Women Achievers

மரியா எனும் வால்நட்சத்திரம்!

By  | 

173 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடமுள்ள சிறிய தொலைநோக்கி மூலம் வானை உற்றுநோக்கிக் கொண்டிருந்தபோது, வாலுடன் கூடிய நட்சத்திரம் ஒன்று புதிதாகத் தெரிவதைக் கண்டுபிடித்தார் மரியா மிசெல். அது பின்னர் அவர் பெயராலேயே ‘மிஸ் மிசெல் காமட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இப்படித்தான், புகழ்பெற்ற ஹாலி, ஹையாகுட்டாகே உட்பட இன்று பார்த்துக்கொண்டிருக்கும் நியோவைஸ் வால்நட்சத்திரங்கள் எல்லாம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நமக்குத் தெரியவந்திருக்கிறது.

வானியலாளராகக் கிடைத்த புகழைக் கொண்டு அறிவியலில் பெண்கல்விக்காகப் பாடுபட்ட மரியா, தனித்துவத்துடன் ஜொலிக்கிறார். ஆணும் பெண்ணும் சம கல்வியைப் பெற வேண்டும் என்ற குவாக்கர் கொள்கையுடைய பெற்றோருக்குப் பிறந்தார் மரியா. அதனால் இயல்பாகவே அவருக்குக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. வானியலில் அதிக ஆர்வம் கொண்ட தந்தை, மரியாவுக்கும் ஆர்வம் இருப்பதை அறிந்துகொண்டார். தொலைநோக்கியை எப்படிக் கையாள வேண்டும், வானை எப்படி உற்று நோக்க வேண்டும், குறிப்புகளை எப்படி எழுத வேண்டும் போன்ற விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். பகலில் பள்ளிக் கல்வியையும் இரவில் அப்பாவுடன் சேர்ந்து வானியல் ஆய்வையும் மேற்கொண்டு வந்தார் மரியா.

12 வயதில் சூரிய கிரகணம் ஏற்படும் சரியான நேரத்தைக் கணக்கிட அப்பாவுக்கு உதவினார். 14 வயதில் நீண்ட தூரம் கடலில் செல்லும் மாலுமிகளுக்கு வழிகாட்டும் விதத்தில் வானியல் கணக்கீடுகளை உருவாக்கினார். 16 வயதில் படிப்பை முடித்தவுடன், பெண் குழந்தைகளுக்கான அறிவியல் மற்றும் கணிதத்தைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியை ஆரம்பித்தார். 17 வயதில் நாந்துகெட் நகரின் முதல் நூலகர் பொறுப்பையும் ஏற்றார் மரியா.

அடுத்த இருபது ஆண்டுகள் பகலில் நூலகர் வேலையும் இரவில் அப்பாவுடன் சேர்ந்து வானியல் ஆராய்ச்சியும் செய்துகொண்டிருந்தார் மரியா. 1847, ஒக்டோபர் 1 அன்று 3 அங்குல லென்ஸுடன் 46 அங்குல நீளக் குழாய் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் வானை ஆராய்ந்துகொண்டிருந்தார் மரியா. அதுவரை பார்க்காத ஒரு வான் பொருளைக் கண்டார். நட்சத்திரம் போல் அல்லாமல் அதற்கு வாலும் இருந்தது. வெறும் கண்களால் காண முடியாத அந்த வால்நட்சத்திரத்துக்கு 1847 VI என்று பெயரிட்டார். அப்பாவிடம் தன் கண்டுபிடிப்பைச் சொன்னார் மரியா. தினமும் வால்நட்சத்திரத்தின் நகர்வைக் குறிப்பெடுத்தார். 1848 ஆம் ஆண்டு அறிவியல் இதழில் தன் அப்பாவின் பெயரில் இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ஒரு மாதத்துக்குப் பிறகு வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை பற்றிய கணக்கீடுகளுடன் தன்னுடைய பெயரிலேயே கண்டுபிடிப்பை வெளியிட்டார் மரியா. உலகமே வியந்தது. இந்த வால்நட்சத்திரத்துக்கு, ‘மிஸ் மிசெல் காமட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதன் மூலம் வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் முதல் பெண் தொழில்முறை வானியலாளர் என்ற சிறப்பைப் பெற்றார். வால்நட்சத்திரங்களைக் கண்டுபிடித்த உலகின் மூன்றாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார் மரியா.

டென்மார்க் அரசர் நான்காம் ஃப்ரெட்ரிக், மரியாவுக்குத் தங்கப் பதக்கம் கொடுத்து கௌரவித்தார். உலகின் பல பகுதிகளுக்கும் மரியாவின் புகழ் பரவியது. அமெரிக்காவின் கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு மரியாவின் பெயர் சூட்டப்பட்டது. 1850 ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியல் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1856 ஆம் ஆண்டு உலகின் பல நாடுகளுக்கும் சென்று, வானியியலாளர்களைச் சந்தித்தார் மரியா.

1865 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஸர் கல்லூரியின் வானியல் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றார் மரியா. விரைவிலேயே வானியல் ஆய்வகத்தின் இயக்குநர் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. இவரிடம் படித்த மாணவர்கள் அறிவியலிலும் கணிதத்திலும் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களைவிடச் சிறந்தவர்களாக இருந்தனர். பெண்களை அறிவியல் துறைக்குக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டினார். அந்தக் காலத்தில் பெண்ணுரிமைகளுக்காகப் போராடியவர்களைக் கல்லூரிக்கு அழைத்து, மாணவியரிடம் கலந்துரையாட வைத்தார். பெண்களுக்கான வாக்குரிமைப் போராட்டங்களிலும் பங்கேற்றார்.

பெண்ணுரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த மரியாவுக்கு, அவரது கல்லூரி சக ஆண் பேராசிரியர்களைவிடக் குறைவான ஊதியத்தை வழங்கியது தெரியவந்தது. சமமான ஊதியம் கேட்டுப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் மரியா.

“எந்தப் பெண்ணும் நான் பெண் என்பதில் பெருமிதம் கொள்ள விரும்புவதில்லை. ஒரு பெண் என்ற பெருமிதத்தைவிடச் சிறப்பு வேறென்ன இருக்கிறது?” என்று கேட்ட மரியா மிசெல், 70 வயது வரை அறிவியலிலும் பெண்கள் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தினார். பெண்களுக்கு அறிவியல் கல்வி கிடைக்க வழிசெய்த மரியா மிசெல், மறைந்து போகும் வால்நட்சத்திரமாக அல்லாமல், என்றென்றும் ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

You must be logged in to post a comment Login