Articles

மயக்க உலகில் சஞ்சரிக்கும் பிள்ளைகள்!

By  | 

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுள் மிக பாரதூரமானது, படிக்கும் பருவத்திலேயே போதைக்கு அடிமையாவதாகும்.

பாடசாலை சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வெளிவரவேண்டிய பல மாணவர்கள் போதைக்கு அடிமையாகிவரும் பரிதாபகரமான செயல்கள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

மாணவர்கள் இளமைப்பருவ உல்லாசங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றார்களே தவிர, அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விபரீதங்கள் பற்றி சிந்திப்பது கிடையாது. இதன் விளைவாகவே போதைக்கு ஆளாகின்றார்கள்.

திடகாத்திரமாக, ஆரோக்கியமாக, ஆளுமை உடையவர்களாக வளர்வதற்கு போதை மற்றும் தீய நடத்தைகள் தடையாகவுள்ளன என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.

எந்தவொன்றையும் அனுபவித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகிவிடுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமே வீதி விபத்துக்கள். மிதமிஞ்சிய வேகத்தில் வண்டி ஓட்டும் சுகமே தனிரகம் என்று கூறிய பலர் இன்று இவ்வுலகில் இல்லை.

இப்படியெல்லாம் அவர்கள் செய்வதற்கு உந்துசக்தியாக போதையும் இருக்கிறது என்பதும் நாம் அறிந்துவரும் விடயமே.

போதையானது தன்னிலை மறக்கச் செய்வது, உடல் – உள பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது. இதை பயன்படுத்தும் ஒருவன் தன்னறிவை இழக்கின்றான், மயங்குகின்றான், உடல் நிலை பலவீனமடைகிறது, உளம் கெட்டுவிடுகின்றது, தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் தள்ளாடி விழுகின்றான். அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொன்றையும் அறியாமல் மயக்க உலகில் சஞ்சரிக்கின்றான்.

போதை சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரன் போன்றது.

அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது கூட இந்த போதையே. போதை பாவனை, போதை பொருட்களை கடத்துதல், விற்பனை செய்தல் என்பவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும் கூட இதன் பயன்பாடு குறைவதாக இல்லை.

புதிய தொழில்நுட்பத்தையும் புதிய யுக்திகளையும் பயன்படுத்தி, போதை கடத்தல்கள் எங்கும் நடந்த வண்ணமே இருக்கின்றது.

போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களை சார்ந்திருப்போரையும் சீரழிக்கின்றனர். சிலர் போதை பொருள் இல்லாமல் வாழவே முடியாத அளவுக்கு அடிமையாகி இருப்பதாக, கடந்த காலத்தில் கொரோனாவால் நாடே முடக்கப்பட்டிருந்தபோது தெரியவந்தது.

போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வீட்டுச்சூழலும் காரணமாகிறது. தந்தை சிகரெட் பிடிப்பவராக இருந்தால், அவர் சிகரெட் வாங்க பிள்ளையிடம் பணம் கொடுத்து அனுப்புகின்றார். தந்தையுடைய புகைத்தல் ஸ்டைலில் ஈர்க்கப்படும் பிள்ளைகள், திருட்டுத்தனமாக புகைக்க ஆரம்பிக்கிறார்கள்.

இன்னும் சில வீடுகளில் விருந்துபசார வேளைகளில் மது உட்சேர்க்கப்படுகிறது. அதைக் கண்டு சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த ஆரம்பிக்கின்றனர். வீட்டுச்சூழலில் போதை பொருட்களை பயன்படுத்த பழகும் பிள்ளைகள் நாளடைவில் சமூகத்தில் பகிரங்கமாக போதை பாவனையில் ஈடுபடுகின்றனர்.

சில வேளைகளில் வீட்டுச்சூழல் போதை பழக்கத்தை தூண்டாமல், சமூகச்சூழலின் தூண்டுதல் காரணமாக அப்பழக்கத்தை  பற்றிக்கொண்டவர்களும் உள்ளனர்.

