Antharangam

மனம்தான் மருந்து!

By  | 

கேள்வி:

எனக்கு வயது 19. எனது பாடசாலைக் காலத்தில் நான் ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்தேன். நண்பர்களான எம் உறவு, காதலர்கள் எனும் நிலையை எட்டியது. இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்து வந்தோம். உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக அவர் என்னுடன் கதைப்பதை நிறுத்திவிட்டார். குறுஞ்செய்திகூட அனுப்புவதில்லை. நான் பரீட்சைக்காக ஒழுங்காகப் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கதைக்காமல் இருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், பரீட்சைக்குப் பிறகும் என்னுடன் கதைப்பதைத் தவிர்த்துவிட்டார். ஃபேஸ்புக்கிலும் என்னை அன்ஃப்ரெண்ட்செய்துவிட்டார். காலங்கடந்தால் அவரை மறந்துவிடலாம் என்று முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. எனது மனக்காயத்துக்கு மருந்து வேண்டும்.

பதில்:

காயம் இருக்கும் இடத்தில் தான் மருந்தும் இருக்கிறது. உங்கள் மனம்தான் உங்களுக்கான மருந்து.

அறிவுரைகளை எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அதைக் கடைப்பிடிப்பவருக்குத்தான் தெரியும் அதன் வலியும் வேதனையும். என்றாலும், உங்களது நீண்ட நெடும் வாழ்க்கைப் பயணத்தை சந்தோஷமாகக் கொண்டுசெல்லவேண்டும் எனின், நீங்கள் அந்த வலியையும் வேதனையையும் அனுபவித்தே ஆகவேண்டும்.

காதலிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால், காதலித்தவர்களையே கல்யாணம் செய்துகொள்பவர்கள் மிக மிகக் குறைவென்றாகிவிட்டது. காதலில் பிரிவென்பது இப்போதெல்லாம் அன்றாடச் செய்தி. காதலுக்கு இருந்த மரியாதையும், காதல் மீதான நம்பிக்கையும் முற்று முழுதாகத் தகர்ந்துவிட்டிருக்கிறதென்றே சொல்லலாம். பார்த்த மாத்திரத்தில் ஈர்த்த காதல், நாட்கள் செல்லச் செல்ல வெறுத்துக் கசந்துவிடுகிறது. சின்னச் சின்னக் காரணங்களுக்காகவும், காரணங்களே இல்லாமலும்கூடக் காதல் தகர்ந்துவிடுகிறது.

காதல் கசந்துபோவதற்கு மிக முக்கியமான காரணம், ஒப்பிட்டுப் பார்ப்பது. பரஸ்பரம் தம் இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மட்டுமல்லாது, வேறு யாருடனும் கூட ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள் இன்றைய காதலர்கள். இதனால்தான் காதலில் பிரிவுகள் நிரந்தரமாகிப் போகின்றன.

ஆனால், உங்கள் பிரச்சினை சற்று வேறு மாதிரியானது. அதாவது, உங்கள் காதல், பாடசாலைக் காதல். மாணவப் பருவத்தில் வந்த காதல். நீங்கள் எத்தனைதான் வாதாடினாலும், உங்களது உறவுக்குக் காதல் என்று பெயரிட முடியாது. அது சர்வ நிச்சயமாக இனக்கவர்ச்சிதான். இது ஒரு வித போதை. தான் காதலிப்பதும், தான் காதலிக்கப்படுவதும் பாடசாலை நாட்களில் சக மாணவர்களிடையே மரியாதைக்குரிய அல்லது ஆச்சரியத்துக்குரிய பார்வையைப் பெற்றுத் தருகிறது. பாடசாலை நாட்கள் முடிந்ததும், அந்த போதை தெளிந்துவிடுகிறது. மிகச் சிலர், மனசாட்சிக்குப் பயந்து, அந்தக் காதலைக் கைகூடச் செய்துகொள்கிறார்கள். இன்னும் சிலர், பாடசாலை நாட்கள் முடிந்ததும், அந்த போதை தெளிய முன்னரே திருமணத்தைச் செய்துகொண்டுவிடுகிறார்கள். இவ்வாறானவர்கள் மட்டும்தான் பாடசாலைக் காதலில் வெற்றியடைகிறார்கள். ஆனால், காதலிப்பவர்களைத் திருமணம் செய்துகொள்வதுதான் வெற்றி என்பது தவறான அர்த்தமே!

உங்களது கவலைக்குக் காரணம், உங்கள் காதலருக்கு உங்கள் மீதான காதல் போதை தெளிந்துவிட்டிருப்பதே. இப்போது அவருக்கு, அவரது ஒப்பீட்டின் அடிப்படையில், உங்களை விட வேறு எவரேனும் சிறந்தவராகத் தெரிந்திருக்கலாம். அதனால், உங்களை விலக்கத் துணிந்திருக்கலாம். எப்படியோ, உங்களை விரும்பாத ஒருவர் உங்களை விட்டு விலகிவிட்டார். அந்தளவில் சந்தோஷப்படுங்கள்.

உங்களது கவலைகளுக்கு கலைகளே மருந்து. உங்களது கவனத்தை, கலையின் பால் திசைதிருப்புங்கள். சிறு வயது முதல் உங்களுக்கென்ற ஒரு தனித்திறமை இருக்கும். அதை மீண்டும் வெளிக்கொணருங்கள். ஓவியமோ, இசையோ, நடனமோ, கவிதையோ, கதையோ – ஏதோ ஒன்று இருக்கும். நிச்சயமாக, அந்தக் கலையின் வழி, உங்கள் கவலை கலைந்தோடிவிடும். மனம் இறகைப் போல் இலேசாகிவிடும். உங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

You must be logged in to post a comment Login