Antharangam

மறுபடியும்…!

By  | 

கேள்வி:

நான் 42 வயதுப் பெண். கணவருக்கு 46 வயது. மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில், என் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. திருமணமான ஒரு மாதத்துக்குள் இது எனக்குத் தெரியவந்தது. பெரும்பாடு பட்டுத்தான் அந்தத் தொடர்பைத் துண்டித்தேன். அதன் பிறகு நல்ல கணவராகத்தான் இத்தனை நாட்கள் இருந்து வந்தார். கடந்த ஒரு சில மாதங்களாக, இன்னொரு பெண்ணுக்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டேன். ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மை என்பதையும் உறுதிசெய்துகொண்டேன். பிள்ளைகள் மூவரும் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் நிலையில் இவர் மீண்டும் சேற்றுக்குள் இறங்கிவிட்டார். இவரை எப்படிக் கரையேற்றுவது?

 

பதில்:

ஏற்கனவே கைகொடுத்துக் கரையேற்றிவிட்டவர்தானே நீங்கள்? உங்களுக்குத் தெரியாததா?

திருமணமான புது மனைவியோ, கால் நூற்றாண்டு கூடி வாழ்ந்த மனைவியோ… கணவனின் போக்குகளைக் கண்டிப்பதற்குத் தப்பவும் கூடாது, தவறவும் கூடாது.

பெண்களின் தாம்பத்திய வாழ்க்கையின் ஆயுள், ஆண்களின் தாம்பத்திய வாழ்க்கையின் ஆயுளுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். அதற்காக, மனைவிக்கு அதில் ஈடுபாடு இல்லை என்பதைக் காரணம் காட்டி, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது எவ்விதத்திலும் நியாயமாகாது.

இன்னும் சொல்லப்போனால், நாற்பது வயதுக்கு மேல் உடல் இச்சைகளையும் உடல் மீது உள்ள இச்சைகளையும் ஆண்கள் குறைத்துக்கொள்ளப் பழக வேண்டும். மனம் போன போக்கில் திரியக்கூடாது.

இப்போது நீங்கள் குடும்ப வாழ்வில் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளவர். நீங்கள் தனியாக அமர்ந்து சற்று யோசித்தாலே உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் வழியும் வலிமையும் உங்களுக்குக் கிடைக்கும்.

பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். அந்தப் பெண் பற்றி உறுதியாகத் தெரியவந்தால், நேரே அவரின் இருப்பிடத்துக்கே சென்று நியாயம் கேளுங்கள். தனது சபலம் தனது குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று அவருக்கு எப்போது உறைக்கிறதோ அப்போதே அவர் அந்த உறவைக் கைவிடுவார்.

உறைக்கும்படி செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

You must be logged in to post a comment Login