Stories

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மினோரு

By  | 

மனிதர்கள் தவறு செய்யும்போது அவர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால், மனதறிந்து எந்தத் தவறும் செய்ய முடியாத குதிரை ஒன்றுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கதையும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதுவும் இருபதாம் நூற்றாண்டில்!


இங்கிலாந்து நாட்டை எட்வர்ட் மன்னர் ஆண்டு வந்த காலம் அது. அவர் ‘மினோரு’ என்ற குதிரையை வளர்த்து வந்தார். பல பந்தயங்களில் வெற்றி பெற்ற அந்தக் குதிரை இங்கிலாந்து நாடெங்கும் மிகப் பிரபலமாகியது.
1909ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி நடந்த உலகப் புகழ்பெற்ற ‘டெர்ப்’ குதிரைப் பந்தயத்தில் அந்தக் குதிரை முதலாவதாக வந்து, தன் மன்னருக்குப் பெருமை தேடித் தந்தது. அதுமுதல் பல போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற மினோரு, ஒரு கட்டத்துக்கு மேல் வயோதிகம் அடைந்தது.
அந்தக் குதிரைக்கு வசதிகள் நிறைந்த நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க மன்னர் விரும்பினார். இன விருத்திக்காக உயர் ஜாதிக் குதிரைகள் பராமரிக்கப்பட்டுவரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு குதிரைப் பண்ணைக்கு மன்னர் அக்குதிரையை அனுப்பி வைத்தார்.
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. நாட்டு மக்கள் ஏழ்மையின் கோரப் பிடியில் இருக்கும்போது, அதைப் பற்றித் துளியும் அக்கறை இன்றி பணக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், பணக்காரர்களையும் அவர்களை ஆதரித்த மன்னரையும் எதிர்த்துப் போராடினார்கள். இந்தப் புரட்சியில் மன்னரையும் பணக்காரர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் மக்கள் அணி திரண்டு கொன்றனர். அவர்கள் அனுபவித்து வந்த அத்தனையையும் அபகரித்தனர்.
மினோரு வாழ்ந்து வந்த குதிரைப் பண்ணைக்குள்ளும் அந்தப் புரட்சி மக்கள் புகுந்தனர். அப்போது மினோரு குதிரை விரட்டியடிக்கப்பட்டு காணாமல் போனது என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால், பணக்காரர்கள் போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததற்காக அந்தக் குதிரை மீது வழக்கு தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டதாக இன்னொரு கருத்து கூறுகிறது.


அந்தக் கூற்றுப்படி, உலகப் புகழ்பெற்ற மினோரு குதிரையை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள் பாமர மக்கள். அதன் தலையை வெட்டிக் கொன்று விடும்படி தண்டனை வழங்கினார் நீதிபதி. பின்னர், தாரை தப்பட்டை முழங்க… முக்கிய வீதிகள் வழியாக மினோரு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்தில் நிறைய மக்கள் கூடி இருந்தனர். மினோருவின் தலை துண்டிக்கப்பட்டபோது மக்கள் கை தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
மன்னர் மீதும் அதிகார வர்க்கத்தின் மீதும் எவ்வளவு வெறுப்பு இருந்திருந்தால் மக்கள் இப்படி நடந்து கொண்டிருப்பார்கள்!

You must be logged in to post a comment Login