பாடசாலை, பல்கலைக்கழகம், தொழில் புரியும் இடம் என்பவற்றில் புதிது புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் நண்பர்களில் எவரேனும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பாராயின், அந்த ஒருவரின் பழக்கம் சக நண்பர்களிடத்திலும் தொற்றிக்கொள்ளக்கூடும்.

குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர் மற்றும் உறவினர் சமமாக அன்பு காட்டவேண்டும். தாழ்வு மனப்பான்மையை வளரவிடாமல் காக்கவேண்டும்.

பெற்றோரிடமிருந்து உரிய அன்பு கிடைக்காத பிள்ளைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலையை போக்கவும் போதைப் பொருட்களை கையிலெடுக்கின்றனர்.

அதுபோல் பெற்றோரிடையே முரண்பாடு ஏற்பட்ட பின் தந்தை அல்லது தாய் மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளை பிள்ளைகள் கண்டால், பிரச்சினைக்கு போதைதான் தீர்வு என்கிற முடிவுக்கும் வந்துவிடுவர்.

அதுபோல் பெற்றோர் பிரிந்து வாழ்பவர்களாயின், பிள்ளைகள் விரக்தி காரணமாகவும் போதைக்கு ஆளாகின்றனர். தீய செயல்களில் ஈடுபடவும் முயல்கிறார்கள்.

பரீட்சையில் தோல்வி, படிக்க முடியாத பிரச்சினை என்று வரும்போதும்கூட போட்டி நிறைந்த சூழலுக்கு முகங்கொடுக்க முடியாமல், இறுதியில் போதையிடம் சரணடைந்துவிடுகின்றனர், இன்றைய பல மாணவர்கள்.

மேற்கூறப்பட்ட எல்லாவற்றுக்கும் மேலே போதைப் பழக்கத்துக்கு மிக முக்கிய பங்களிப்பு செய்துகொண்டிருக்கிறது, இன்றைய சினிமா.

குடும்ப தகராறு, காதல் தோல்வி, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, கோபம், சந்தோஷம் போன்ற காட்சிகளில் கதாநாயகன் முதலில் நாடுவது சிகரெட் அல்லது மதுவையே. கதாநாயகனின் ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட பலர், இன்று தங்கள் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் புகையிலும் குடியிலும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ பேர் மாத வருமானத்தில் ஒரு பங்கை சிகரெட்டுக்கும் மதுவுக்கும் என பட்ஜட் போட்டு ஒதுக்குகின்றனர்…  தங்கள் உயிரை பணயம் வைக்க தாங்களே பட்ஜட் போட்டுக்கொள்ளும் அவல நிலையை உணராதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

இப்படி செய்வதால் நமக்கு என்ன பயன் என்பதை ஒரு நிமிடம் யோசித்தாலே போதும்… அவர்கள் போதை பழக்கத்தை புதைத்துவிடலாம்.

மாணவர்கள் மற்றும் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஒற்றுமை சீர்குலைகின்றன. அவநம்பிக்கை தோன்றுகின்றது. முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

வீணான செலவுகளால் வறுமை ஏற்படுகின்றது. குடும்ப மானம், மரியாதை காற்றில் பறக்கின்றது. கௌரவம் இழந்தவர்களாக சமூகத்தின் முன் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. பல பிள்ளைகளுடைய எதிர்கால கனவுகள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்ந்து மடிந்து போகும் நிலையை இன்றைய பல மாணவர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றி விரிவாக அறிந்திருப்பது, இன்றைய காலத்தின் தேவையாகும்.

பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார்? எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் நட்பு எத்தகையது? நண்பர்களுடன் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள்? அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் எவை? இவற்றையெல்லாம் பெற்றோர்கள் விபரமாக அறிந்திருக்கவேண்டும்.

பிள்ளைகளின் மீது அதிக அன்பு செலுத்தி ஏமாந்து போகாமலும், அதிக கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்கிவிடாமலும், நடுநிலையுடன் நடந்து பிள்ளைகளின் வாழ்வை சீர்செய்ய முனைய வேண்டும்.

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அதனை சரியாக தேடிக்கொள்ளவே வழி காணவேண்டும்.

-ஏ.எல்.இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

You must be logged in to post a comment Login