க தெரிந்த எல்லோரும் சாதனையாளர்கள்.

20. அரசியல், தேர்தல் பிரச்சாரம் என இந்த புது அனுபவம் எப்படி இருக்கிறது?
உண்மையைச் சொல்லவேண்டுமானால், கோவில் திருவிழா போல் கொண்டாட்டமாக இருக்கிறது. எமது மக்களை சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

21. இந்தத் தேர்தலின் முடிவுகள் எந்த விதமாக கிடைத்தாலும் தொடர்ந்தும் அரசியலில் இயங்கும் நோக்கம் உள்ளதா?
நிச்சயமாக, ஆம்.

22. அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர், தயாரிப்பாளர், வெற்றிகரமான துறைசார் பிஸ்னஸ் பெண் ஆளுமை… இதில் எது உங்களுக்கு மிகவும் பிடித்த துறையாக உள்ளது?
ஒரு தாய்க்கு நான்கு பிள்ளைகள்… இதில் எந்த பிள்ளையை சிறப்பாகக் கருதமுடியும்.

23. அரசியல் வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கக் கிடைத்தால் இதுவரையில் நீங்கள் கால் பதித்துள்ள துறைகளிலும் பயணிப்பீர்களா, இல்லை, தனியே அரசியல்தானா?
இந்த அனைத்துத் துறைகளும் நான் விரும்பி தெரிவுசெய்து கட்டியெழுப்பியவை. எல்லா பாதைகளிலும் பயணிப்பேன். மக்கள் சேவை ஒன்றே நோக்கமாக இருக்கும். திசை ஒன்று, பாதைகள் வெவ்வேறு.

24. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நீங்கள் இணைந்துகொண்டமைக்கு ஒரு தமிழராக, ஒரு பெண்ணாக உங்களுக்கு கிடைத்த ஆதரவு, வரவேற்பு எப்படி இருந்தது?
மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலும், ஒரு தமிழ் பெண்ணாக சாதகமான வரவேற்பை பெற்றது திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

25. இறுதியாக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதி மக்கள், உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
தேர்தல் காலங்களில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட, தொடர்ச்சியான ஒரு முன்னேற்றத்துக்காக அவர்கள் என்னை தெரிவு செய்யவேண்டும்.
உங்கள் வெற்றிக்காக மித்திரன் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது!

-ப. கணகேஸ்வரன்(கேஜி)

You must be logged in to post a comment Login